சனி, 25 டிசம்பர், 2021

கலைஞரை சண்முகநாதன் சொற்படிதான் ஸ்டாலினே சந்திப்பார் .. புரோட்டோகால் முக்கியம்.. கோபாலபுரத்து நினைவுகள்

May be an image of 2 people

Umamaheshvaran Panneerselvam  :  கலைஞர் கருணாநிதியை சந்திக்க ஒருமுறை கோபாலபுரம் சென்றிருந்தோம்.அவர் உடல் நலிவுறத் தொடங்கியிருந்த நேரம் அது. ஆதலால் பார்க்க வருபவர்களை எல்லாம் சற்றே அதிகமாக காக்கவைத்து சோதித்து அவசியம் இருப்பின் மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.
கலைஞர் இல்லத்தின் வலதுப்புற இடம் எப்பொழுதும் ஒருவித நிதானம் தவழும் இடமாக இருக்கும். நிறைய பேர் காத்திருந்தாலும் உள்ளே சலசலப்பே எழவில்லை எனில் அங்கே சண்முகநாதன் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.


அவ்வாறான ஒரு நாளில் தான் கலைஞரைக் காண போயிருந்தோம்.
திடீரென அங்கே வாசல் அருகே பரபரப்புத் தொற்றிக் கொண்டது. தளபதி வராரு என்று PSO க்கள் சொல்ல, ஒருவித பரபரப்பு. தளபதியின் காருடன் ராசா, பொன்முடி என இன்னொரு படைபரிவாரமும் வர காத்திருந்த யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அப்பொழுது ஜெயலலிதா அபோலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். ஜெயலலிதாவின் உடல்நிலை, மருத்துவம் குறித்து விசாரிக்க திமுக சார்பாக  அபோலோவிற்கே நேரில் சென்று பார்ப்பது என்று முடிவுசெய்ய ஸ்டாலின் வந்திருப்பதாகவும் அதுகுறித்து ஆலோசிக்க கலைஞரைப் பார்க்க வந்திருப்பதாக செய்தி சொல்லப்பட்டது. காந்திருந்தவர்களுக்கோ இன்று கலைஞரைக் காண்பது அரிதினும் அரிது என்று புரியத் தொடங்கியது.
உள்ளே வந்த ஸ்டாலின் நேரே கலைஞரைப் பார்க்க சென்றுவிடவில்லை. மாறாக அங்கிருந்த சண்முகநாதனிடம் சொல்ல, சண்முகநாதன் ஸ்டாலினை சிறிது நேரம் காக்க சொல்ல, உள்ளே கலைஞரைக் காண வந்தவர்களோடு தானும் ஒருவராக ஸ்டாலின் அமர்கிறார். பின்னர் கலைஞரை பல்லாவரம் நித்யா ஆயத்தப்படுத்தியதும் சண்முகநாதன் ஸ்டாலினை மேலே கலைஞரைக் காண அனுப்புகிறார்.
இது தான் திமுகவின் புரோட்டோக்கால். தலைவரின் மகனாகவே இருந்தாலும், வந்திருப்பது ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரமாகவே இருந்தாலும் புரோட்டோக்கால் புரோட்டோக்கால் தான். அதில் கெடுபிடித்தன்மை இருக்காது. ஒருவித ஒழுங்கு இருக்கும்.
அத்தககைய ஒழுங்குக்கு காரணகர்த்தா சண்முகநாதன்.
கலைஞர் தன் தந்தையாகவே இருந்தாலும் ஒரு தலைவராகவே நினைத்து, தொண்டன்போல் நின்று முறைப்படி அனுமதி வாங்கி அங்கே சண்முகநாதனை Numerous Uno வாக இருக்கும் சூழலை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்.
கலைஞருக்கும் சண்முகநாதனுக்கும் இருக்கும் பிணைப்பு பற்றி அனேகம் பேர் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் அதைத் தாண்டிய ஒரு பிணைப்பு இருக்குமென்றால் அது ஸ்டாலினுக்கும் சண்முகநாதனுக்கும் தான்.
கலைஞர் எனும் பிரம்மாண்டத்தை ஸ்டாலின், சண்முகநாதன் இவ்விருவரைத் தவிர வேறு எவரேனும் அணுக்கமாக இருந்து பார்த்திருக்கவும், உடன் அளவளாவியிருக்கவும் முடியுமா என்று தெரியவில்லை. ஸ்டாலின் தனக்கும் மேற்பட்ட ஒரு ஆளுகையை இன்னொருவருக்கு அனுமதித்தது அவரது பெருந்தன்மை. மகனினும் மிஞ்சிய நெருங்கிய இடத்தை சண்முகநாதனுக்கு வழங்கியது கலைஞரின் மாட்சி. மகனாகவே இருப்பினும் என் தலைவனைக் காண என்னைத் தாண்டியே அனுமதி என்ற உரிமை கொண்டாடல் சண்முகநாதனின் பேரன்புக்கு எடுத்துக்காட்டு.
கலைஞர் மறைந்த பின்பு 2019 வாக்கில் மீண்டும் கோபாலபுரம் இல்லம் சென்றிருந்தேன். கலைஞர் இருந்தபோது எவ்வாறு சண்முகநாதன் மதிக்கத்தக்கவராக வலம் வந்தாரோ அதேபோல் ராஜமரியாதையுடன் அங்கே இருந்தார். கலைஞரின் கடிதங்களை, தொண்டர் மடல்களை தொகுக்கும் வேலையினை உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்த வேலையிலும் விருப்பமாக செய்துகொண்டிருந்தார்
. அப்பொழுதும் அங்கே அதே ஒழுங்கு . அதே நிதானம். அவருக்கென தனியே வாகனம் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது.  இது திமுக என்ற கட்சி சூரியனின் நிழலுக்குக் கொடுத்த மரியாதை.
தகப்பனோடு தான் பேசிய ரகசியங்கள், ராஜதந்திரங்கள், சண்டை சச்சரவுகளை எல்லாம் தலைவரோடு இருந்த சண்முகநாதனோடு மட்டும் தான் ஸ்டாலின் கதைக்க முடியும்.
தந்தையின் பால்யகால நண்பர்கள், தந்தையோடு சமருக்கு உடன் சென்றவர்கள், தந்தை வீழ்ந்தப்பட்ட காலங்களில் தாங்கிப் பிடித்தவர்கள் தான் தந்தை இல்லாத சூழலிலும் தந்தையை அவர்தம் பெருமையை நொடிக்கு நொடி நமக்கு நினைவூட்டி தந்தையை நம் கண்முன் கொணர்பவர்கள்.
அவ்வாறிருக்க , பேராசிரியர் அன்பழகன், சண்முகநாதன் என தனது தந்தையின் முழுமையை முழுக்க அறிந்தவர்களின் மறைவு ஸ்டாலின் அவர்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதற்கு இன்று அவர் எழுதியிருக்கும் இரங்கற்குறிப்பு ஒரு சான்று. அதில் இருப்பது வெறும் வார்த்தைகளல்ல. ஒருவித கையறுநிலை உணர்த்தல். ஒருவித துடிதுடிப்பு.
ராஜாகோபாலச்சாரி ஹாலில் ஸ்டாலினின் கைப்பற்றி ஆறுதல் சொல்லும் வாய்ப்பு கலைஞர் மறைந்த அன்று கிட்டியது. ஆனால் அன்றும் கூட்டத்தை நெறிபடுத்தும் வேலையை அதே முசுடான முகத்தை வைத்துக்கொண்டு தான் அவர் செய்தார். ஆங் ஆங் போங்க போங்க என்ற தொனியில் தான் எங்களை அடிக்காத குறையாக அனுப்பிக்கொண்டிருந்தார். இப்பகூடவாயா இந்த ஆளு புரோட்டொக்கால் பாப்பாரு..சய்க் என்று அவரை மனதில் திட்டிக்கொண்டே போன போது தான் கலைஞருக்கு மெரினாவில் இடம் என்ற தீர்ப்பு வந்தது. அப்போது ஸ்டாலின் அழுதபடி கைகூப்பி நின்று தொண்டன்முன் தெண்டனிடுவதுபோல் பணிந்தது கண்டு இந்த Coldest மூஞ்சுக்குள் இத்தனை warmest இதயமா என்றே எண்ண வைத்தது.
இன்று சண்முகநாதனின் இரங்கற் குறிப்பில் ஸ்டாலின் எழுதியிருக்கும் வரிகள் வெறும் வரிகள்போல் தெரியலாம். ஆனால் அதில் கலைஞர் இழப்புக்கு நிகரான வலியை அவர் தாங்கியிருப்பதை கலைஞர், ஸ்டாலின், சண்முகநாதன் ஆகியோரின் பரஸ்பர அன்பு, மரியாதையை கண்டுகொண்டவர்களால் உணரமுடியும் என்று எண்ணுகிறேன்.
கலைஞர் எனும் பிரம்மாண்டத்தை தன்னைப் போலவே காதலித்த ஓர் உற்ற நண்பனை, உற்ற அண்ணனை  இழந்து தனது தந்தையின் நினைவலைகளோடு சேர்த்து நினைத்து வாடும் ஸ்டாலின் அவர்களுக்கு இரங்கல்கள்.
தேறி வாருங்கள் தளபதி.

கருத்துகள் இல்லை: