சனி, 13 ஏப்ரல், 2013

தன் உண்மை தாயை இலங்கையில் கண்டு பிடித்த லண்டன் பெண்

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது.
இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு.
பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தாள்.
தன் நிற வேற்றுமையைக் கண்டு குழப்பமடைந்த அவள், இது தொடர்பில் தனது பெற்றோரிடம் முறையிட்டாள்.
மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அவளிடம் உண்மையை கூறினார்கள்.
நீ எங்களுடைய சொந்த குழந்தையில்லை என்றும் இலங்கையிலிருந்தே உன்னை தத்தெடுத்தோம் என்று அவளிடம் கூறினார்கள்.
திகைத்து போன பொப்பி தனது உண்மை தாய் இருக்கிறாளா? என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டாளர்.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் தாங்கள் இலங்கை தீவிற்கு சென்றதாகவும், குழந்தையில்லாத தங்களுக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்கும் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய பொப்பியின் பெற்றோர் இலங்கையில் நுவரெலியா என்ற பிரதேசத்தில் லெட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தாங்கள் தத்தெடுத்து இங்கிலாந்துக்கு கொண்டு வந்ததாக கூறினார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரையிலும் தங்களது சொந்த குழந்தையாகவே அவளை வளர்த்தார்கள். எந்த பேதம் வித்தியாசமுமின்னிற் எல்லா வசதிகளையும் அவளுக்க செய்து தந்தார்கள்.
வளர, வளரத்தான் பொப்பிக்கு தன் நிற வித்தியாசம் தெரிய வந்தது.
தன் வளர்ப்பு பெற்றோர் மூலம் உண்மை தெரிந்த பொப்பி, தனது உண்மை தாயை கண்டு பிடிக்க ஆவல் கொண்டாள். அவளது (வளர்ப்பு) தாயும், தந்தையும்) அதற்கு சம்மதித்தனர். அவள் இலங்கை செல்ல ஏற்பாடு செய்தார்கள்.
இலங்கைக்கு தன் நண்பர்களுடன் வந்த பொப்பிக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஆங்கில ஆசிரியை சிவமதி சிவமோகன், அவரது நண்பர் சசிகுமார் ஆகிய இருவரும் உதவுவதற்கு முன் வந்தார்கள்.
முதலில் சசிகுமார் ரம்பொடவத்தை தேயிலை தோட்டத்திற்கு குழந்தையை தத்து கொடுத்த லெட்சுமி என்ற பெண்ணை தேடி போனார். ஆவரிடம் அந்த புகைப்படமும், தத்துகொடுத்த பத்திர பிரதியும் இருந்தன.
அந்த தோட்டத்தில் லெட்சுமி என்ற பெயர் கொண்ட பத்தொன்பது பெண்கள் இருந்தனர்.
மனம் தளராத பொப்பிக்கு அவள் நீர்கொழும்பில் தங்கி இருந்த ஹோட்டலில் பணி புரியும் சுரங்க பெரேரா என்பவர் உதவுவதற்கு முன்வந்தார்.
அவரது ஏற்பாட்டின்படி பொப்பியும் அவள் நண்பர்களும் ரம்பொடவத்தையில் உள்ள புளுபீல்ட் தேயிலை தோட்டத்திற்கு வந்தனர். அங்கு அவள் தாய் லெட்சுமி வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த தோட்டத்தில், பொப்பி தனது உண்மை தாயை சந்தித்தாள். 32 நாட்களேயான குழந்தையாக தன்னை பிரிந்த மகள், இன்று 19 வயது அழகிய இளம் யுவதியாக நின்றதை கண்ட அந்த தாய்க்கு சோகமும் மகிழ்சியும் கலந்த எண்ணங்கள் கண்களில் நீர்வழிய தாயும் மகளும் அரவனைத்து கொண்டனர்.
மொழியால் பேசிக்கொள்ள முடியாத அவர்கள் தங்கள் அரவனைப்பால் தங்கள் உணர்ச்சிகளை கொட்டினார்கள்.
இன்று மீண்டும் பிறந்ததாக உணர்கிறேன் என்றாள் பொப்பி. தன் மகளை பிரிய வேண்டிய நிர்ப்பந்தத்தை விளக்கினார் ‘கலிங்க லெட்சுமி’ என்ற அந்த தாய். ஏற்கனவே எனக்கு இரு குழந்தைகள். இரண்டுமே பெண்கள். அந்த நிலையில் நான் மீண்டும் கர்ப்பமானேன்.
அப்போதுதான் என் குழந்தைகளின் தந்தை இறந்துபோனார். நிர்க்கதியான நான் எனது கடைசி குழந்தையாவது எங்காவது நலமாக வாழட்டும் என்றுதான் தத்துக்கொடுக்க சம்மதித்தேன். என் குழந்தையை நான் நினைக்காத நாளில்லை. இப்போது இவ்வளவு காலம் கழித்து அவளை காண்பது ஒரு கனவுபோல இருக்கிறது என்றாள் அந்த தாய்.
பொப்பின் மகிழ்ச்சியோ அளவிட முடியாதது. இப்போது தனக்கு இரண்டு தாய்கள் என்று சொல்லி மகிழ்ந்தாள். தனது உண்மை தாயை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றார்.

கருத்துகள் இல்லை: