வியாழன், 18 ஜூன், 2020

ஆன்லைன் வகுப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!.. நிழல் நிஜமாகாது

மின்னம்பலம் : ஆன்லைனின் வகுப்பு நடத்துவதற்கு திமுக, பாமக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் இயல்பான சூழலில் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும் மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு வழிகாட்டுதல்களில் ஆன்லைன் வழிக் கல்வி ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிவித்தது. இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்துவருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், வை-ஃபை மற்றும் பிராட்பேண்ட் வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. குறிப்பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது.
அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் - நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும் பேராபத்தானது” என்று எச்சரித்துள்ளார்.
இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு அரசிடமும் இல்லாத சூழலில், இதுபோன்ற ஒரு விஷப்பரீட்சையை ஏன் அரசு நடத்த விரும்புகிறது என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “அனைத்துப் பகுதிகளிலும் டிஜிட்டல் முன்னேற்றம் இல்லாத சூழலில், ஆசிரியர் இல்லாமல் பாடம் எடுக்க முடியாது. மாணவர் கேள்வி கேட்காமலோ அல்லது ஆசிரியருடன் நேரடியாகக் கலந்துரையாடல் செய்யாமலோ கற்றுக்கொள்ள முடியாது. பரஸ்பர ஆசிரியர் - மாணவர் கலந்துரையாடல் மூலம் உருவாக்கப்படும் கல்விதான் இந்நாட்டின் மிக முக்கியமான சொத்து” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் அலைபேசித் திரை அல்லது மடிக்கணினித் திரையைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வையில் குறைபாடுகள் நேரலாம். பா.ஜ.க. அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை பாதிப்பை விட, இரட்டிப்பு பாதிப்பை எதிர்காலச் சமுதாயமான மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடும்.
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வையும் பாகுபாடுகளையும் உருவாக்கி- மாணவர் சமுதாயத்திடையே பள்ளிகளில் நிலவிவரும் சமநிலையைச் சரித்துச் சாய்க்கும். இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை. நிழல் நிஜமாகிவிடாது. என்பதை அ.தி.மு.க. அரசு உணர்ந்து - அப்படியொரு வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வகுப்பறைகளில் உயிர்ப்புடன் நடத்தப்படும் பாடங்களில் கிடைக்கும் தெளிவையும், புரிதலையும் ஆன்லைன் வகுப்புகளால் வழங்க முடியாது. ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது.
பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாக தொடங்கப்படுவதாலோ, தாமதமாகும் காலத்தில் மாணவர்கள் பாடங்களை படிக்காததாலோ எந்த பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே, அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: