மாலைமலர் : தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அங்கு பணிபுரியும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா, கம்ப்யூட்டர் ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் வகுப்பறையில் இரட்டை அர்த்தங்களில் பேசுவது, தவறான நோக்கத்தில் தொடுவது, மாணவிகள் வீட்டுக்கு சென்ற பின்பும் செல்போனில் பேசி தொல்லை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தியபோது மாணவிகளின் புகாரில் உண்மைதன்மை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார், மாணவிகள் மீதான பாலியல் தொல்லை குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராமராஜாவை கைது செய்தனர்.
மற்றொரு ஆசிரியரான ஆல்பர்ட் வளவன் பாபுவை தேடி வருகின்றனர். அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக