சனி, 20 ஜூன், 2020

சென்னை முடக்கம்: அரசு முடிவின் முழுப் பின்னணி!

சென்னை முடக்கம்:   அரசு முடிவின் முழுப் பின்னணி!மின்னம்பலம் : நாளுக்கு நாள் பொழுதுக்கு பொழுது சென்னை மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, அதிவேகமாய் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னைக்கு முழு பொது முடக்கம் மீண்டும் அவசியம் என்று ஜுன் முதல் வாரத்திலேயே குரல்கள் எழத் தொடங்கின. ஆனால் அப்போது அரசுத் தரப்பில் சென்னையில் முழு முடக்கம் என்பது வதந்தி என்றும் அப்படி ஒரு திட்டமில்லை என்றும் கூறி வந்தனர். ஒருபக்கம் இப்படிக் கூறினாலும் இன்னொரு பக்கம் சென்னையின் நிலைமை அரசை மிகவும் யோசிக்க வைத்தது.
அரசுத் தரப்பின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்துதான், சீல் வைக்கப்படுகிறது சென்னைஎன்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.

இந்த அடிப்படையில், ஜூன் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு முடக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது சென்னை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க குடும்பத்துக்கு ஒருவர் அல்லது இருவர்தான் வரவேண்டும், அதுவும் வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டருக்குள் நடந்துதான் பயணிக்க வேண்டும், டூவீலரில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்ற விதிகளை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் கடுமையாக கடைபிடித்தனர். இதனால் சென்னையின் முதல் நாள் முடக்கம் வெற்றிகரமாகவே தொடங்கியிருக்கிறது. ஊரடங்கு, பொது முடக்கம் என்பதெல்லாம் வார்த்தைகளுக்குதான் என்று நினைத்திருந்த சென்னை வாசிகளும் டூவீலர் மைனர்களும் ஒட்டுமொத்தச் சென்னையின் நன்மைக்காக கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் முழு முடக்கத்துக்காக அரசுத் தரப்பில் விரிவான ஆலோசனைகளையும் ஏற்பாடுகளையும் எந்த அளவுக்குச் செய்திருக்கிறார்கள் என்ற தகவல் முக்கியமானது
“வருவாய் பேரிடர் ஆணையராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்புதான் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே அவர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் மத்திய அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த வகையில் இந்தியாவின் கொரோனா ஹாட் ஸ்பாட்டுகளில் தமிழகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் இருப்பதை புள்ளி விவரங்கள் மூலமாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்.
இந்த சென்னை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் கொரோனா பரவலைத் தடுக்க என்ன செய்யலாம் என்று என்.ஜி.ஓ.க்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் குறிப்பாக நாற்பது வயதுக்கு உட்பட்ட துடிப்பான இளம் அரசியல்வாதிகள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமும் விரிவாக பேசியிருக்கிறார் ஜெ. ராதாகிருஷ்ணன். அதை வைத்து சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு முந்தைய முடக்கத்தில் இருந்து இன்னும் இறுக்கப்பட்ட நிலையாக என்ன செய்யலாம் என்ற பரிந்துரைகளை தயாரித்திருக்கிறார்.
இதேபோல சென்னையின் எல்லைகள், சென்னைக்குள் இருந்து வெளியேறுபவர்கள், அவர்கள் செல்லும் வழிகள், இதனால் சென்னை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மருத்துவமனைகளின் நிலவரம், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற விவரம் என உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தியும் விரிவானதொரு விசாரணை அறிக்கையை தயாரித்து அரசிடம் அளித்துள்ளார்.
ஜூன் 15 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களைக் காப்பாற்றுவதற்காக பலதரப்பினருடம் தான் நடத்திய விவாதங்களின் தொகுப்பை விரிவாக எடுத்து வைத்திருக்கிறார் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன். இதன் மீது முதல்வர், தலைமைச் செயலாளர் அமைச்சரவைக கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கும் விரிவான பதில் அளித்திருக்கிறார். ஏற்கனவே உளவுத்துறை தலைவர் கொடுத்த அறிக்கையும் அரசிடம் இருந்த நிலையில் இவற்றின் அடிப்படையில்தான் சென்னையில் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
முடக்கம் என்பது வெறும் நிர்வாக செயல்பாடு மட்டுமல்ல என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பு மக்களின் ஒத்துழைப்பு, உளவியல் சார்ந்த ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டே பொதுமுடக்கம் சென்னையில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: