வெள்ளி, 24 டிசம்பர், 2021

ஈஷா யோகா ஜாக்கியின் யானை வழித்தட ஆக்கிரமிப் பு- மீண்டும் ஆய்வு ! அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி

  Mathivanan Maran -   Oneindia Tamil :  s தஞ்சாவூர்: ஈசா யோகா மையத்தின் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்ட விவசாயிகள், எம்.எல்.ஏபங்கேற்ற ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், விளைநிலங்களை பாழ்படுத்தும் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் கூட ஆக்கிரமிக்கவில்லை என ஏற்கனவே அறிக்கை கொடுத்திருக்கிறது. வனத்துறையின் அருகில் உள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் குரங்குகள், மயில், காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். 10 ஆண்டுகளில் வனப்பரப்பை 33% ஆக விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.. இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

ஈஷா மைய விவகாரம் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா அறக்கட்டளை, ஈஷா யோகா மையம் ஆகியவற்றை ஜக்கி வாசுதேவ் அமைத்திருக்கிறது. இவைகள் அமைந்துள்ள வனப்பகுதி போலுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்டது. இப்பகுதியில் அரசின் அனுமதியின்றி ஈஷா யோக மையம் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளது என்பது புகார். யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்திருக்கிறது என்பதும் குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றும் வருகின்றன.

ஈஷா மையம் சர்ச்சை கடந்த அதிமுக ஆட்சியில் ஈஷா மையத்தின் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுசரணை காட்டப்பட்டது. அதற்கு ஏதுவாக அரசாணைகள் வெளியிடப்பட்டு சர்ச்சையானது. ஈஷா யோகா மையம் வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தற்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது.

அரசு பதிலால் அதிர்ச்சி இந்நிலையில் அண்மையில் ஆர்.டி.ஐ. மூலமாக தெரிவிக்கப்பட்ட பதிலில், வனப்பகுதியில் ஈஷா மையம் ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. வனத்தில் ஈஷாவின் கட்டடங்கள் எதுவும் கட்டப்படவில்லை. கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பது இல்லை. ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தை இடைமறித்து கட்டப்பட்டதாக சொல்ல முடியாது. யானை வழித்தடங்கள் எதுவும் ஈஷா யோகா மையம் அருகில் இல்லை. யானைகளின் வாழ்விடங்களையும் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் மிகப் பெரும் பாரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மீண்டும் ஆய்வு நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: