திங்கள், 20 டிசம்பர், 2021

250 நாய்களை கொன்ற குரங்குகள் பிடிபட்டன- பழிக்குக் பழியாம் மகாராஷ்டிராவில் பரபரப்பு சம்பவம்

 மாலைமலர் : நாய்களை கொலை செய்து வந்த குரங்குகள் பள்ளிக் குழந்தைகளையும் தாக்கியதாக பீட் வனத்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் குரங்குகள் ஒன்று சேர்ந்து குட்டி நாய்களை பிடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் கிராமத்தில் சமீபகாலமாக குட்டி நாய்கள் காணாமல் போவதும் பின்னர் அவை இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்த, வனத்துறையினரின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர். 

களம் இறங்கிய வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் இறந்து கிடந்த நாய்களின் உடல்களை சோதனை செய்த போது நகக்கீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குரங்கு ஒன்று நாய் குட்டி ஒன்றை தூக்கி செல்வதை அப்பகுதி மக்கள்
நேரில் பார்த்து உள்ளனர். அந்த குரங்கை கல்லால் அவர்கள் தாக்கிய போது நாயை கவ்விக்கொண்டு அங்கிருந்து அது தப்பி சென்றது. அதன்பின் அந்த நாய் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு முன்னர் குரங்கு கூட்டத்தில் இருந்து தப்பி வந்த குட்டி குரங்கு ஒன்றை அப்பகுதி நாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. இதை அறிந்த அந்த குரங்குகள் பழி வாங்கும் விதமாக நாய்க்குட்டிகளை தேடி பிடித்துச சென்று கொன்று வந்துள்ளன.  

நாய் குட்டியை பார்க்கும் குரங்கு  அதை கவ்வி சென்று உயரமான கட்டிடத்தின் மீது இருந்தோ மரத்தின் மீது இருந்தோ தூக்கி வீசி எறிந்து கொலை செய்து விடுவது விசாரணைக்கு பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதே முறையில் 250 குட்டி நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. குரங்குகள் கூட்டத்தை சேர்ந்த இரண்டு குரங்குகளே இதை அதிகம் செய்து வந்துள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளையும் அந்த குரங்குகள் தாக்கி உள்ளன.  


இதை அடுத்து அந்த குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். அவற்றில் அடுத்தடுத்து இரண்டு குரங்குகளும் சிக்கிக் கொண்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்ததனர்.  பிடிபட்ட குரங்குகள் நாக்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்று பீட் வனத்துறை அதிகாரி சச்சின்கன்ட் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் வருவதை போன்று பழிவாங்கும் செயலில் குரங்குகள் ஈடுபட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: