ஞாயிறு, 19 டிசம்பர், 2021

ஃபாக்ஸ்கான் ஊழியர்களுக்குத் தரமற்ற உணவு.. ஊழியர்கள் உயிரிழந்ததாக ... வதந்தி ?

மின்னம்பலம் : ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவன கிளை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தைவானைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் சார்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுதி வசதி, உணவு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு நிறுவனம் சார்பில் கேப் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பணியாற்றும் பெண்கள் பூந்தமல்லி ஐஎம்ஏ விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இங்குத் தங்கியிருந்த பெண்களில் 150க்கும் மேற்பட்டோருக்கு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவர்கள் பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

இந்தச்சூழலில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் மாயமானதாகவும், அவர்கள் உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் உயிரிழந்ததாகவும் வதந்தி பரவியது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக, அந்நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அந்நிறுவனம் சரியான தகவலை கொடுக்கவில்லை என்று நிறுவனத்துக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 256 தொழிலாளர்கள் டிசம்பர் 15, 2021 அன்று கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூந்தமல்லி அரசு மருத்துவமனை உட்பட மொத்தம் 9 மருத்துவமனைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுபோன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 8 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி வதந்தி என்று காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார், 16 மணி நேரத்திற்கு பின் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பொய்யான தகவலைப் பரப்பியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் வளர்மதி தனது பேஸ்புக் பக்கத்தில், “ ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் 8 பேர் இறந்துள்ளதாகவும் அவர்களின் சடலத்தைத் தொழிலாளர்களிடம் காட்ட மறுக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக சுங்குவார்சத்திரத்தில் அணிதிரள்வோம்” என்று பதிவிட்டுள்ளதாகக் கூறி அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வளர்மதியை டிசம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச்சூழலில், ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்குத் தரமற்ற உணவு தயாரித்துக் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின்(34) மற்றும் கவியரசன்(32) ஆகிய இருவரையும் வெள்ளவேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தவிவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து, அக்குழு அவ்வப்போது நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளை வருமுன் தடுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: