வெள்ளி, 12 ஏப்ரல், 2013

திரிணாமுல் CPM தொண்டர்கள் மோதல் மே.வங்கம் பதட்டம்


டெல்லியில் திரிணாமுல்
காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது சிபிஎம்
கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவுடன் வந்திருந்தார். அப்போது அவரை இந்திய மாணவர் சங்கத்தினர் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பினர். அமித் மித்ரா தாக்கப்பட்டார். காவல்துறையினர் மம்தாவை காப்பாற்றினர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் இறங்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. பல அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தடுக்க வந்த கம்யூனிஸ்ட் தொண்டர்களும் தாக்கப்பட்டனர். சில இடங்களில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.


சிலிகுரியில் திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இந்த மோதலில் 30 பேர் காயமடைந்தனர். 52 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொல்கத்தாவில் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த ஆய்வகத்துக்குள் நுழைந்து பரிசோதனை கருவிகளை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த மாணவ, மாணவிகள் மிரட்டப்பட்டனர். சில மாணவர்களுக்கு அடி விழுந்தது. இதனைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

பிரசிடென்சி பல்கலைக்கழத்தில் தாக்குதல் நடத்தவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் மாணவர் சங்கம் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஒ பிரைன் தெரிவித்துள்ளார்.

டார்ஜிலிங் பகுதியில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் அசோக் பட்டாச்சாரியா மற்றும் ஜிபேஷ் சர்கார் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மேற்குவங்க மாநிலம் முழுக்க பதற்றம் நிலவுகிறது tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: