சனி, 25 டிசம்பர், 2021

திருமாவளவன் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன் முயற்சி எடுக்க வேண்டும்

 மின்னம்பலம் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது வைகோவுக்கும், காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது குடியரசுக் கட்சி மூத்த தலைவர் கரியமால், காயிதே மில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் தமிழ் மாநில தலைவர் பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் முனைவர் ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    டிசம்பர் 24 ஆம் தேதி மாலை பெரியார் திடலில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன்,“அண்ணன் நெல்லை கண்ணன் பேசும்போது பல்வேறு செய்திகளை பகிர்ந்துகொண்டார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திமுகவும் என்றைக்கும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார். திருமாவளவனை விட்டுவிடாதீர்கள் அவர் என்றைக்கும் உங்களது படைத் தளபதியாக இருப்பார் என்று முதல்வரை நோக்கி அவர் சொன்னது, திருமாவளவன் மீதான பரிதாபம் பச்சாதாபம் அடிப்படையில் அல்ல. தமிழ்நாட்டின் மீதான தமிழ் சமூகத்தின் மீதான அக்கறையை பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.அந்த அடிப்படையில்தான் திமுகவோடு கருத்தியல் சார்ந்த கொள்கை சார்ந்த உறவை பேணி பாதுகாத்து வருகிறோம்.

2009 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்தபோது அப்போதைய முதல்வர் கலைஞர், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்களோடுதான் இருக்கிறது. சிறுத்தைகளுக்கும் திமுகவுக்கும் உள்ளது தேர்தல் உறவு மட்டுமல்ல கொள்கை சார்ந்த உறவு’ என்று கூறினார். அந்த தேர்தலில் ஈழப் பிரச்சினையால் நாங்கள் ஊசலாட்டத்தில் இருந்தோம். அந்த நிலையில்தான் கலைஞர் சொன்ன கருத்து எங்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்துக்கே ஆபத்து சூழ்ந்திருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்னால் ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி சங் பரிவாரை சேர்ந்தவர்கள் சங்கல்பம், உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்ததேசம் இந்துக்களுக்கான தேசம். அதை உருவாக்குவதற்காக யுத்தம் புரிவோம். இல்லையென்றால் செத்து மடிவோம். அவர்களைக் கொல்லுவோம்’ என்று உறுதிமொழி ஏற்றிருக்கிறார்.

பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர்கோயில் கட்டும் பணிகள் நடக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்டது. மூன்றாவதாக பொது சிவில் சட்டம் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் எடுக்கிறார்கள்.

அவர்களின் வெறுப்பு அரசியலில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு மண் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு பாதுகாப்பாக இருந்தது திராவிட இயக்கங்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தப்பித் தவறி கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? யார் இங்கே கொட்டமடித்திருப்பார்கள்? உண்மையிலேயே அது பாஜக ஆட்சியாகத்தான் இருந்திருக்கும். அவதூறுகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பத்தாண்டு காலம் தமிழ்நாட்டுக்கு அதிமுக செய்த துரோகத்தால் இங்கே பாஜக தைரியமாக பேசுகிறது.

பாஜகவை தடுக்கும் ஆளுமை கொண்டது திமுகவும் அண்ணன் தளபதி அவர்களும்தான். இது வெறும் முகஸ்துதி அல்ல. பாஜகவுக்கு எதிரான செயல்பாடுகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே சமூக தளங்களில் அவதூறு பற்றி சிறுத்தைகள் கவலைப்பட மாட்டோம். திமுக வுடன் இணைந்து பாஜகவை எதிர்ப்பதுதான் சிறுத்தைகளின் உத்தி” என்று பேசிய திருமாளவன் தன் பேச்சில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளையும் முன் வைத்தார்.

“வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறி பாஜக வெற்றிபெறுமேயானால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டுக்கும் பெரும் ஆபத்தாகிவிடும். இந்தக் கூட்டத்தின் வாயிலாக என் அண்ணன் முதல்வர் ஸ்டாலினுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள்... அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க கூடிய தகுதியும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்திருக்கிறார்கள். அதிமுகவை விட நாங்கள்தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோமென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருகிறார்கள். இந்த அல்லு சில்லுகளை, அற்பர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் அகில இந்திய அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டை மட்டும் பாதுகாத்தால் போதாது. இந்தியாவையும் பாதுகாக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத பாஜக அல்லாத அணியை அமைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். திமுக அப்படிப்பட்ட அணிக்கு துணை நின்றுவிடக் கூடாது என்று உரிமையோடு கேட்கிறேன். காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை கட்டினால் அது பாஜகவுக்கு சாதகமாகவே முடியும். எனவே 2024 தேர்தல் வியூகத்தை அமைக்கும் இடத்தில் கலைஞரைப் போல நீங்கள் (ஸ்டாலின்) இருந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார் திருமாவளவன்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: