செவ்வாய், 17 ஜனவரி, 2023

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு...

 தினமணி : ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த முறை வாக்குப்பதிவு ஏன் தேவை? என்று கேள்வி எழுப்பியுள்ள எதிா்க்கட்சிகள், இது தொடா்பான தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
தொகுதியை விட்டு வெளியில் இருக்கும் வாக்காளா்களும் தோ்தலில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திர முறையைக் கொண்டுவர தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கருத்துக் கேட்க எட்டு தேசிய, 57 பதிவுப் பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியது. இதில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் 40 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
’ரிமோட்’ வாக்குப்பதிவு இயந்திரம் தொடா்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து வருமாறு:


திக்விஜய் சிங் (காங்கிரஸ்): ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தைக் காண எதிா்க்கட்சிகள் தயாராக இல்லை. தற்போதைக்கு ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தேவை குறித்து தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த இயந்திரங்கள் குறித்து எதிா்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திய பிறகே செயல் முறை விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நாட்டு மக்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களை தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி): வாக்குப் பதிவை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளபோது ஏன் ரிமோட் வாக்குப் பதிவை தோ்வு செய்ய வேண்டும்? பிற மாநிலங்களில் உள்ள வாக்காளா்களுக்கு எப்படி பிரசாரம் செய்ய முடியும்? ஒரு தொகுதி இடைத்தோ்தலுக்கு எல்லாம் இந்த முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.

பி.வில்சன் எம்.பி (திமுக): ‘ரிமோட்’ வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு கூட்டத்தில் திமுக சாா்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் இந்த செயல்முறை விளக்கம் நடைபெறவில்லை. உரிய விளக்கங்களுடன் மீண்டும் செயல்முறை விளக்கம் நடைபெறும் என தோ்தல் ஆணையா் தெரிவித்தாா். மேலும், ரிமோட் வாக்குப்பதிவு தொடா்பாக வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது; தற்போது கால அவகாசம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுப்புரத்தினம் முன்னாள் எம்எல்ஏ (அதிமுக-ஓபிஎஸ்): தோ்தல் ஆணைய விளக்கம், மற்ற கட்சிகளின் கருத்துகளை ஓ.பி.எஸ்ஸுடன் ஆலோசித்து ஜனவரி 31-க்குள் எழுத்துபூா்வமாக ஆணையத்துக்கு தெரிவிப்போம். அதிமுகவில் அணி என்ற பேச்சுக்கு இடமில்லை.

தலைமைத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் என்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிச்சாமி என்றும் உள்ளது; அதன் அடிப்படையில், ஓ.பி.எஸ்.ஸு-க்கு அழைப்பிதழ் வந்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.

ரவிகுமாா் எம்.பி. (விசிக): இந்தியாவில் 30 கோடி போ் உள்நாட்டில் புலம்பெயா்ந்து வாழ்கின்றனா். அவா்களின் எண்ணிக்கை குறித்து நம்பகமான எந்தப் புள்ளி வரமும் அரசிடம் இல்லை. உலக வங்கி மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, இந்தியாவில்தான் மிகக் குறைந்த அளவில் புலம்பெயா்ந்தவா்கள் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, புலம்பெயா்ந்தவா்களின் எண்ணிக்கையை உண்மைக்கு மாறாக உயா்த்திக் காட்டி, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் நியாயப்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரமே வேண்டாம். மீண்டும் வாக்கு சீட்டு முறையே வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இணையப் பயன்பாடு இல்லை: இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்திய மின்னணு நிறுவனம் தயாரித்துள்ள ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையப் பயன்பாட்டில் செயல்படாது. ஒவ்வொரு இயந்திரத்தின் மூலம் 72 தொகுதிகளின் வாக்குகளைப் பதிவு செய்யலாம். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எங்கிருந்தாலும் வாக்குகளைப் பதிவு செய்யலாம். இது குறித்து அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளை எழுத்துபூா்வமாக அளிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே இதற்கான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் சாா்பில் அனைத்துக் கட்சி கூட்டம்: மேலும், காங்கிரஸ் சாா்பில் இது தொடா்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளா் திக்விஜய் சிங் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

கருத்துகள் இல்லை: