திங்கள், 20 டிசம்பர், 2021

மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது

 hindutamil.in : சென்னை: மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்து, 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட அண்மைத் தகவல்: சென்னை - மாங்காட்டைச் சேர்ந்த 16 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ம் தேதி சனிக்கிழமை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.


அந்த மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் அறையில் மூன்று கடிதங்கள் சிக்கின. அதில் ஒரு கடிதம் கிழித்த நிலையில் இருந்தது.
அதில், ‘பெண்களுக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இல்லை. பாதுகாப்பானது தாயின் கருவறையும், கல்லறையும் தான். இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை, பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத்தர வேண்டும்’ என மாணவி குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், போலீஸார் 4 தனிப் படைகள் அமைத்து, மாணவியின் செல்போனை கைப்பற்றி கடைசியாக அவர் யாரிடமெல்லாம் பேசினார் என்று ஆய்வு செய்தனர். அதில், முன்னாள் ஆசிரியர் மகன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அந்த மாணவன் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்தது. மாணவி இதற்கு முன்னர் படித்த தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும், மூன்று இளைஞர்களிடமும் மாங்காடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாங்காட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (21) என்பவர், அந்த மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை: