வியாழன், 19 ஜனவரி, 2023

கனிமொழி : கலைஞர் சந்திக்க விரும்பிய தலைவர் சேகுவேரா அலேடாவை சந்தித்தது என் நல்வாய்ப்பு

 tamil.oneindia.com  - Yogeshwaran Moorthi  :  சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  சந்திக்க விரும்பிய புரட்சியாளர் சேகுவேரா என்றும், அவரின் மகளை சந்தித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநரின் விளக்கம் குறித்து பேசிய கனிமொழி, தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள், சுரண்டி பார்த்தால் தீக்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு புரட்சியாளர் சே குவேராவின் மகளான அலெய்டா குவேரா 2 நாட்கள் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இன்று சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக கியூபா ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புரட்சியாளர் சே குவேராவின் மகள்,பேத்தி சென்னை வருகை- விமான நிலையத்தில் இடதுசாரிகள் உற்சாக வரவேற்பு!!புரட்சியாளர் சே குவேராவின் மகள்,பேத்தி சென்னை வருகை- விமான நிலையத்தில் இடதுசாரிகள் உற்சாக வரவேற்பு!!

கனிமொழி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில், திமுக சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக புத்தகங்களில், சுவரொட்டிகளில் புரட்சி என்ற சொல்லை நினைக்கும் போது, கண் முன் வந்து நிற்கும் முகத்தின் சாயலை மேடையில் பார்க்க கூடிய பெருமையோடு நிற்கிறேன். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  நீங்கள் சந்திக்க விரும்பும் தலைவர் யார் என்று கேட்டபோது, பெரியார், அண்ணா, காமராசர் என்று பட்டியலை சொன்னார்.
 

கலைஞர் சந்திக்க விரும்பியது யார்?
அப்போது, மறைந்த தலைவர்கள் இல்லாமல் வாழும் தலைவர்களில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, முதலில் வந்த பெயர் ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் தான். எத்தனை காலங்கள் கடந்தாலும் புரட்சி வெற்றிபெறும். புரட்சிக்கான நம்பிக்கையின் வடிவமாக சின்னமாக இருப்பது கியூபாவும் சே-வும் தான். இன்றைய இளைஞர்கள் கூட தங்கள் சட்டையில் சேவின் முகத்தை வைத்து உலகை மாற்றக் கூடிய நம்பிக்கையுடன் வருகிறார்கள் என்றால், அதற்கு கியூபா புரட்சி தான் காரணம். அந்த புரட்சியின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், ஆதிக்க சக்திகள் தடைகள் விதித்து கொண்டே இருக்கிறது.

மருத்துவம்
அலெய்டா குவேரா ஒரு மருத்துவர். கியூபாவில் எல்லோரும் கனவு காணும் அளவிற்கு மக்களுக்கான மருத்துவம் இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் வீட்டிற்கு வந்து மக்களிடம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவர்கள் கேட்கிறார்கள். அதனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் செய்துமுடித்தவர்கள். நமக்கு வழிகாட்டியாக இருக்க கூடியவர்கள். மருத்துவர்கள் மக்களோடு வாழக் கூடிய சூழலை உருவாக்கியவர்கள்.

நீட் தேர்வு
நீட்டை கொண்டு வராமல் இருந்திருந்தால், எதை சாதிக்க வேண்டும், சாதித்து முடித்திருக்க முடியும் என்று நினைத்தோமோ, அதனை கியூபா செய்து காட்டி இருக்கிறது. அப்படியான மருந்துகள் அனைத்தும் இலவசம். வெளிநாடுகளில் இருந்து மருந்தினை கொண்டு வர முடியாத அளவிற்கு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு உலகம் கியூபா மீதான தடையை தளர்த்தாமல் வைத்திருக்கிறது. உதவ வேண்டும் என்ற நினைக்கும் நாடுகளை கூட தடுத்து நிறுத்தகின்றன ஆதிக்கம் படைத்த சக்திகள்.

மனிதநேயமே நம் மொழி
ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கக் கூடிய நிலையை அலெய்டா ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார். நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரே மொழி மனித நேயம். ஆனால் மற்றவர்களுக்கு மனிதநேயம் கடந்து மதம், மதம் என்றால் வெறி, திமிர். ஆனால் நாம் பேசுவது மனிதநேயம். கியூபாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கியூபா மக்களோடு நாம் நிற்கிறோம் என்று உரக்க சொல்ல வேண்டும் என்பதற்காக கூட்டத்தை நடத்துகிறோம்.

கிணற்றை காணவில்லை
அவர்கள் எப்படி இந்த உலகத்திற்கு புரட்சியின் நம்பிக்கையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கான நம்பிக்கையாக நாம் நிற்போம் என்று கூறி கொள்கிறேன். சே சொல்வது போல், புரட்சி என்பது பழத்தை போல் அல்ல. தானாக பழுத்து கீழே விழும் என்று காத்திருக்க முடியாது. அதுபோல் கி.வீரமணி பேசும் போது, தமிழ்நாடு என்று சொல்லும் போதெல்லாம் ஆரவாரம் இருந்தது. அதற்கு பின் ஒரு கதை இருந்தது. இன்று அந்த கதை இல்லாமல் போய்விட்டது. அந்த கிணத்தையே காணவில்லை என்று சொல்லிட்டாங்க. நாங்கள் சொன்னது புரியவில்லை என்று கூறிவிட்டார்கள். நமக்கு அவர்கள் பேசும் மொழி புரியாமல் தான் இருக்கிறது.

தீக்கங்கு அணையவில்லை
நான் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டீர்கள் என்று இங்கு உருவாகிய புரட்சி கனல் அவர்களை விளக்கம் அளிக்க வைத்திருக்கிறது. சாதாரணமாக மக்களை உரசி பார்த்தால், தமிழர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் தீண்டி பார்த்தால், உள்ளே தெரியக் கூடிய தீக்கங்கு அணையவில்லை என்று தெரியும் போது, யாராக இருந்தாலும் நாங்கள் சொல்லவில்லை என்று சொல்லும் நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

ஆதர்ச நாயகன்
இந்த மேடையில் அவரை சந்திக்கும் வாய்ப்பும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பாக இருக்கும். அதேபோல் என் தலைவர் கருணாநிதியின் ஆதர்சமாக இருக்கக் கூடிய ஒரு புரட்சியாளனின் மகளை இந்த மேடையில் அவருக்கு இருந்த அதே உறுதியோடு நாங்கள் கியூபா மக்களுடன் இருப்போம். அந்த உறுதியை அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.
English summary

Former Chief Minister Karunanidhi wanted to meet the revolutionary Che Quevara and meeting his daughter was an unforgettable day in my life said DMK MP Kanimozhi

கருத்துகள் இல்லை: