வியாழன், 19 ஜனவரி, 2023

வசூலை குவிக்கும் தென்னிந்திய சினிமா - வசூலில் தள்ளாடுகிறதா பாலிவுட்?

வாரிசு, துணிவு

bbc.com : புத்தாண்டு தென்னிந்திய சினிமாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் வெளியான வாரிசு, துணிவு, வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்து வருவதால் இந்தி திரையுலகம் திகைத்துப் போய் நிற்கிறதா? சமீபத்திய வெற்றியைக் கொண்டு பாலிவுட் திரையுலகத்தை தென்னிந்திய திரையுலகத்துடன் ஒப்பிட முடியுமா?
இந்திய எல்லை தாண்டி, சர்வதேச அளவில் இந்திய சினிமா என்றாலே இந்தி  சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்ட காலம் மாறி வருகிறது. குறிப்பாக, பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகம் மீதான உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிவிட்டது.


இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் இந்தி சினிமா தாண்டியும் இந்தியாவில் கவனிக்கத்தக்க பல மொழி சினிமாக்கள் இருப்பதை சொன்னது.
பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி அண்மையில், அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர். பட சிறப்புத் திரையீட்டின் போது பேசியதும் அந்த வகையில் அதிக கவனம் பெற்றது.
கோல்டன் குளோப் விருதை வென்ற மகிழ்ச்சியில் அடுத்தகட்டமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள கவுரவமிக்க Directors Guild of America-வில் ஆர்.ஆர்.ஆர். பட திரையீட்டிற்கு முன்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

"இது பாலிவுட் திரைப்படம் அல்ல. தென்னிந்திய சினிமாக்களில் ஒன்றான தெலுங்கு திரைப்படம். படத்தில் கதையை முன்னோக்கிச் செலுத்தவே பாடல்களை பயன்படுத்துகிறேன். படத்தின் ஓட்டத்தை நிறுத்தி, இசையையும், நடனத்தையும் தருவதற்காக அல்ல." என்ற எஸ்.எஸ்.ராஜமவுலியின் பேச்சும் ரசிகர்களிடையே மாறுபட்ட கருத்துகளை பெற்றது. அவர் ஏன் இந்திய சினிமா என்று கூறவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்திய திரையுலகையே புரட்டிப் போட்ட பாகுபலி திரைப்படம் பான்-இந்தியா திரைப்படம் என்ற பதத்திற்கு புத்துயிரூட்டியது. அதனைத்  தொடர்ந்து கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான கே.ஜி.எஃப், தெலுங்கில் புஷ்பா, தமிழில், பொன்னியின் செல்வன், விக்ரம், மலையாளத்தில் தயாரான சீதா ராமம் ஆகிய திரைப்படங்கள் அந்தந்த மொழி எல்லை கடந்து, நாடு முழுவதும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன.

ஒரு பக்கம் தென்னிந்திய சினிமாக்கள் சில பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பாலிவுட்டில்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் பிரித்விராஜ் மற்றும் ரக்ஷா பந்தன், ரன்பீர் கபூர் - சஞ்சய்தத் நடிப்பில் வெளியான ஷம்ஷேரா ஆகிய படங்கள் ரசிகர்களின் மனங்களை வெல்லத் தவறின.  இந்திய திரையுலகம் காணாத வசூலைக் குவித்த தங்கல் பட நாயகன் அமீர்கான் நடித்த லால்சிங் சத்தா படமும் கூட தப்பவில்லை.

பட மூலாதாரம், AAMIR KHAN PRODUCTIONS

பாலிவுட் சினிமாவில் அவ்வப்போது எழும் சர்ச்சைகளால் குறிப்பிட்ட திரைப்படங்களை புறக்கணிக்க சில அமைப்புகள் அழைப்பு விடுத்ததும் நடந்தது. லால்சிங் சத்தாவின் தோல்வி தந்த வருத்தத்தில் திரையுலகில் இருந்தே தற்காலிகமாக விலகிக் கொள்வதாக முன்னணி நட்சத்திரமான அமீர்கான் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.

மறுபுறம், மாறுபட்ட கதைகள், கண்ணைக் கவரும் காட்சிகள், வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம், படங்களை மக்களிடையே பிரபலப்படுத்த புதுவிதமான உத்திகள் என்று தென்னிந்திய சினிமா புதிய பாய்ச்சலுடன் முன்னோக்கி செல்வதாகப் பார்க்கப்பட்டது.

குறிப்பாக, ஓ.டி.டி. தளங்கள் ரசிகர்களின் ரசனையை  வெகுவாக மாற்றி, மொழி ஒரு தடையில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டதால் பட்ஜெட் ஒரு பிரச்னையே இல்லை என்கிற அளவுக்கு பட மேக்கிங்கை துணிச்சலாக அணுகுகின்றனர்.

பாலிவுட் சினிமாவுக்கு நிகராக தென்னிந்திய சினிமாக்கள் உருவாகி வருவதாக பேசப்பட்ட காலம் போய், இப்போது தென்னிந்திய சினிமாக்கள் அதையும் விஞ்சி விட்டதாகவே திரையுலகில் பேசப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்களின் வெற்றி, இந்தியாவில் படங்களின் வசூல் கால வரம்பையே அடியோடு மாற்றியமைத்துள்ளது.

பாலிவுட் கோலோச்சிய காலத்தில், நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளியன்று வெளியாகும் படங்களே அதிக வசூலை குவிப்பது வழக்கம். தீபாவளி போனசை குறிவைத்தே இந்தி சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி வந்தன. அந்த நிலையும் இந்த ஆண்டில் மாறிவிட்டது.

கடந்த தீபாவளிக்கு பாலிவுட்டில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வசூலை குவிக்காத நிலையில், தென்னிந்தியாவில் புத்தாண்டில் வெளியான படங்கள் அனைத்துமே பெருவெற்றி பெற்றுள்ளன. பொங்கலை முன்னிட்டு தமிழில் வெளியான விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதேபோல், மகர சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்மா ரெட்டி ஆகிய இரு படங்களுமே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகின்றன.

தமிழில் விஜய் - அஜித் ரசிகர்கள், தெலுங்கில் சிரஞ்சீவி - பாலகிருஷ்ணா ரசிகர்கள் மட்டுமல்ல, இந்தி திரையுலகும் கூட தென்னிந்திய சினிமாவின் வசூல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. வாரிசு, துணிவு, வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய நான்கு படங்களும் சேர்ந்து முதல் 5 நாட்களிலேயே 335 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக பாலிவுட்டில் தொடர்ந்து இயங்கும் கிரிஷ் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் பாலிவுட் - தென்னிந்திய சினிமா இடையிலான மாற்றம் படங்கள் வசூலாகும் காலத்தில் எதிரொலிப்பதாகவும், படங்களின் வசூலில் தீபாவளியை பொங்கல் பண்டிகை காலம் முந்திவிட்டதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக விளம்பரப்படுத்தப்படாத வாரிசு திரைப்படம் இந்தி பதிப்பில் பெரிய அளவில் விளம்பரம் ஏதும் இன்றியே நல்ல வசூல் பார்ப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு படங்களின் வசூலை இந்தி திரையுலகினரும், சினிமா விமர்சகர்களும் உன்னிப்பாக கவனித்து நாள்தோறும் அப்டேட்களை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளிலும் வாரிசு, துணிவு, வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய நான்கு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

பாலிவுட் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கையில், தற்போதைய ஆரோக்கியமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தென்னிந்திய திரையுலகம் அடுத்த கட்டத்தை நோக்கிய பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது. பட்ஜெட் கருதி தள்ளி வைக்கப்பட்ட முயற்சிகளை எல்லாம் இப்போது துணிந்து எடுக்கத்  தொடங்கியுள்ளனர். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Baradwaj Rangan/Twitter
படக்குறிப்பு,

பரத்வாஜ் ரங்கன்

அதேநேரத்தில், பாலிவுட்- தென் இந்திய சினிமா படங்கள் தொடர்பான இந்த ஒப்பீடு தவறு என்று கூறுகிறார், சினிமா விமர்சகரான பரத்வாஜ் ரங்கன். “பாலிவுட்டில் த்ரிஷ்யம் 2, பிரமாஸ்த்ரா, போல் புலையா 2 ஆகிய படங்கள் 2022ல் நல்ல வசூலை பெற்றுள்ளன. ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்ததால் ஒப்பீட்டளவில் பாலிவுட் படங்கள் குறைவாக வசூலித்தது போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட்டுக்கு நிச்சயம் சிறந்த ஆண்டாக இல்லை. அதேவேளை, மிக மோசமான ஆண்டாகவும் இல்லை. கடந்த ஆண்டில் ரூ.100 கோடிக்கும் மேல் ஏராளமான பாலிவுட் படங்கள் வசூலித்துள்ளன” என்கிறார். ஓராண்டு ஒப்பீட்டை வைத்து எதுவும் கூற முடியாது என பிபிசி தமிழிடம் தெரிவித்த பரத்வாஜ் ரங்கன், திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் ரூ.70 கோடி வசூலித்த திரைப்படங்கள் தற்போது ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரையே சம்பாதிப்பதாகவும் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தன்னிடம் ஒருமுறை கூறியதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு, தமிழில் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் இல்லாத திரைப்படங்களில் லவ் டுடே திரைப்படத்தை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை. இயக்குநர் யார், நடிகர் யார் என்று தெரியாமல் ஓடும் திரைப்படங்கள் நன்றாக ஓடும்போதுதான் சினிமா துறை நன்றாக உள்ளது என்று கூறமுடியும் ” என்கிறார் பரத்வாஜ் ரங்கன்

பாலிவுட்டில் கதைக்கான வறட்சி உள்ளதா என்ற கேள்விக்கு, நிச்சயம் இல்லை என்பதே அவரின் பதிலாக உள்ளது. பாலிவுட் என்றாலே கிளாமர் என்று கூறுகிறார்கள். கிளாமரும் இருக்கிறது, அதையும் தாண்டி நல்ல அம்சங்களும் உள்ளன. ஆர்.ஜே.பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் திரைப்படத்தின் மூல படமான பதாய் ஹோ அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது, ஆலியா பட் நடித்த கங்குபாய் பெரிய வெற்றியை பெற்றது` என்றார்.

கருத்துகள் இல்லை: