புதன், 22 டிசம்பர், 2021

இளம் பெண் தொழிலாளர்களும் ஃபாக்ஸ்கானின் கொடிய சுரண்டலும்

May be an image of one or more people, people sitting, people standing and outdoors

Chinniah Kasi  :  இளம் பெண் தொழிலாளர்களும் ஃபாக்ஸ்கானின் கொடிய சுரண்டலும்
- எஸ்.கண்ணன்
தீக்கதிர்,  டிசம்பர் 21, 2021
பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சர்ச்சைக் குரிய தொழிற்சாலையாக ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் மாறியுள்ளது. தங்கியிருந்த விடுதியில் வழங்கப்பட்ட உணவில் இருந்த விஷத் தன்மை காரணமாக, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உபாதைகளுக்கு உள்ளாகி, 159 இளம் பெண் தொழி லாளர்கள், 9 மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இறந்து விட்டதாக வாய் மொழியாக பரவிய செய்தி, சமூக வலைத்தளத்தில் தீவிரமாக பரவி பெரும் போராட்டமாக மாறியது. போ ராட்டத்தை நடத்திய இளம் பெண் தொழிலாளர்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து, உறுதியாக நின்றது பலரையும் பேச வைத்த உண்மை. இந்த நிகழ்வை பல கோணங்களில் அலசி ஆராய்ந்தாலும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் செயல்பாடு, காண்ட்ராக்ட் நிறுவ னம் மற்றும் அதன் செயல்பாடு, அரசு மற்றும் அதிகாரி கள், பல்வேறு அனுபவங்கள் ஆகிய பின்னணியில் விவாதிக்க வேண்டியுள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம்


மேலே கூறிய நிகழ்வுகள் நடந்தது, ஹான் ஹாய் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆகும். இது 1974ல் தைவானில் துவங்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள எலக்ட்ரா னிக் தொழிற்சாலைகளில் 4ஆம் இடத்தில் உள்ளது. 12 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் ஆலைகளில் பணி புரி கின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ஐ போன், நோக்கியா உள்ளிட்ட உலகப் புகழ் வாய்ந்த தரமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது.
ஏராளமான தொழிலாளர் விரோத, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, நவதாராள மயக் கொள்கையின் ஆதரவுடன், வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த 2010 செப்டம்பரில், விஷ வாயு கசிவு காரணமாக, ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 200 தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டனர். அன்றும் 58 நாள்கள் வேலைநிறுத்தம் நடந்து, 300க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களுடன் சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், இ.முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். பெரும் போராட்டம் நடந்து,  தீர்வு உருவானது. இதே காலத்தில் சீனாவில் இந்நிறு வனத்தின் தொழிலாளர்கள் தற்கொலை போன்ற பிரச்ச னைகள் உருவாகி, இந்த நிறுவனத்தின் மீது சர்வதேச சமூக்கத்தின் அழுத்தம் அதிகமானது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒரு போதும் தொழிலாளர்களின் உரிமை களை மதிப்பதில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா உற்பத்தியை நிறுத்திய போது, ஃபாக்ஸ்கான் நிறுவனமும் உற் பத்தியை நிறுத்துவதாக அறிவித்து, தற்காலிகமாக ஆலையை மூடியது. ஆலையை மூடும்போது, மீண்டும் ஆலை திறக்கப்பட்டால், வேலை இழந்த தொழிலா ளர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக எழுத்துப் பூர்வமாக ஒப்புக் கொண்டது. ஆனால் 2016 ல் மீண்டும் ஆலையை வேறு வேறு பெயர்களில் திறந்து செயல்படுத்தியது. ஒப்புக் கொண்டதைப் போல், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவில்லை.
மாறாக 6000 இளம் பெண் தொழிலாளர்கள் வேலை க்கு அமர்த்தப்பட்டனர். அனைவரும் ஒப்பந்த அடிப் படையில் மட்டுமே நியமிக்கப்பட்டனர். நிரந்தரமான ஊழியர்கள் நியமனம் இல்லை. குறைவான கூலி, வேலை நிரந்தரமில்லை என்ற அச்சத்திலேயே வேலை செய்ய அனுமதித்தல், மிகுந்த உற்பத்தி அளிக்கும் இளம் தொழிலாளர்கள் என்பது மிகப்பெரிய மூலதன குவிப்புக்கு வழிவகுக்கும் ஏற்பாடு ஆகும். குறிப்பாக இந்திய சந்தையில் விற்பனை ஆகும் அனைத்து கைபேசிகளும் இங்கு தான் உற்பத்தி ஆகிறது. பிற நாடுகளுக்கும் கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது போன்ற பெரும் உழைப்புச் சுரண்டல் காரணமா கவே ஃபாக்ஸ்கான், உலகப்பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
காண்ட்ராக்ட்  மற்றும் அதன் செயல்பாடு
ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் காண்ட்ராக்ட் எடுத்துள்ளவர்கள், சாதாரண நபர்கள் அல்ல. இன்று கட்டுமான பணிகள், சாலை செப்பனி டுதல் போன்ற பணிகளில் காண்ட்ராக்ட் எடுத்து, பணி செய்வதில் கிடைக்கும் லாபவிகிதத்தை விட, பல மடங்கு அதிகமாக, தொழிலாளர்களை காண்ட்ராக்ட் (Man power Agency) எடுப்பதில் கிடைக்கிறது. இதற்கு முதலீடு பெரிதாக இல்லை. ஆனால் இந்த காண்ட் ராக்ட்தாரர்களே ஏகபோக செல்வந்தர்களாக உள்ள னர். தமிழ் நாட்டில், தமிழகத்தை சார்ந்த பெரும் பணக்காரர்கள் மட்டுமல்லாது, வடமாநில தொழில் அதிபர்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.  டி.வி.எஸ் போன்ற உற்பத்தி குழுமத்தில் கூட, டி.வி.எஸ் சப்ளை  செயின், டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் எல்லோரும், ‘அமர்த்து- துரத்து’ (Hire and fire) என்ற கொள்கைக்கு இலக்கான வர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ஹான் ஹாய் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 7 காண்ட்ராக்ட்தாரர்கள் உள்ளதாக தெரிகிறது. ஒவ்வொருவரும் சுமார் 1000 தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புகின்ற னர். கடந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு களாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.12000 மட்டுமே ஊதியம். ஒரு காண்ட்ராக்ட்தாரரிடம் ஓராண்டு வேலை செய்து, வேறு ஒரு காண்ட்ராக்ட்தாரரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டு, வேறு நிறுவனத்தில் வேலை செய்வதாக தெரிவிக்கப்படுவதாக தொழிலா ளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் நிரந்தர வேலை வாய்ப்பு கோரும் உரிமையை இந்த பெண் தொழிலாளி இழக்கிறார்.
காண்ட்ராக்ட் எடுக்கும் நபர்கள் முன்னாள் இந்நாள் ஆளும் கட்சி பிரமுகர்களாக இருப்பது வெளிப்படை யாகத் தெரிகிறது. போதாக்குறைக்கு, இந்த காண்ட் ராக்ட் தாரர்கள் வசமே உணவு வழங்கும் பொறுப்பும், தங்குமிட வசதியும் கட்டணத்திற்கு வழங்கப்படுவதால், அதன் மூலமான வருவாயும் கண்ணை மறைக்கும் அதிகாரம் கொண்டதாக மாற்றுகிறது. தற்போது போராடிய தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகள் போல் தான் நடத்தப்பட்டுள்ளனர். மனித நாகரீக விழுமியங்களையும் தமிழகத்தில் சுயமரியாதை போராட்டங்கள் உருவாக்கிய விழுமியங்களையும் முடை நாற்றத்திற்குள் தள்ளும் செயலுக்கு இட்டு சென்றுள்ளது. எனவே தான் தொழிலாளர்கள் உண்மையான செய்திக்காக காத்திருக்க எண்ணாமல் இதை, போராடக் கிடைத்த வாய்ப்பாக கருதினர்.
அரசும் அதிகாரிகளும்
கடந்த ஆட்சியில் காணாத நல்ல விஷயம், வாந்தி-  வயிற்று போக்கு குறித்த செய்தி அறிந்த, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பூந்தமல்லி அருகில் உள்ள விடுதியில் இருந்த இளம் பெண் தொழிலாளர்களைச் சந்தித்துள்ளார். ஆனால் விவரங்களைச் சேகரித்த அமைச்சர், அதை பத்தி ரிக்கைகளில் வெளியிடவில்லை. தொழிலாளர்கள் மத்தியில் இருந்த அச்சத்தைப் போக்கும் நடவடிக்கை யில் ஈடுபடவில்லை. மாறாக ஆறுதலான வார்த்தைகள் போதும் என்ற முடிவுக்கு வந்து, அதற்கான ஏற்பாடு களை செய்துள்ளார். இது நிச்சயம் போதாது. 6000 க்கும் மேற்பட்ட இளம் பெண் தொழிலாளர்களின் உறவினர் களை திருப்திப்படுத்தும் விளக்கங்கள் இல்லை.
நவதாராளமய கொள்கை எந்த ஒரு அதிகாரிக்கும் அதிகாரம் அளித்ததாக தெரியவில்லை. ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதானி நிறுவனத்துடன் சேர்ந்து, மகாராஷ் டிரா மாநிலத்தில் கூட்டாக ஆலையை துவக்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இத்தகைய பெரும் நிறுவனங்கள் இணைந்த கூட்டு நிறுவனங்களு க்கு அருகே செல்லவும் அதை ஆய்வு செய்யவும் அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் இல்லை. பாஜக ஆட்சி முன்வைத்துள்ள தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சட்டத் தொகுப்பில், ஆய்வா ளர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. நகமும், பல்லும் பிடுங்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் உள்ள னர். மற்றொரு புறம் அதிகார வர்க்கமும் கார்ப்பரேட் நிறு வனங்களுடன் கள்ள  உறவு கொண்டவர்களாக மாறி யுள்ளனர். பணி ஓய்வுக்கு பின் தொழிற்சாலைகளில் அவர்கள் ஆலோசகர்களாக மாறியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் தொழிற் சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது லோடிங், அன் லோடிங் அல்லது தோட்ட வேலைகள் என்ற பெயர்களில் அனுமதிக்கப்படுகின்ற னர். நேரடி உற்பத்தி பணிகளுக்கு அனுமதி கேட்கவோ,  வழங்கவோ முடியாது. இங்கு 6000 தொழிலாளர்கள் எப்படி காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரிய அனு மதிக்கப்பட்டனர்? இது அரசியல் செல்வாக்கு இல்லா மல் சாத்தியமாகாது. இதன் காரணமாகவே, காண்ட் ராக்ட்தாரர் நடத்திய விடுதிகளை அதிகாரிகள் பார்வை யிடவில்லை. அங்கு 10 க்கு 10 அளவு கொண்ட அறையில் 7 அல்லது எட்டு பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு அனுபவங்கள்
நம்நாட்டில் காவல்துறை ஒரு நிகழ்வில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும். ஆனால் ஒரு வன்முறை  நிகழ்வு மீண்டும் நடவாத கொள்கை அமலாக்கத்தி னை, அரசும் அதிகாரிகளும் கண்காணித்து செய்வ தில்லை. பெங்களூரு அருகே, நரசபுரா என்ற ஊரில் அமைந்துள்ளது விஸ்ட்ரான் ஆலை. அதுவும் கைபேசி உற்பத்தி நிறுவனமே. அங்கு 8490 காண்ட்ராக்ட் தொழி லாளர்கள், மிகக்குறைவான நிரந்தர தொழிலாளர் கள், ஒப்பு கொண்ட ஊதிய உயர்வு வழங்க மறுத்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை உருவாக்கப் பட்டது. ஆலையின் பகுதிகள் தீக்கிரை ஆனது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதிலிருந்து நமது அரசுகளும் அதிகாரிகளும் என்ன பாடம் கற்றுக் கொண்டனர்?
ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலையில் அண்மை யில் நடந்த போராட்டம், மேலே குறிப்பிட்டதைப் போல் எல்லாவித புறக்கணிப்புகளையும் பொறுத்துக் கொள்ள முடியாத பின்னணியில் உருவானது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேல் பல ஆயிரம் பெண் தொழி லாளர்கள் சாலையில் அமர்ந்து போராடியது அவர்க ளின் வீர பிரதாபங்களை வெளிப்படுத்த அல்ல. அவர்கள் அனுபவித்த கொடுமைகளை உலகிற்குச் சொல்ல!
இந்தச் சம்பவத்தில் சில அதி தீவிர அமைப்பி னர்தான், பெண் தொழிலாளர்களில் சிலர் இறந்து விட்ட தாக செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது. இது தவறா னதே. ஏனென்றால், இந்த நவதாராளமய சுரண்டல் நிறைந்த காலத்தில்,இதே போன்ற பாதிப்பு எதிர் காலத்தில் உண்மையிலேயே நிகழும்போது, அதற்கு எதிராகப் போராடுவோரை, இந்த சமூகம், ‘வதந்தி பரப்புவோர்’ என்ற கண்ணாடி அணிந்தே பார்க்கும். இதற்கு இடம் தரக் கூடாது.  உண்மையில் சுரண்டல், வேலை இன்மை அதிக ரித்துள்ளது. அதற்கு எதிரான தீவிரமான போராட்டமே தேவை. அதை உருவாக்குவது அனைத்து முற்போக்கு சக்திகளின் கடமையாகும். அந்த வகையிலேயே, போராடும் இளம் பெண் தொழிலாளர்களுடன் கரம் கோர்த்து நிற்கிறது, செங்கொடி...!
கட்டுரையாளர் : சிஐடியு மாநில உதவிப் பொதுச் செயலாளர்

கருத்துகள் இல்லை: