சனி, 13 ஏப்ரல், 2013

மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்! ஐக்கிய ஜனதா தளம்

புதுடில்லி: வரவிருக்கும் பொது தேர்தலில் நரேந்திரமோடியை பிரதமர்
வேட்பாளராக ஏற்க மாட்டோம் என பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி அறிவித்துள்ளது. இதனால் மோடி பிரதமர் வேட்பாளர் ஆவதில் முதல் சிக்கல் துவங்கியிருக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகள் முக்கியம் என கருதும் பட்சத்தில் அத்வானியே பிரதமர் வேட்பாளராக அங்கீகாரம் பெறுவார் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. பேரம் பேச மாட்டோம்:
பல ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் நடந்தது. கூட்டத்தில் 3 வது முறையாக சரத்யாதவ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்ட முடிவிற்கு பின்னர் கட்சியின் பொது செயலர் தியாகி நிருபர்களிடம் பேசினார். அவர்கள் கூறியதாவது: பா.ஜ.,வை பொறுத்த வரை நண்பராகத்தான் இருக்கிறோம். பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் நாங்கள் பேரம் பேச மாட்டோம். பா.ஜ.,வை நாங்கள் நிர்பந்திக்கவில்லை. பா.ஜ., கூட்டணி கட்சிகளை சரியாக மதிப்பதில்லை. பல மாநிலங்களில் இது போன்று கசப்பு இருந்து வருகிறது. கூட்டணியினரை மதிக்கும் எண்ணத்தை பா.ஜ., வளர்த்து கொள்ள வேண்டும். காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
மோடியா ?
வரவிருக்கும் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம். எங்கள் கட்சியில் பலரும் இதைத்தான் கூறி வருகின்றனர். காரணம் இவர் 2002-குஜராத் கலவரத்தில் கடமையை சரியாக செய்யவில்லை. பா.ஜ., உயர் மட்டக்குழு பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத இந்நேரத்தில் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. அத்வானி குறித்து கேட்ட போது , அத்வானியை நாங்கள் எதிர்க்கவில்லை.
அத்வானியை எதிர்க்கவில்லை:

கடந்த தேர்தலில் அவரது தலைமையில் தேர்தலை சந்தித்துள்ளோம். இப்படி இருக்கும் போது அத்வானி விஷயத்தில் எங்கள் நிலையை எப்படி மாற்றிக்கொள்ள முடியும் ? பீகார் முதல்வராக இருக்கும் நிதீஷ்குமாரும் ( ஐக்கிய ஜனதாதளம் ) பிரதமர் வேட்பாளர் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. பிரதமர் வேட்பாளர் அரசியல் ரீதியாக பேசி முடிவு எடுக்கப்படும். அவர் மத சார்பற்றவராக இருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: