Vigneshkumar - Oneindia Tamil: திருச்சி: சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகனை தில்லைநகர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் உள்ளன.
இதற்கிடையே கடந்த புதன்கிழமை இரவு விடுதியில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விடுதி நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் சனிக்கிழமை அதிகாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். முக்கிய நெடுஞ்சாலை என்பதால் சாலையில் இரண்டு புறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும், சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோ காலில் பேசினார். மேலும், கெட்டுப்போன உணவு அளித்த விடுதி வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாகச் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்ரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். தனது முதல் ட்வீட்டில், 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அடுத்த ட்வீட்டில், "சீன நிறுவனமான Foxconnல் பணிபுரிந்த பெண்களில் 57 பேருக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி மயக்கம். இதுவரை 9 பெண்கள் இறந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் ஃபாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியதாகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லைநகர் க்ரைம் போலீசார் சாட்டை துரைமுருகனைக் கைது செய்துள்ளனர். ஃபாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக அவர் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்படுவது இது முதல்முறை இல்லை. சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், தொடர்ந்து திமுக தலைவர்கள் குறித்து மிக மோசமான கருத்துகளை உள்ளடக்கிய வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்தச் சூழலில் கடந்த அக்டோபரில் தக்கலையில் நடந்த நாம் தமிழர் ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதால் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் அவர் மீண்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக