சனி, 25 டிசம்பர், 2021

உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்

சாதிய ரீதியில் பாகுபாட்டுக்கு உள்ளாகியுள்ள தலித் பெண் சுனிதா தேவி
தலித் பெண் சுனிதா தேவி
தீபா ஜோஷி
வட்டார உறுப்பினர் தீபா ஜோஷி
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
பிபிசி இந்திக்காக : Rajesh Dobriyall  -  BBC  :  சாதிய ரீதியில் பாகுபாட்டுக்கு உள்ளாகியுள்ள தலித் பெண் சுனிதா தேவி
உத்தராகண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், சமையலர் பணியில் இருக்கும் தலித் பெண்மணி சமைத்த உணவை ஆதிக்க சாதிக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சாப்பிட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, உணவு சமைத்த பெண்மணியை பணியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி, இந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமனம் செய்வதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறக்கூடும் என்று பிபிசி இந்தியின் கள நிலவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சம்பாவத்தில் உள்ள சுக்கிடாங் இண்டர் காலேஜில் மொத்தம் உள்ள 230 மாணவர்களில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 66 மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்இதற்காக இங்கு உணவுசமைக்க இரண்டு பணியிடங்கள் உள்ளன. அக்டோபர் 11ஆம் தேதி வரை, சகுந்தலா தேவி மற்றும் விம்லேஷ் உப்ரேதி இங்கு போஜன் மாதாவாக (உணவு சமைத்து அளிப்பவர்களாக) பணியாற்றினர்.

சகுந்தலா தேவிக்கு 60 வயது முடிந்ததால் அவருக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக வேறொரு போஜன் மாதாவை நியமிக்கும் செயல்முறை அக்டோபரில் தொடங்கியது. அக்டோபர் 28 அன்று, கல்லூரி முதல்வர் பிரேம் சிங் புதிய போஜன் மாதாவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாக வெளியிட்டார். உள்ளுர் சந்தைகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் ஒட்டப்பட்டது. குழந்தைகள் மூலம் இது குறித்து பெற்றோருக்கும் செய்தி அனுப்பினார் அவர்.

இந்த பணியிடத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் ஒருவர் பட்டியல் சாதியையும், 5 பேர் பொதுப்பிரிவையும் சேர்ந்தவர்கள். சில பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் சில பெற்றோர் - ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், இவற்றிலிருந்து புஷ்பா பட்டின் பெயரை முன்மொழிந்தனர். விண்ணப்பதாரர்கள் அனைவரும் வறுமை கோட்டிற்கு மேல்இருப்பவர்கள். எனவே இது விதிமுறைகளின்படி இல்லை என்று கருதி, மேலாண்மைக் குழு செயலரான பள்ளியின் முதல்வர் முன்மொழிவில் கையெழுத்திடவில்லை.

இதற்குப் பிறகு நவம்பர் 12 அன்று மற்றொரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. பணி நியமனத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாவது வெளியீட்டிற்குப் பிறகு, மொத்தம் 11 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் ஒன்று நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 10 பெண்களில் 5 பேர் ஆதிக்க சாதியையும், 5 பேர் தாழ்த்தப்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் வேதியியல் விரிவுரையாளர் சந்திரமோகன் மிஸ்ரா தலைமையில் 4 ஆசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்ததார். குழு இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தலித் பெண் சுனிதா தேவியின் பெயரைப் பரிந்துரைத்தது.

நவம்பர் 25 அன்று, இந்த விண்ணப்பங்களைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் அழைக்கப்பட்டது. அதில் விண்ணப்பதாரர்களைத் தவிர, பெற்றோர் - ஆசிரியர் சங்கத் (பிடிஏ) தலைவர் நரேந்திர ஜோஷி, மேலாண்மைக் குழு தலைவர் ஸ்வரூப் ராம், வட்டார வளர்ச்சிக் குழு உறுப்பினர் தீபா ஜோஷி, கிராமத் தலைவர் ஜோல் தீபக் குமார், சியாலா கிராமத்தலைவர் ஜெகதீஷ் பிரசாத் மற்றும் அன்றைய தினம் வெளியில் சென்றிருந்த முதல்வரின் பிரதிநிதியாக முதன்மை பொறுப்பாளர் சந்திரமோகன் மிஸ்ரா ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆதிக்க சாதி பிரதிநிதிகள், புஷ்பா பட் பெயரை முன்மொழிய, தலித் சமூகத்தினர் சுனிதா தேவிக்கு ஆதரவாக நின்றனர். கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் தலித் சமுகத்தை சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆதிக்க சாதியினர் புஷ்பா பட்டின் பெயரை முன்மொழிந்து பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றினர்.

இந்த முன்மொழிவில் கையெழுத்திட சந்திரமோகன் மிஸ்ரா மறுத்துவிட்டார். இது தொடர்பாக நரேந்திர ஜோஷி, தீபா ஜோஷி மற்றும் பலர் முதல்வரை சந்தித்தபோது, ஒருமித்த கருத்தை உருவாக்குவது குறித்து பேசினர்.

இதற்குப் பிறகு முதல்வர் பிரேம் சிங் டிசம்பர் 4 ஆம் தேதி மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் ஆதிக்க சாதியினரின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாததால் சுனிதா தேவியின் பெயருக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டிசம்பர் 13 முதல் பணியைத் தொடங்க வேண்டும் என்றும், விதிகளின்படி வட்டார கல்வி அதிகாரியிடம் இருந்து அனுமதி கிடைக்கும்வரை அதை 'வேலை' என்று கருதக் கூடாது என்றும் முதல்வர் பிரேம் சிங், சுனிதா தேவியிடம் கூறினார். சுனிதாதேவியின் இந்த அதிகாரப்பூர்வமற்ற அரசுப் பணி கடந்த 20ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நீடித்தது.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, எந்த விதமான பணி நியமனத்துக்கும் தடை விதித்த கல்வித்துறை, வட்டார கல்வி அதிகாரியிடம் விசாரணையை ஒப்படைத்தது.

சுனிதா தேவி மற்றும் புஷ்பா பட் இருவருக்குமே நியமனக் கடிதம் கிடைக்கவில்லை.
முதல் நாளில் இருந்தே சாப்பிட மறுப்பு

சுனிதா தேவி உணவு சமைக்கும் பணியை ஆரம்பித்ததில் இருந்தே சாதிவெறி வெளிப்பட ஆரம்பித்தது.
சாதிவெறி

முதல் நாளன்று 7 குழந்தைகள், தான் சமைத்த உணவை சாப்பிட மறுத்தனர். இரண்டாம் நாள் 23 குழந்தைகளும், மூன்றாம் நாள் 18 குழந்தைகளும், கடைசி நாளில் 16 குழந்தைகள் மட்டுமே சாப்பிட்டனர் என்று அவர் பிபிசி இந்தியிடம் கூறினார். கடைசி நாளில் சுனிதா தேவியின் கையால் சாப்பிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. அவர்கள் அனைவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த விஷயத்தில் சாதி பிரச்னை இல்லை என்று பிடிஏ தலைவர் நரேந்திர ஜோஷி, பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். இவை அனைத்தும் ஆதாரமற்ற விஷயங்கள் என்றார் அவர். இது குழந்தைகளின் சொந்த முடிவு, அவர்கள் விரும்பினால் சாப்பிடலாம் என்றும் இதில் பெற்றோருக்கு எந்தப்பங்கும் இல்லை என்றும் அவரும் அவருடன் இருந்த சிலரும் குறிப்பிட்டனர்.

புஷ்பா பட், மிகவும் ஏழ்மையானவர், நிராதரவானவர் மற்றும் கஷ்டப்படுபவர் என்பதால் அவரின் பணிக்கான உரிமை கோரல் வலுவானது என்றும் அவர் கூறுகிறார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சிக் குழு உறுப்பினர் தீபா ஜோஷியும் அவரது கருத்தை ஆதரிக்கிறார். கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் பிரசாத் இதற்கு நேர்மாறாக கூறுகிறார்.

கடந்த 25ம் தேதி நடந்த கூட்டத்தில் சுனிதா தேவியின் பெயரை பள்ளி கமிட்டி இறுதி செய்ததை அறிந்தவுடன்,'அப்படியானால் யாரும் சாப்பிட மாட்டார்கள்' என்று நரேந்திர ஜோஷி அப்போது தெளிவாக கூறியதாக அவர் கூறுகிறார். பள்ளியில் ஆதிக்க சாதிக் குழந்தைகள் அதிகமாக இருப்பதால், போஜன் மாதாவும் ஆதிக்க சாதியினராக இருக்க வேண்டும் என்றும் நரேந்திர ஜோஷி கூறியுள்ளார்.

புஷ்பா பட்டின் உரிமை கோரல் வலுவானது என்ற விஷயத்தில் கருத்துத் தெரிவித்த அவர் விதிகளின்படி, சுனிதா தேவியின் உரிமை கோரலே சரியானது என்றும் புஷ்பா பட்டை விட சுனிதாவின் பொருளாதார-சமூக நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் ஜெகதீஷ் கூறுகிறார்.

தலித் போஜன் மாதா சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்று பிபிசி இந்தியிடம் குழந்தைகள் கூறியதிலிருந்து தெரிகிறது.

தலித் பெண்மணியான அவர் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்று தங்கள் குடும்பத்தினர் சொன்னதாக, சுனிதா தேவியின் கையால் உணவு உண்ணாத ஆதிக்க சாதியினரின் குழந்தைகள் கூறினர். வீட்டில் பூஜை இருக்கும் காரணத்தால் இதை செய்யக்கூடாது என குழந்தைகளிடமும் சொல்லப்பட்டுள்ளது.

தங்கள் நண்பர்கள் செய்வதைப்பார்த்து படிப்படியாக மற்ற குழந்தைகளும் சாப்பிடுவதை நிறுத்தினர்.

ஆதிக்க சாதிக் குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று ரகளை செய்தனர். தங்கள் குழந்தைகளை திட்டி மதிய உணவை சாப்பிடவைத்தனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் இதை மறுத்தனர்.

நரேந்திர ஜோஷி, தீபா ஜோஷி உள்ளிட்ட சிலர் சாதி ரீதியாகத் திட்டியதாக 'அரசு வேலை'யில் இருந்து நீக்கப்பட்டபிறகு சுனிதா தேவி போலீசில் புகார் செய்தார்.

பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும் தன்னை திட்டியதாகவும், இதனால் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகள் அவமானத்தை சந்திக்க நேரிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இருப்பினும் நரேந்திர ஜோஷியும் தீபா ஜோஷியும் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. விசாரணையில் உண்மை வெளிவரும் என்று அவர்கள் கூறினர்.

முதன்மை கல்வி அதிகாரி ஆர்.சி. புரோகித்

இந்த வழக்கின் விசாரணை, சல்தி புறக்காவல் நிலைய பொறுப்பாளர் தேவேந்திர சிங் பிஷ்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், உண்மைகளின் அடிப்படையில் தனது அறிக்கையை தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆயினும் இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

எப்போது பதிவுசெய்யப்படும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

இந்த சர்ச்சை எழுந்ததையடுத்து கல்வித்துறையும், இது தொடர்பான விசாரணையை வட்டார கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பாவத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.சி. புரோஹித் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியரின் தவறு கண்டறியப்பட்டால், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதிவெறியின் ஆழமான வேர்கள்

நரேந்திர ஜோஷி கூறியதையே வட்டார வளர்ச்சிக் குழு உறுப்பினர் தீபா ஜோஷியும் கூறினார்.
தீபா ஜோஷி

தனக்கு சாதி பேதம் கிடையாது என்றும், யார் சமைத்த மதிய உணவை வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடலாம் என்றும் அவர் கூறினார். சுனிதா தேவி போஜன் மாதாவாக ஆனபிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன் வீட்டிற்கு வந்து தன்னை கேலி செய்வதாகவும் அவர் கூறினார்.

ஆனால் வரவிருக்கும் நியமனத்தில் மீண்டும் சுனிதா தேவி அல்லது வேறு தலித் பெண்மணி போஜன் மாதாவாக தேர்ந்தெடுக்கப்பட்டால், குழந்தைகள் சாப்பாடு சாப்பிட மாட்டார்கள் என்கிறார் ஜோஷி. கட்டாயப்படுத்தினால், தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து விலக்கி விடுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இது வெறும் மிரட்டல் அல்ல. சுக்கிடாங் இண்டர் கல்லூரிக்கு எதிரே காண்டா அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்போது அந்த பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள் என்கிறார் சியாலா கிராமத்தலைவர் ஜெகதீஷ் பிரசாத். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அங்கேயும் ஒரு தலித் பெண்ணுக்கு உணவு சமைக்கும் வேலை வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆதிக்க சாதியினர் தங்கள் குழந்தைகளை அங்கிருந்து விலக்கிவிட்டனர். இப்போது அந்த பள்ளி 'தலித் பள்ளி' என்று அழைக்கப்படுகிறது என்கிறார் அவர்.
முன்னர் பாகுபாடு காட்டப்படவில்லையா?

இந்த அத்தியாயத்திற்குப் பிறகு சுனிதா தேவி மிகவும் வருத்தமாக இருக்கிறார். ஆனால் அவர்களிடம் முன்பு பாகுபாடு காட்டப்படவில்லையா? இப்போது என்னதான் மாறிவிட்டது?

இதனால் தனக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது, கெட்ட பெயர் வந்துவிட்டது என்கிறார் அவர். எல்லோரும் (ஆதிக்க சாதி பெற்றோர்) ரகளை செய்தனர். அவதூறான வார்த்தைகளைப் பேசினர் என்கிறார் சுனிதா. அவர் சமைத்த உணவை குழந்தைகள் உண்ண மறுத்ததால் அவர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.

இதுவரை என் குழந்தைகளை எப்படி கவனித்தேனோ, அப்படியே பார்த்துக் கொண்டிருப்பேன்... ஆனால் இது அரசு வேலை, தினக்கூலி அல்ல, இதை எப்படி விடுவது என்கிறார் அவர்.

இப்பள்ளியில் முதன்முறையாக எஸ்.சி பெண்ணை போஜன் மாதா ஆக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அதன் காரணமாக தாங்கள் பல அவமானங்களை சந்திக்க நேரிட்டதாகவும் ஜெகதீஷ் பிரசாத் கூறுகிறார். குழந்தைகள் கூட மோசமாக நடத்தப்படுகிறார்கள், அவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிறார் ஜெகதீஷ் பிரசாத்.

கல்வியின் கோவிலான பள்ளிக்கூடத்தில் குழந்தைகளிடம் இவ்வளவு ஏற்றத்தாழ்வு மனப்பான்மை புகுத்தப்படும்போது, அவர்கள் வளர்ந்த பிறகு என்ன செய்வார்கள் என்று வினவுகிறார் அவர்.

இந்த முழு விவகாரமும், மிகவும் சோகமான வெட்கக்கேடான ஒன்று என்று இந்தி ஆசிரியர் ஹரி ஓம் பார்கி, விவரிக்கிறார். இந்த விஷயம் பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த செய்தியைப் படித்துவிட்டு, தொலைதூரத்தில் இருக்கும் தனக்குத் தெரிந்தவர்கள் பலரும் தன்னை அழைத்து என்ன விஷயம் என்று விசாரிப்பதாகவும், தான் மிகவும் மோசமாக உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

ஹரி ஓம் பார்கி பள்ளியின் என்.எஸ்.எஸ்-இன் பொறுப்பாளராகவும் உள்ளார்.

"என்.எஸ்.எஸ்-இல், எல்லா பிரிவுக் குழந்தைகளும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் இந்த விவகாரத்திற்குப் பிறகு, இப்போது குழந்தைகளிடமும் சாதி உணர்வு தலைதூக்கியுள்ளது" என்கிறார் அவர்.
'உரிமையை விடப்போவதில்லை' - சுனிதா தேவி

உள்ளூர் ஊடகங்களில் போஜன் மாதாவின் 'பணி நியமனம்' ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சாதி சம்மந்தப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், இரு தரப்பு நிலைப்பாட்டையும் பார்க்கும்போது அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. காவல்துறை அல்லது கல்வித்துறை விசாரணையில் என்ன வெளிவரும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் இரு தரப்பும் தங்கள் தரப்பிலிருந்து தயாராகி வருகின்றன.

என்ன நடந்தது என்பது குறித்து பள்ளி முதல்வர் பிரேம் சிங் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. விசாரணை நடக்கிறது, நான் பேசுவது சரியில்லை என்றுமட்டுமே அவர் கூறினார். 2010ஆம் ஆண்டு முதல் இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் பிரேம் சிங், தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பதால் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சையால், அதற்கு தண்டனையாக எங்காவது தொலை தூர இடத்திற்கு தான் இடமாற்றம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் அவர் உள்ளார். அப்படி நடந்தால் தான் நீதிமன்றத்தை அணுகப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

சுனிதா தேவியும் இந்த விவகாரத்தை விட்டுவிட த்தயாராக இல்லை. ஆட்சேர்ப்பு செயல்முறை மீண்டும் தொடங்கும் போது தான் மறுபடியும் விண்ணப்பிக்கப்போவதாக அவர் கூறுகிறார்.

என்ன நடந்தாலும், தனது உரிமையை விடப்போவதில்லை என்கிறார் அவர்.

விதிகளின்படி, போஜன் மாதா பதவிக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனவே, இந்தப் பதவிக்கு சுனிதா தேவியோ அல்லது வேறு எந்த தலித் பெண்ணோ விண்ணப்பித்தால், அவருக்கு வேலை கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியானது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆதிக்க சாதியினர், காண்டா துவக்கப்பள்ளியில் செய்ததுபோல சுக்கிடாங் இடைநிலைக் கல்லூரியில் இருந்து குழந்தைகளை வெளியே எடுப்பார்களா?

சமூக நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் சர்ச்சையை உருவாக்க வேண்டாம் என்றும் எல்லா பெற்றோரையும் சந்தித்து அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று சம்பாவத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.சி. புரோஹித் கூறினார்.

இருப்பினும் அது எந்த அளவுக்கு விளைவை ஏற்படுத்தும் என்பது அவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் கல்வித் துறையின் முன் இன்னொரு சவால் உள்ளது. பள்ளியில் படிக்கும் சுனிதா தேவியின் இரண்டு குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் இப்போது மதிய உணவை சாப்பிடுவதில்லை. வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினர் தான் சமைத்த உணவை சாப்பிடாத போது, தன் குழந்தைகள் ஏன் ஆதிக்க சாதியினரின் கையிலிருந்து சாப்பிட வேண்டும் என்று வினவுகிறார் சுனிதா தேவி.

கருத்துகள் இல்லை: