மின்னம்பலம் : மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை!
அரசுத் தலைவரான முதலமைச்சரால் நேற்று (டிசம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பை இயக்கம், எங்கு, யார் யாரால் விதையாக இடப்பட்டது என்பதை உறுதிபடச் சொல்லமுடியாது என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய துணிப்பை இயக்கம் இதன் முன்னோடி எனக் கூறலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் புத்தகக் காட்சியில், ‘மழை மண் மரம் மானுடம்’ என்கிற குழுவினர், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் மிகப்பெரிய திருவிழாவான சென்னைப்
புத்தகக் காட்சியில் தொடங்கினால் நிச்சயமாக நல்ல பலன் தரும் என அந்தக்
குழுவினர் நம்பிக்கையுடன் தொடங்கினார்கள்.
முதலில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு எதிரான சில பதிப்பாளர்களிடம் இவர்கள் பேசி, ஒப்புக்கொள்ள வைத்தனர். இவர்களின் கருத்தை மற்ற பதிப்பாளர்களும் கவனிக்கத் தொடங்கினர். புத்தகக் காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்கத்தினரிடமும் ‘துணிப்பை’ இயக்கத்தினர் தங்களுடைய கருத்தை எடுத்துச்சொல்லி, ஏற்றுக்கொள்ள வைத்தனர். அடுத்தடுத்த புத்தகக் காட்சிகளில் துணிப்பை இயக்கமானது, அதன் போக்கில் பல குழுக்களாக மாறி விரிவடைந்தது. சுற்றுச்சூழல் ஆர்வம்கொண்ட பல குழுக்களும் தாமாக துணிப்பைப் பயன்பாட்டை வலியுறுத்தி கருத்துப் பரப்பலில் ஈடுபட்டன.
புத்தகக் காட்சியில் மட்டும்தான் என்றில்லாமல், சிறு சிறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகள், அறிமுக - விமர்சனக் கூட்டங்களிலும் கலை - இலக்கியத் திருவிழாக்களிலும் துணிப்பைப் பயன்பாட்டு இயக்கம் வளர்ந்துவருகிறது.
பல மாவட்டங்களிலும் பரவியுள்ள துணிப்பை இயக்கத்துக்கு முன்கை எடுத்த குழுவின் தொடக்கப்புள்ளி, சூழல் செயற்பாட்டாளரும் முனைவர் பட்ட ஆய்வாளருமான இரமேசு கருப்பையா. இவர், ஒரு பிசியோதெரப்பி மருத்துவரும்கூட. படிப்பை முடித்து சென்னையிலும் புதுச்சேரியிலும் பெரும் நிறுவன மருத்துவமனையில் பணியாற்றியவர், சுற்றுச்சூழல் காப்புச் செயல்பாடுகளில் இறங்கிவிட்டார். இப்போது, அரியலூர் - பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பது, விவசாயிகளுக்கு அவற்றைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தச் செய்வது என முனைப்பாகச் செயல்பட்டுவருகிறார்.
அரசின் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் பற்றிக் கேட்டோம்.
மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்தவர், விரிவாகப் பேசினார்.
“பெரும் சூழல் கேடாக மாறியிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகளுக்கு மாற்றாக துணிப்பையைப் பயன்படுத்துவதை அரசே திட்டமாக எடுத்திருப்பது, கூடுதல் பயன் தரும். உலகமயமாதல் காரணமாக அதன் பாதிப்பைப் பற்றி தெரியாமலேயே சர்வசாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். பகுதி அளவில் இதற்கு மாற்றான பொருள்களின் பயன்பாடு பற்றி எடுத்துச்சொல்லிக்தான் இருக்கிறார்கள். எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு, அவ்வளவுதான். விழிப்புணர்வு குழுக்கள் அளவில் இல்லாமல் மக்கள்மயமாகப் பரவினால்தான் பலன் கிடைக்கும்.
அரசாங்கம் முன்வைக்கும் இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை கொள்கையளவில் அறிமுகம் செய்வதோடு நின்றுவிடக் கூடாது. இதைச் செயல்படுத்துவதுதான் முக்கியம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள், மற்ற அரசு அமைப்புகளை இதில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். வெறும் கேரிபேக் எனப்படும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மட்டும் பார்க்கக் கூடாது. உணவகங்களில் சாப்பாடு கட்டும் பொட்டலம், பற்பசை, பல் குச்சி, தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், சாம்பு அடைப்புகள் போன்ற பல பொருட்களும் நெகிழிக் குப்பைகளாகச் சேர்கின்றன. இதைப் பற்றி அரசுத் தரப்பிலும் ஆய்வாளர்களும் சமூக அறிஞர்களும் சூழலியளாளர்களும் சேர்ந்த ஓர் இயக்கமாக இதை எடுத்துச்செல்ல வேண்டும். அடுத்தடுத்து இதை எடுத்துச்செல்வதைப் பற்றி கூட்டு முடிவு எடுக்கப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
இன்றைக்கு இதைப் பற்றி பேசும் அளவுக்கு இருக்கும் பரபரப்பு நாளை இருக்காது. சீராக முழு கவனம் செலுத்தி, முழுமையாகக் கண்காணித்து வந்தால்தான் இதற்கு பலனைக் காண முடியும்.
இப்போது, ஊர்ப்புறங்களில் தையல் கலையைக் கற்றுக்கொண்ட பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். துணிப்பைகளைத் தயாரிப்பதற்குப் பெரிய அளவுக்கு முதலீடு தேவையில்லை. ஏற்கெனவே பயன்படுத்திய போர்வை, வேட்டி, திரைச்சீலை ஆகியவற்றையும் பயன்படுத்தி பைகளைத் தைக்கமுடியும்.
நெகிழிகளுக்கு மாற்றாக, பனையால் ஆன கூடைகளைச் செய்யலாம். பனைநார்களை இந்தப் பைகளுக்குக் கைப்பிடியாகப் பயன்படுத்தலாம்; கயிறு திரிக்கலாம்; ஈச்சம் பாய், வாழை நாரைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்யும்போது இழந்துபோன கிராமப்புற, உள்நாட்டுப் பொருளாதாரமும் மேம்படும்” என்று அழுத்தமாகச் சொல்கிறார், இரமேசு கருப்பையா.
புத்தகத் திருவிழாவில் ஏன் தொடங்கினீர்கள் எனக் கேட்டதற்கு,
“அதிகமாக சிந்திக்கக்கூடிய, எழுதக்கூடிய மக்கள் கூடும் ஒரு முக்கிய விழாவாக இருப்பதால், அவர்களிடமிருந்து மாற்றத்தைக் கொண்டு வரலாமே என்றுதான். அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதபோது, கடைநிலை மனிதரில் எப்படி விரைவில் மாற்றத்தை உண்டாக்க முடியும்? புத்தகக் காட்சியில் ஒவ்வொரு கடையும் 10 கிலோ நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதுவார்கள். அதனாலும்தான். எங்கள் முயற்சி எங்களோடு அல்லது ஒரு குழுவோடு தொடர்புடையதாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இன்று பரவலான பலனைப் பார்க்கையில் சிறுமகிழ்வு இருக்கிறது” என அடக்கமாகச் சொல்கிறார், துணிப்பை இயக்கத்தின் ஒரு தோற்றுநர்.
புத்தகக்காட்சியில் பூத்த ஓர் இயக்கம் என்று சொல்லலாம்!
இப்போது, துணிப்பை தூக்கத் துணிவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து தனி இயக்கமாகவே நடத்தி வருகின்றனர். இவர்களாகவே துணிப்பைகளைத் தைத்தும் தருகிறார்கள்; ஆனால், வணிகரீதியாக அல்ல. எளிதான குறிப்புகளையும் சொல்லித் தருகிறார்கள், தைப்பதற்காக அல்ல, தைத்துப் பரப்புவதற்காக. விதம்விதமான படங்களுடன், வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் துணிப்பைப் பயன்பாட்டைப் புகுத்துவதில் ஆர்வத்தோடு செயல்பட்டுவருகிறது, துணிப்பை இயக்கம்.
ஒன்றை மட்டும் இறுதியாகவும் உறுதியாகவும் நம்மிடம் அவர் சொன்னது, இதுதான்: “ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிவீசப்படும் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக மட்டும், நாங்கள் துணிப்பை இயக்கத்தைச் செய்யவில்லை; இதன் மூலம் இந்த மண்ணை, நீரை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்தையும் உணர்வையும் பரப்புவதுமே எங்கள் நோக்கம்.”
-முருகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக