புதன், 4 ஜூன், 2014

பத்திரிகைகளுக்கு கலைஞர் விடுத்த கோரிக்கையும், எச்சரிக்கையும்!

திமுக தலைவர் கலைஞரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.  இதை முன்னிட்டு  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது.  திமுக பிரமுகர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் திரண்டு வந்திருந்து வாழ்த்தினர்.திமுக தலைவர் கலைஞர் பேசியபோது, ’’ஒரு இயக்கத்தை நசுக்கிவிடவேண்டும் என்று எண்ணுகிற எதிர் தரப்புக்கு இன்றைய பத்திரிகை உலகம் இரையாகிவிடுவது நியாயமா? இந்த பிறந்தநாள் விழா மூலமாக பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.  நாம் ஜனநாயக ரீதியிலே பாடுபடுகின்றவர்கள்.


உங்களுக்கு ஒன்று என்றால், உங்களுக்கு ஒரு தீங்கு என்றால், பத்திரிகைகள் உரிமை பறிக்க ப்படுகிறது என்றால், அதை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களும், தொண்டர்களும். 
நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல.  திமுக எதிர்காலத்திலே பத்திரிகை உலகத்தை தூக்கிவிடக்கூடிய, பத்திரிகை உலகத்தை முன்னேற்றக்கூடிய ஒரு இயக்கம்தான் என்ற அந்த எண்ணத்தோடு, எதிர்பார்ப்போடு, பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பை தரவேண்டும்.  
நாங்கள் தவறு செய்தால், ஆட்சியிலே இருக்கும்போது தவறு செய்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது தவறு செய்தாலும், எடுத்துச்சொல்லுகின்ற கொள்கையிலே தவறு இருந்தாலும், நாங்கள் கடந்து வந்த பாதையிலே தவறு இருந்தாலும், எங்களுக்கு சொல்ல வேண்டிய முறையிலே சொல்லுங்கள்.  எங்களை திருத்துவதன் மூலம், நாங்கள் திருந்துவதன் மூலம் நாம் இருசாராரும் சேர்ந்து நாட்டு மக்களிடையே விதைக்க வேண்டிய ஜனநாயகத்தை விதைக்காமல் இருந்துவிடக் கூடாது.
பத்திரிகைகளால் திராவிட முன்னேற்றக்கழக்தை அழித்துவிடுவார்கள் என்ற பயத்தில், நான் விடுக்கும் வேண்டுகோள் அல்ல இது.  வீணாக நம் நேசத்தை, நம் நட்பை, நம் உறவை குழைப் பதற்காக நடைபெறுகின்ற காரியங்களில் நீங்களும் சேர்ந்து, செய்தால் எதிர்காலத்தில் உங்களை இப்போது காப்பாற்ற நினைப்பது போல அப்போது நினைக்க முடியாத நிலை தோன்றும். அப்படி தோன்றுவது நல்லதல்ல.  உங்களுக்கு மட்டும் நல்லதல்ல என்று சொல்லவில்லை நாட்டுகே நல்லதல்ல.  பத்திரிகை சுதந்திரத்திற்கே நல்லதல்ல.  
பயந்துபோய் கெஞ்சி கேட்டுக்கொள்வதாக நினைத்துக்கொள்ளக்கூடாது.  ஒரு கருத்திற்கு எதிர்கருத்து சொல்ல உங்கள் பத்திரிகையிலே இடம் கொடுக்க வேண்டும் என்றுதான், நானும் ஒரு பத்திரி கையாளன் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்தார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: