புதன், 22 டிசம்பர், 2021

சிசேரியன் என்பது சில்லறைக்கு செய்யும் மருத்துவ சேவையா?

 Loganayaki Lona  :  சிசேரியன் என்பது சில்லறைக்கு செய்யும் மருத்துவ சேவையா?
பிரசவத்தில் தாய்  சடலமாக ஆகாமல் இந்த தலைமுறைக் குழந்தைகள் அதே தாயிடம் வளர மிக முக்கியக்காரணம் இந்த நவீன மருத்துவத்தின் வரம் என்றால் அது மிகையல்ல.பாராட்ட வேண்டிய அறிவியல் வளர்ச்சியை உணவுக்கலப்படம் எனும் பொதுப் பிரச்சனைக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் இடையே பொறுத்தி விமர்சிப்பதை மறுத்தே இக்கட்டுரை எழுதும் எண்ணம் வந்தது. இதைக் குறித்து விரிவாக அலசும் முன் எதார்த்தமான இயற்கை ப்ரசவம் குறித்து பார்க்கலாம்.
பிரசவ காலம் முடிந்து குழந்தை அம்மாவின் இடுப்பெலும்பு எனும் பாதுகாப்பு அரணில் இருந்து 8 முதல் 14 மணி நேர வலி என்னும் போராட்டம் கடந்து  கருப்பையின் வாய் திறந்து, பிறப்புறுப்பின் வழியாக உதிரம் கொட்ட  வெளியேறி வருவது இயற்கைப் ப்ரசவம் ஆகும்.இதிலும் பிறப்புறுப்பில் கீறலிட்டே (Episiotomy)குழந்தை எடுக்கப்படும்.
குழந்தை சுகமாக பிறந்து வருவதால் சுகப்பிரசவம் எனலாம்.அம்மாவுக்கு இதில் ஏது சுகம்? உயிர் போகும் வழியில் அய்யோ! எனக்கு இந்த  குழந்தையே வேண்டாம் டாக்டர்…. என்பர் பல பெண்கள். குழந்தை.பிறந்தவுடன் எல்லாம் மறப்பர்.இது தான் அந்த வலி காலக்கட்டத்தில் எதார்த்தமாக நடப்பதாக இருக்கிறது.
இது இயற்கை முறை.பாதுகாப்பானது.அதிக இடர்பாடுகள் பிரசவத்துக்கு பின் பெண்களுக்கு இல்லை என்பது சரியே.அதே சமயத்தில்,இந்த ப்ரசவம் எல்லாப்பெண்களாலும் சாத்தியமா? என்றால், நவீன மருத்துவ ஆய்வுகள் இல்லை என்கிறது.ஏன் சாத்தியமில்லை? மிருகங்கள் சிசேரியனா செய்து கொள்கிறது என்கிறார்கள் அறியாமையில் இருக்கும் இயற்கை விரும்பிகள்.
மிருகம் போல் மனிதப் பெண்கள் வாழ்க்கை நிலை இல்லை.உடலமைப்பு இல்லை.அதுமட்டுமல்ல மிருகங்கள் ப்ரசவத்தில் இறந்ததே இல்லை என எந்த இயற்கை மருத்துவராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்ற கேள்வியையும் வைக்கிறேன்.எல்லா விதத்திலும் மேம்பட்ட மனித சமூகம் மருத்துவத்தில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மேம்பட்டதன் விளைவே சிசேரியன் .இனி இந்த சிசேரியன் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிசேரியன் என்றால் என்ன?
இயற்கைப்ப்ரசவத்துக்கு கருப்பை மற்றும் இதர அமைப்புகள் ஒத்துழைக்காத பெண்களுக்கு,  முதுகுத்தண்டில் வலி உணரா மருந்து (முழு மயக்கம் அல்ல) அளித்து, வயிற்றின் அடிப்பகுதியில் கீறலிட்டு ,அதனடிப்பகுதியில் கருப்பையிலும் கீறலிட்டு குழந்தையை வெளியில் செயற்கை முறையில் எடுத்தலும்,குழந்தைக்கு குழந்தை நல மருத்துவர் உடனடி சிகிச்சை,உயிர்ப் பாதுகாப்பு வழிமுறை செய்தலும்,தாய்க்கு கீறிய பகுதியை கிருமி நீக்கும் முறைகளை சரியாகப் பின்பற்றி மீண்டும் ஓட்டும் முறையிலோ,தைத்து விடும் முறையிலோ   ஒன்றிணைத்தல்.இந்த அறுவை சிகிச்சையையே  சிசேரியன் என்கிறோம்.
சிசேரியன் தேவைப்படும் நபர்கள் யார்?
ப்ரசவ காலத்தில் திடீரென சிசேரியன் தேவைப்படும் காரணங்களாக ,
கருப்பை வாய் ஓரளவு திறந்த பின் ,மேற்படி இன்னும்  நடக்க வேண்டிய முன்னேற்றம் இன்றி கருப்பைக்குள் உள்ள நீரும் வெளியேறி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் (emergency caesarian) உடனடியாக உறவினரிடம் அறிவுறுத்தி சிசேரியன் செய்யப்படும்.
குழந்தை பிறப்பதற்கு முன் மலக் கழிவுகளை வயிற்றில் வெளியேற்றி அதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் (mecconium strained aspiration pneumonia) உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க துரித அறுவைசிகிச்சை செய்யப்படும்.
கர்ப்ப காலத்திலேயே சிசேரியன் செய்வது தாய்,சேய்க்கு நலம் என தீர்மானிக்கும் காரணங்கள்:
.பெண்களுக்கு 4 வகையான இடுப்பெலும்புகள் இருக்கிறது.அதில் ஒருவகையான எலும்பு மிகவும் குறுகலாக இருக்கும்.( உயரம் குறைவான பெண்களில் சிலர் இது போன்ற எலும்பமைப்பை பெற்றிருப்பர்.இப்பாதை வழி குழந்தை வருவது கடினம் என்பதால் இவர்களுக்கு சிசேரியன் தவிர வேறு வழி இல்லை.
.கருப்பையில் நஞ்சுக்கொடி குழந்தையின் தலைக்கு முன்பாக இருத்தல்(placenta praevia).இது தாய்க்கு அதிக ரத்தப்போக்கை உருவாக்கும் என்பதால் ப்ரசவ காலம் முழுவதுமே கண்காணிப்பும் ,சிசேரியனும் தேவை.
.குழந்தையின் தலைக்கு பதிலாக முதுகுப்பகுதி (breech presentation) கருப்பையில்  கீழாக இருத்தல்.இறுதி மூன்று மாதத்தில் இந்நிலை தொடர்ந்தால் சிசேரியன் தேவை.
ப்ரசவதேதிக்கு பின்பும் ,குழந்தை முழு வளர்ச்சி அடைந்த பின்னும் தாய்க்கு ப்ரசவ வலி வராமல் இருத்தல்,
இரட்டைகுழந்தைகள்,3 குழந்தைகள் கருவுற்ற சில பெண்களுக்கு,குழந்தைகள் கருப்பையில் இருக்கும் அமைப்பு பொறுத்து சிசேரியன் தேவைப்படலாம்.எல்லோருக்கும் தேவையில்லை.பலருக்கு இயற்கை ப்ரசவம் நடக்கும்.
குழந்தை வெளியேறும் அமைப்புக்கு வந்தபின் .நஞ்சுக்கொடி கழுத்தை சுற்றி இருத்தல்,(cord around the neck).நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தை நெறித்து குழந்தை இறந்து விடும்.இப்படி பல குழந்தைகள் இறந்திருக்ககூடும் .அப்போது தாய்க்கு ஆறுதலாக தாய்மாமனுக்கு ஆகாது தாயி ,இந்தப்புள்ள இருந்தானு சொல்லிருக்கலாம்.அதுவே இன்னும் மூடநம்பிக்கையாய் தொடர்கிறது.
நோய்க்காரணங்கள்:
கருக்கால சர்க்கரை,உயர் ரத்த அழுத்தம்,வலிப்பு நோய்,இருதய நோய் உள்ள பெண்களுக்கு சிசேரியன் நவீன மருத்துவத்தின் வரம்.
சர்க்கரை நோய்ப்பெண்களின் குழந்தை அதிக எடையுடன் பொதுவாக இருக்கும்.5கிலோ வரை உள்ள குழந்தையை சிசேரியன் செய்து எடுப்பதே தாய்க்கு நலம்.
தொற்று நோய்கள்:
தாய்க்கு எச்.ஐ.வி(HIV) ,எச்.பி.எஸ்.ஏ.ஜி(HBSAG),பால்வினை நோய்கள் இருப்பின் குழந்தைக்கு பரவாமல் தடுக்க சிசேரியன் செய்து குழந்தையை நோயிலிருந்து காக்கலாம்.
அறுவைசிகிச்சைக்கு  செய்தால் குழந்தை வளர்ப்பு பாதிக்குமா?
சிசேரியன் செய்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்க இயலாதா?
முதல் 6 மணி நேரத்துக்கு பின் கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்கலாம்.மயக்க மருந்தின் தாக்கத்தில் இருந்து மீளவே இந்த 6 மணி நேர இடைவெளி.
குழந்தையை பார்க்க முடியாதா?
பிறந்தவுடன் குழந்தையைத் தாய் பார்க்கவும் செய்யலாம்.ஸ்பைனல் வழி மயக்கம் கொடுப்பதால் வலி மட்டுமே தெரியாது.முழு நினைவு தாய்க்கு இருக்கும்.
அதிக ஓய்வு தேவையா?
5 நாட்கள் மருத்துவமனை கவனிப்பு தேவையாகும்.3 ஆம் நாள் முதலே நடக்கலாம்.அதிக எடை தூக்குதல்,வயிற்றுப்பகுதி சதைக்கு கடினத்தன்மை கொடுக்கும் செயல்களை தவிர்த்தல் போதுமானது.
பின் விளைவுகளாக அம்மாவின் உடல்நலத்துக்கு கேடா?
தாய், சேய் நலன் கருதி மட்டும் சிசேரியன் செய்யப்படும் பட்சத்தில் உயிர்காக்கும் கருவியாக சிசேரியன் எனும் முடிவை எடுக்கிறோம்.
மற்றபாதிப்புகள் உயிர் போவதை விட குறைவானதே.தண்டுவடத்தின் வழி மயக்க மருந்து கொடுப்பதால் தலைவலி,முதுகுவலி பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு.சிலருக்கு ஹெர்னியா போன்ற ப்ரச்சனைகள் பிற்கால வாழ்வில் வரலாம்.
சிசேரியன் வரலாற்றுப்புரட்டுகளும்,உண்மைகளும்.
1.வரலாற்றின் அரிதியிட்டு எப்போது உருவானது என்பதை கணிக்க இயலாது.ஜூலியஸ் சீசர் சிசேரியனில் பிறந்தவர் என்பது புரட்டான செய்தியாகும்.அவரின் தாயார் உயிருடன் இருந்ததாகவே வரலாறு கூறுகிறது.கிளியோபாட்ராக்கும்,ஜூலியஸ் சீசருக்கும் பிறந்த குழந்தையின் பெயர் சிசேரியன் என்பது தவிர இதுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.
2.சிசேரியன் தேவைப்படும் காரணங்களுக்கு ,நாகரீக வளர்ச்சி அடையாத காலத்தில் உயிரிழப்புகளையே சந்தித்திருப்பார்கள்.இந்தியாவில் பிந்துசாரர் எனும் மன்னரின் தாய் பிரசவத்தில் இறந்ததால்,தாயின் வயிற்றைக்கீறியே அக்குழந்தையை எடுத்தார்களாம்.மன்னர் அசோகரின் தந்தையே இந்த பிந்துசாரர் என்பதை சமீபத்தில் படித்ததில் அறிந்தேன்.தாய் இறந்த பின் கருவில் உள்ள குழந்தையை எடுக்க இம்முறை ரோமில் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  
.
கிபி.1900 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமானது,
சிசேரியனும் மூடநம்பிக்கையும்:
அறிவியல் காரணங்கள்,தேவைகள் இல்லாமல் ஜோதிடக்காரணங்களுக்காக(இந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று அறுவைசிகிச்சை கேட்டல்) சிசேரியன் செய்வது நடுத்தர,உயர் நடுத்தர வர்க்கத்தில்,உயர் வர்க்கத்தில் இப்போது அதிகமாகிவருகிறது.
”மூடநம்பிக்கையை ஒழிக்க ஆயுதமே அறிவியல்” என்பதை உணர்ந்து இது போன்ற காரணங்களுக்கு சிசேரியன் செய்வதும்,கேட்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவையன்றி வேறு காரணங்களுக்காக சிசேரியனை எதிர்ப்பது பெண் இனத்துக்கு ஆபத்தானதாகும்.பிரசவத்தில் தாய் சேய் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதே இதற்கு சான்றாகும்.
இருதய நோயாளியாக வாழும் பெண்கள் 50 வயது கடந்து குடும்பத்தோடு வாழ்வதை பார்க்கும் போது ஒரு கர்வம் வருகிறது.சிசேரியன் எனும் கண்டுபிடிப்பு இல்லையேல் ஒரு குழந்தை பிறக்க ஒவ்வொரு இருதய நோயாளிப்பெண்ணும் உயிரை இழந்தாள்.
”மருத்துவம் என்ற உயிர் காக்கும் சேவை” தனியாரிடம் இருக்கும்வரை அது மக்களுக்கானதாக முழுமையாக செயல்படாது.வியாபார நோக்கத்துடன் செயல்படுவதை தவிர்க்கவும் முடியாது.இது அனைத்து வித மருத்துவத்துறைக்கும் பொருந்தும்.நாங்க மட்டும்தான் யோக்கியம்னு முன் வரும் அனைவரும் ஏமாற்றவே செய்கிறார்கள்.மக்கள் தங்கள் தேவை சார்ந்து,விழிப்புணர்வுடன் பிரசவ காலத்தை அணுகுதல் நன்று.
லோகநாயகி.செ
Nursing Activist
(ஒவ்வொரு ப்ரசவ கொலைகளின் போதும் இப்பதிவை பகிர்கிறேன்.கொலைகளும் தொடர்கதையாக இருக்கிறது)

கருத்துகள் இல்லை: