கடந்த சனிக்கிழமை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு பிரேம்ராஜ்
தனது 4-வது பெண் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு அங்கு வந்து செல்பவர்களிடம்
விற்க முயற்சி செய்தபோது காவல் துறையிடம் பிடிபட்டார். எழும்பூர் போலீஸார்
அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் இதற்கு முன்பே தன்னுடைய 2
ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை மொத்தம் ரூ. 1.30 லட்சத்துக்கு
விற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பிரேம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெண் குழந்தை
அவரது மனைவி மஞ்சுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. தற்போது தாயும்,
குழந்தையும் பெரம்பூரில் பாது காப்பு இல்லம் ஒன்றில் அரசு கண்காணிப்பில்
இருந்து வருகின் றனர்.
கணவர் பிரேம்ராஜ் குறித்தும் குழந்தைகளை விற்ற சம்பவங்கள் குறித்தும் ‘தி இந்து’விடம் மனம் திறந்தார் மஞ்சு.
“கடந்த 2007-ம் ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடைபெற் றது. அப்போது எனக்கு
வயது 16 மட்டுமே. முதலில் வாடகை வீட்டில் இருந்தோம். பின்னர்
வில்லிவாக்கத்தில் உள்ள அம்மன் கோயில் அருகே இருக்கும் பாலத்தின் அடியில்
பிளக்ஸ் பேனர் கூடாரம் அமைத்து அதில் தங்கினோம்” என்றார் மஞ்சு.
மேற்கூரை எதுவும் இல்லாமல் நடைபாதையிலேயே திருமண வாழ்வில் பாதிக்கும் மேல்
கழித்திருக்கிறார்கள் இவர்கள். திருமணமான அடுத்த வருடமே மஞ்சுவுக்கு ஆண்
குழந்தை பிறந்தது.
“முதல் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் அவசரச்
சிகிச்சை பிரிவில் குழந்தை இருக்க வேண்டிய சூழ்நிலை. அந்தச் சமயம் வேறு ஒரு
தம்பதி பல ஆண்டுகளாக குழந்தை இல் லாமல் இருக்கிறார்கள் என்று கூறி
என்னுடைய கணவர் பிரேம்ராஜ் முதல் குழந்தையை அவர்களிடம் விற்றுவிட்டார்.
அப்புறம் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தை 10 நாள் மட்டும்தான் என்னுடன்
இருந்தது அதையும் விற்றுவிட்டார். மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை பிறந்து 4
நாட்கள்தான் இருக்கும் அதற்கு முழுமையாகத் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு
குழந்தையை எடுத்துச் சென்று விட்டார்” என்றார்.
திருமணமான முதல் நாள் தொடங்கி இரவுகளில் பல கொடுமைகளை கணவரிடம்
அனுபவித்திருக்கிறார் மஞ்சு. “தினமும் அடி விழும். நான் குளத்து வேலை
செய்து சம்பாதிக்கும் 100, 200 ரூபாயையும் குடிக்க பிடுங்கிச்
சென்றுவிடுவார்” என்று மஞ்சு சொல்லும்போது இப்போதும் அவருக்கு குரல்
உடைகிறது.
வீடு இல்லாத நிலையில் மஞ்சுவை வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து தங்க
வைத்திருக்கிறார் பிரேம்ராஜ். மஞ்சு எப்போதாவது குழந்தை பெற்றுத்தர
முடியாது என்று சொன்னால் அன்று அவருக்கு கடுமையான அடி விழும். “அவருக்கு
நான் விக்க றதுக்கு குழந்தை பெத்து தரும் இயந்திரமாக இருந்தேன். குழந்தையை
விக்கக் கூடாதுன்னு சண்டையெல்லாம் போட்டிருக்கேன். என்னுடைய வாழ்க்கைதான்
இப்படி ஆகிடுச்சு என்னுடைய குழந்தைகளாவது வேறு ஒரு குடும்பத்துல சந்தோ ஷமா
வளரும்னு சமாதானப் படுத்திக்குவேன்” என்கிறார் மஞ்சு.
“இப்போ மீட்கப்பட்ட நான்காவது குழந்தை பற்றி நிறைய கனவுகள் இருக்கின்றன.
அவளுக்கு நல்லா தலைவாரி, பூச்சூடி, அழகா சட்டைபோட்டு விட வேண்டும். இந்தப்
புள்ள மட்டும்தான் தற்போது எனக்கு இருக்கிற ஒரே சொந்தம்” என்கிறார் அவர்.
“பிரேம்ராஜ் போன்ற நபர்கள் இறுதிவரை சிறையிலேயே இருக்க வேண்டும்;
இல்லாவிட்டால் பல பெண்களது வாழ்க்கை பாழாய் போகும்” என்றும் தெளிவாக
பேசுகிறார் மஞ்சு.
''கணவன்தான் எல்லாம் என்று கண்மூடித்தனமாக நம்பி மஞ்சு போன்ற சில பெண்கள்
தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். பல கொடுமைகளை அனுபவித்த
காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க
முன்வராமல் ஜடம் போல் இருக்க வாய்ப்புள்ளது” என்று மனநல மருத்துவர் ஷாலினி
கூறினார்.
‘விற்கப்பட்ட 3 குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன’
பிரேம்ராஜ் விற்ற 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பற்றி விவரம்
சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகள் யாரிடம் இருக்கின்றன என்ற தகவல்
கிடைத்துள்ளது. மேலும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பது
தொடர்பாக காவல் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறை ஆகியவை சார்பாக 2 பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அளிக்கும் தகவலின்
அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரி
ஒருவர் கூறினார். tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக