ஞாயிறு, 19 டிசம்பர், 2021

கொரோனா.. 22 மாவட்டங்களில் 10க்கும் கீழ் குறைந்த பாதிப்பு.. பாசிட்டிவ் விகிதமும் குறைவு

 Vigneshkumar  -  e Oneindia Tamil  :  சென்னை: தமிழ்நாட்டில் இன்று 613 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 22 மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் 10க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக அப்போது மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பிறகு மாநிலத்தில் வைரஸ் கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வருகிறது. மாநிலத்தில் தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 613 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,39,196 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.1%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1க்கு கீழாகவே உள்ளது.

அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 6 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னை மற்றும் திருப்பூரில் தல 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,676 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,407ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7,346 ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 665 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,95,174 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 125 பேருக்கும் கோவையில் 101 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல அரியலூர், கடலூர் உட்பட மொத்தம் 22 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது

கருத்துகள் இல்லை: