நக்கீரன் - ராஜ்ப்ரியன் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். அவரது மனைவி கோமதி. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, சமீபத்தில் கோமதி கருவுற்றார். தனியார் மருத்துவமனையில் தொடர் பரிசோதனை செய்துவந்துள்ளனர். அவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் தோராயமாக தேதி குறித்திருந்தனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட நாளில் மனைவிக்குப் பிரசவ வலி வரவில்லை, ஐந்து நாள் தாமதமாக டிசம்பர் 18ஆம் தேதி கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லோகநாதன், அவருடைய அக்கா ஆகியோர் யூடியூபில் உள்ள பிரசவ வீடியோக்களைப் பார்த்து, அதன்படி பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாகிவிட்டதை அடுத்து அவரை அவசரமாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், தீவிர உயர் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்த தகவல் வெளியானதும் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோமதி, அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், கிராம செவிலியர்கள் போன்றவர்களிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக