hirunews.lk : நுவரெலியாவில் கோர விபத்து: 7 பேர் பலி - 51 பேர் காயம்!
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு பேரூந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பு தேஸ்டன் பாடசாலையின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேரூந்து, நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான ரதெல்ல குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்துள்ளது.
இந்த பேரூந்து நானுஓயா குறுக்கு வீதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது, அதன் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்றுடன் மோதியதுடன், அதற்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக, சிற்றூர்தியில் பயணித்த 07 பேர் உயிரிழந்துள்ளதுடன்,பேரூந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியினூடாக பயணிக்கும் வாகனங்கள் பிரதான வீதியை பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக