சனி, 25 டிசம்பர், 2021

உயிர் பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்: 9-வது முறையாக ஏமாற்ற முயன்றபோது கைது ... பெங்களூர்

Karnataka coronavirus update: 1,262 new Covid-19 cases, 17 deaths |  Business Standard News
file pictue

மாலைமலர் : ஒரு டோஸ் தடுப்பூசி போடவே பலர் பயந்து வரும் நிலையில் உயிர் பயத்தில் போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு:  கொரோனா என்ற கொடிய அரக்கன் இந்தியாவில் காலூன்றி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் அதன் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. இதற்கிடையே ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் மக்களை காக்க மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. ஒரு நபர் 2 டோஸ் தடுப்பூசி போட அரசு அனுமதி உள்ளது. அத்துடன் ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

நகரப்பகுதிகளில் உள்ள மக்கள் தன்னார்வமாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால் கிராமப்புற மக்கள் உயிர் பயத்தில் தடுப்பூசி போடாமல் சாக்குப்போக்கு கூறி வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப்புற மக்கள் தடுப்பூசி போடாமல் இருக்க காலையிலேயே மதுகுடிப்பது, சாமி வந்தது போல் ஆடி சுகாதாரத்துறையினரை விரட்டிவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதனால் கிராமப்புற மக்களிடம் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா வந்துவிடுமோ என்ற உயிர் பயத்தில் கர்நாடகத்தில் ஒரே நபர் தில்லுமுல்லு செய்து 8 தடவை தடுப்பூசி போட்டுள்ளார். 9-வது தடவையாக தடுப்பூசி போட முயன்ற போது அவர் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார். இந்த வினோத சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் தான் நடந்துள்ளது.

பெலகாவி டவுன் சார்லிராய் நகரை சேர்ந்த ஒருவர், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைக்கும் கொரோனாவில் இருந்து உயிர் தப்பிக்க நூதன ஐடியாவை கையாண்டுள்ளார். அதாவது கொரோனா தாக்காமல் இருக்க போலியான முகவரி, செல்போன் எண்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து 8 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.

ஆனால் அதுவரை அந்த நபரின் தில்லுமுல்லு பற்றி சுகாதாரத்துறையினருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இந்த நிலையில் 9-வது டோஸ் தடுப்பூசி போட அவர் அந்தப் பகுதியில் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். அவர் கொடுத்த ஆவணங்கள் தவறாக இருந்துள்ளது. இதனை மருத்துவ ஊழியர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான் போலி ஆவணம் மூலம் அவர் தடுப்பூசி போட முயன்றதும், அவர் ஏற்கனவே இவ்வாறு போலி ஆவணம் கொடுத்து 8 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்த குட்டும் அம்பலமானது.

உடனே தடுப்பூசி முகாம் அதிகாரி, பெலகாவி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 9-வது டோஸ் தடுப்பூசி போட முயன்ற நபரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு டோஸ் தடுப்பூசி போடவே பலர் பயந்து வரும் நிலையில் உயிர் பயத்தில் போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.

மேலும் 8 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவருக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: