பி பி சி தமிழ் : கேரள அரசு பள்ளி ஒன்றில், பதின்ம வயது மாணவிகள் கால் சட்டைகள் அணிய அனுமதிக்கப்பட்ட பின், அது அம்மாநிலத்தில் சர்ச்சையானது. இந்த உடைகள் மீதுள்ள சர்ச்சை குறித்து டெல்லியில் உள்ள பிபிசியின் கீதா பாண்டேவும், கேரளாவில் அஷ்ரஃப் படன்னாவும் விளக்குகின்றனர்.
புதன்கிழமை காலை, ஸ்ரீங்கி சி.கே தனது புதிய சீருடையுடன் பள்ளி பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் போது, முன் பின் அறிகம் இல்லாத பெண்ணிடமிருந்து வந்த பாராட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
"அந்த பெண்மணி என்னை பார்த்து நான் மிகவும் கம்பீரமாக இருப்பதாக கூறினார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது", என்று பலுசேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஸ்ரீங்கி பிபிசியிடம் கூறினார்.
ஆனால், ஸ்ரீங்கி பள்ளிக்குள் நுழைவதற்கு, ஆண்களை போல பெண்களும் கால் சட்டை அணிவதை மகிழ்ச்சியற்று பார்ப்பவர்களாக இருந்த போராட்டக்காரர்கள், அவர்களைக் கண்காணித்துக்கு கொண்டிருந்த காவல்துறையினரைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
விளம்பரம்
இந்த மாற்றத்திற்கு முன், மாணவிகள் பாரம்பரியமான மேலாடை, தளர்வான கால்சட்டையும், இடுப்பளவு மேல்சட்டையை சீருடையாக அணிந்திருந்தனர்.
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் இருந்த மாணவிகள், மாணவர்களை போலவே தாங்களும் கால்சட்டை சீருடை அணிந்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்து.ஆர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர்களின் விருப்பத்தில் ஒரு நியாயம் இருந்ததை தான் பார்த்ததாக அவர் கூறுகிறார். உலகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள இளம் பெண்களை போலவே, பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு வெளியில் ஜீன்ஸும், மேலாடையும் அணிகின்றனர். மேலும், கேரளாவின் ஈரப்பதமான வானிலைக்கு மேற்சட்டை ஏதுவாக இல்லை என்று அவர் கூறுகிறார்.
"இதனால்,எங்கள் ஊழியர்களுடன் கலந்தாலோசித்தோம். பின்னர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தில் இது குறித்து பேசியபோது, பெரும்பாலானவர்கள் அந்த யோசனையை ஆமோதித்தனர். அதன் அடிப்படையில் சீருடையை மாற்ற நாங்கள் முடிவு செய்தோம்", என்று இந்து தெரிவித்தார்.
"பாலின சமத்துவ சீருடையைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு பெற்றோர்கள் மட்டுமே கவலை தெரிவித்தனர். அவர்களிடம், மாணவிகள் நீளமான சட்டையும், முழு கை வைத்த ஆடைகளை அணியலாம்; அவர்கள் விரும்பினால், அவர்கள் தலையில் முக்காடும்,மேல்சட்டையும் அணியலாம் என்று தெரிவித்தோம்.”
"ஆனால் மிகச் சில பெண்களே அவற்றை தேர்ந்தெடுத்தனர்," என்கிறார் இந்து.
மாணவிகள் புதிய சீருடையில் செல்ஃபி எடுத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் புகைப்படங்களை பிபிசிக்கு இந்து அனுப்பினார்.
Protesting muslim groups
பெண்களுக்கான புதிய சீருடையை எதிர்க்கும் இஸ்லாமிய குழுக்கள்
அத்தகைய மாணவிகளில் ஒருவரான ஸ்ரீங்கி, தனது புதிய சீருடை "மிகவும் வசதியாக" இருப்பதால், தான் அதை மிகவும் விரும்புவதாக கூறுகிறார். இந்த சீருடையை கையாள மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"இருபாலரும் அணியக்கூடிய சீருடையைப் பயன்படுத்தும் முதல் அரசு மேல்நிலைப் பள்ளி எங்களுடையது. ஒரு புரட்சியில் பங்கேற்றதாக நான் உணர்கிறேன்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த சீருடை மாற்றத்துக்கு கேரள அரசின் ஆதரவும் கிடைத்துள்ளது.
"ஆடை கட்டுப்பாடும், பள்ளிக் கல்வியின் முழு நடைமுறையும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்," என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி சிவன்குட்டி பிபிசியிடம் கூறுகிறார்.
"முன்னதாகவே பாலின பாகுபாட்டிற்கு எதிராக இளம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மேலும் பல பள்ளிகள் ஒன்றிணையும் என்று நாங்கள் நம்புகிறோம்."
ஆனால், இந்த சீருடை மாற்றம் அனைவராலும் வரவேற்றப்படவில்லை. தங்கள் குழந்தைகள் புதிய சீருடை அணிய "கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்" என்று பழமைவாத இஸ்லாமிய குழுக்கள் கூறுகின்றனர்.
"பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது எங்கள் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளைப் போல காற்சட்டையும், சட்டை அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது ஏழ்மையான குடும்பங்களுக்கு மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது," என்று இருபாலர் சீருடைகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் முஜாஹித் பலுசேரி ( Mujahid Balussery) கூறினார்.
ஆனால், பலுசேரிக்கு ஒரு பெரிய கவலை உண்டு. சீருடை மாற்றம் என்பது மாநிலத்தின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஒரு புதிய முயற்சி என்று அவர் நம்புகிறார். குழந்தைகள் நெறி தவறி செல்ல அது வழிவக்கும். அவர்களின் நாத்திக சித்தாந்தத்தை குழந்தைகள் மீது திணிக்கும் செயல்," என்று அவர் கூறுகிறார்.
"எங்கள் மத நம்பிக்கை மீது சமரசம் செய்ய முடியாது," என்றும் அவர் தெரிவித்தார்.
"பெண்களும் ஆண்களும் தங்களின் தனித்துவமான அடையாளங்களை கொண்டிருக்க வேண்டும். ஆண்களைப் போல பெண்கள் உடை அணிய அனுமதிப்பது அவர்களை சுதந்திர பாலினமாக கருத தொடங்குவது போன்றது. இது பாலின வேறுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்து, பாலியல் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும்," என்கிறார் அவர்.
கடந்த வாரம் இதே போன்ற கருத்துகளை கூறிய மற்ற இஸ்லாமிய மதக் குழுக்கள் கேரளாவிலும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பலரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. இது பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பழமைவாத குழுக்களின் முயற்சி என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் கல்வியறிவில் சிறந்த முற்போக்கான மாநிலமாக கேரளா அறியப்படுகிறது. நாட்டிலேயே 100% கல்வியறிவு பெற்ற ஒரே மாநிலமாக இம்மாநிலம் குறிப்பிடப்படுகிறது.
இங்கு பள்ளிகளில் சேரும் மொத்த மாணவர் சேர்க்கையில் 48.96% பெண்கள்; மேலும் பெரும்பான்மையானவர்கள் பல்கலைக்கழக பட்டங்களைப் பெறுகின்றனர்.
கேரளாவில் முன்பு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் வெவ்வேறு சீருடைகள் இருந்தன.
ஆனால், ஆழமாக வேரூன்றியுள்ள பெண்ணினம் மீதான வெறுப்பு இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே கேரளாவையும் ஆணாதிக்க சமூகமாக ஆக்குகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கேரளாவில் உள்ள பல தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஏற்கெனவே கால் சட்டை அணிந்து வருகின்றனர்; 2018ஆம் ஆண்டு அரசு ஜூனியர் பள்ளியில், இளம் குழந்தைகளுக்கான சீருடை இருபாலர் சீருடையாக மாறியதால், புதிய சீருடை குறித்த சர்ச்சை ஆச்சரியமளிப்பதாக தலைமையாசிரியர் இந்து கூறுகிறார்.
புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், "பாலின சமத்துவம்" மட்டுமே என்று அவர் கூறுகிறார்.
"குழந்தைகள் பிறந்தது முதல் நாம் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று வேறுபடுத்துகிறோம் - நாம் அவர்களுக்கு வெவ்வேறு பொம்மைகளை வாங்கிக் கொடுக்கிறோம். ஆண் குழந்தைகளுக்கு துப்பாக்கிகளும், கார்களும் கிடைக்கும். பெண் குழந்தைகளுக்கு பொம்மைகள் கொடுப்போம். ஆண்களுக்கு நீல நிற உடையும், பெண்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளையும் அணிவார்கள். அவர்கள் வளரும்போது, அவர்களின் காலணிகளும், ஆடைகளும் கூட வெவ்வேறாக இருக்கும்.
"ஆனால், பெண் பிள்ளைகளுக்கு கால் சட்டைகளும், சட்டைகளும் அணிவது மிகவும் வசதியாகவும் ஊக்கமளிக்க கூடியதாக இருந்தால், அவர்கள் அவற்றை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சுதந்திரமும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார இந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக