நக்கீரன் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்பை தொட்டுள்ளது.
திமுக தரப்பில் அங்கு திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்த பெரும்பாலான வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் அதிமுக தரப்பிலும் நேரடியாக வேட்பாளர் நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.
எடப்பாடி சென்ற ஆட்சியில் நான்கு வருடம் முதல்வராக இருந்த போதும் பிறகு அதிமுக இப்போது இரண்டாக பிளவுப்பட்டு நிற்கும் சூழலில் கட்சி எனது கண்ட்ரோலில் தான் உள்ளது என தொடர்ந்து எடப்பாடி பேசி வரும் நிலையில்,
இங்கு அதிமுக போட்டியிட்டு திமுகவுக்கு சரியான ஃபைட் கொடுக்க வேண்டும் என எடப்பாடி முடிவு செய்திருக்கிறார். ஆனால் பாஜகவோ வேறு சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக பிளவுப்பட்டு உள்ள நிலையில்
அக்கட்சிக்கான இரட்டை இலை சின்னம் இந்த தேர்தலில் கிடைக்குமா என்பதுதான் பெரிய விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளைப் பெறுவோம் என்றும் எனது தலைமையில் உள்ள கட்சிக்கு இது ஒரு அங்கீகாரமாக அமையும் என்றும் எடப்பாடி முடிவு எடுத்துள்ளார்.
ஆனால் பாஜகவோ இரட்டை இலை சின்னம் இல்லை என்ற நிலை வந்த பிறகு பாஜகவின் தாமரை சின்னத்தில் வேண்டுமானால் உங்கள் வேட்பாளரை நிறுத்துங்கள் அல்லது பாஜக போட்டியிடுவதற்கு ஆதரவு கொடுங்கள் என்று ஒரு நெருக்கடியை எடப்பாடிக்கு பாஜக இப்போதே கொடுக்கத் தொடங்கிவிட்டதாம். இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் மட்டும் போதும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாஜகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கும். மொத்தத்தில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பு மனு தொடங்கும் வரை அதிமுகவில் பல மாற்றங்கள் சூறாவளியாக வீசிக்கொண்டே இருக்கும். சின்னம் கிடைக்குமா அல்லது பாஜக சின்னமான தாமரையில் தான் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் விவாதங்களாக உருப்பெற்று உலா வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக