செவ்வாய், 16 ஜூன், 2020

இந்தியா - சீனா மோதல்! 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழப்பு 20 Indian Soldiers Killed

BBC :இந்தியா சீனா இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சீனத் தரப்பிலும் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் என்ன பாதிப்பு என்பதை சீனா வெளியிடவில்லை.
ஜூன் 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையை ஒட்டி இரு நாட்டு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கியதாக இந்திய ராணுவத் தளபதி கூறியிருந்த நிலையில் இப்போது திடீரென உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. சூழ்நிலை மேலும் மோசமாகுமோ, பெரிய மோதல் வெடிக்குமோ என்ற ஐயம் பலருக்கும் நிலவுகிறது.
எனவே இது குறித்து மூத்த பத்திரிகையாளரும், தி ஹிந்து குழுமத் தலைவருமான என்.ராமிடம் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம்.
எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் எப்படிச் செல்லும் என்று அவரிடம் கேட்டோம்.
"இது பெரிய மோதலாக மாறாது. உயர் மட்டத்தில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மட்டத்தில் புரிதல் இருக்கிறது. இரு தரப்பிலும் ராணுவத்தினர் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்" என்றார் ராம்.

இந்தியா - சீனா இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) வரையறுக்கப்படவில்லை. அதனால், ராணுவங்கள் முன்னேறுவதும், பின் வாங்குவதுமாகத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது. ஆனால், பல விஷயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. பொய்யான கணிப்புகள் வெளியாகி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வரும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்ராஜீவ் காந்தி - டெங் ஜியாவோ பிங் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்திய சீன உறவில் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து விரிவாக கேட்டபோது, "1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றார். அந்தப் பயணத்தில் நானும் சென்றிருந்தேன். அங்கு ராஜீவ் காந்தி - சீனத் தலைவர் டெங் ஜியாவோ பிங் இடையிலான பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுவரை நிலவி வந்த தேக்க நிலையை உடைப்பதாக அந்த முடிவுகள் அமைந்தன.
அதாவது எல்லைப் பிரச்சனையில் தீர்வு எட்டும் வரை உறவில் மேம்பாடு இல்லை என்று இருந்த நிலையை மாற்றி, எல்லைப் பிரச்சனை முடியும் வரை காத்திருக்காமல் உறவுகளை மேம்படுத்தவேண்டும் என்பது அந்த சந்திப்பில் எட்டிய முடிவுகளில் ஒன்று. இரு நாடுகளும் எல்லையில் படை பலத்தை பிரயோகிப்பதில்லை என்பதும், எல்லையில் இருக்கும் நிலையை மாற்றுவதில்லை என்பதும் அப்போது எடுத்த முடிவுகள்தான். இந்தியாவில் அப்போது முதல் நரேந்திர மோதி வரையிலான எல்லாப் பிரதமர்களும் அந்தப் பேச்சுவார்த்தை உருவாக்கிய கட்டமைப்புக்கு உட்பட்டே செயல்பட்டும், உறவை வளர்த்தும் வந்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்ட ராம், அவ்வப்போது சிறிய விஷயங்கள், கேந்திர விவகாரத் துறை வட்டாரங்களால் மிகைப்படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

சீனா முன்னதாகவே கோவிட்-19 நோய்த்தாக்குதல் பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிட்டது. அதே நேரம் இந்தியா அதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, இன்னும் மீண்டுவரவில்லை. இந்நிலையில் சீனா தமக்கு உள்ள சாதக நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேட முயற்சிப்பதாக நிலவும் கருத்தைப் பற்றி அவரிடம் கேட்டோம்.
இதை என்.ராம் முற்றாக மறுத்தார்.
"சிறிய நாடுகள் பல கோவிட்-19 சிக்கலை சமாளிக்கும் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், பெரிய நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்சனையை சிறப்பாக சமாளித்த நாடு சீனா என்பது உண்மைதான். ஆனால், இதனால் ஏற்பட்ட சாதக நிலையை, இந்திய எல்லை விவகாரத்தில் பயன்படுத்திக்கொள்ள சீனா முயலாது. அதற்கு வாய்ப்பில்லை" என்று அவர் கூறினார்.
இப்போது ஏற்பட்டுள்ள பதற்றம், இழுபறியாக இருக்கும் எல்லைப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கான அழுத்தத்தை இரு நாடுகளுக்கும் வழங்குமா என்று கேட்டோம்.
"இல்லை. இது அத்தகைய அழுத்தத்தைத் தராது" என்று குறிப்பிட்ட அவர் "நம் வாழ்நாளில் இந்த எல்லைப் பிரச்சனை தீர்வதை நாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே" என்றார்.

கருத்துகள் இல்லை: