சனி, 20 ஜூன், 2020

எதிர்க்கட்சிகள் கேள்வி: பிரதமர் அலுவலகம் விளக்கம்!

மின்னம்பலம் : எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியப் பகுதிக்குள் சீன ஊடுருவல் இல்லை என்றுதான் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 16ஆம் தேதி இந்தியச் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சீன தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அந்நாட்டு அரசு மறுக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, நமது எல்லைக்குள் சீனா ஊடுருவ வில்லை. இந்தியாவில் ஊடுருவ நினைத்தவர்களுக்குத் தக்க பதிலடி
கொடுக்கப்பட்டுள்ளது. எதிரிப் படைகள் நிலம், வான், கடல் என எந்த வழியாக வந்து தாக்குதல் நடத்தினாலும், அவர்களிடமிருந்து நாட்டை காக்கும் பலம் நமது படைகளிடம் உள்ளது. நம் மண்ணில் ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு நமது படைகள் பலம் வாய்ந்தவை என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இந்திய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்று தெரிவித்த அவர், இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. அதே சமயத்தில் இறையாண்மையைக் காப்பதற்குத் தான் உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”சீன ஆக்கிரமிப்புக்குப் பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப் பகுதியை அந்நாட்டிடம் ஒப்படைத்து விட்டார்” என்று விமர்சித்திருந்தார்.
அதோடு, அது சீனாவின் நிலப்பகுதி என்றால் நம்முடைய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? அவர்கள் எங்குக் கொல்லப்பட்டார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதுபோன்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரான, ப.சிதம்பரம் சீனப் படைகள் எல்லையைத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். அப்படி என்றால் எதற்காகச் சண்டை, எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை, எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு, 20 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் பேசியது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் , அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் விளக்கத்துக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், ”மோதலுக்குப் பின், தற்போது இந்திய எல்லைப் பகுதியில் எந்த ஒரு சீன ராணுவத்தினரும் இல்லை. 16 பிகார் படைப்பிரிவினரின் தியாகத்தால், எல்லையில் கட்டமைப்புகளை அமைப்பதற்கான சீனாவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்திய நிலப்பரப்பு எவ்வாறு விட்டுக் கொடுக்கப்பட்டது என்பது இந்த நாட்டுக்கே தெரியும். இதுகுறித்து நேற்றைய கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. எல்லைப் பகுதியில் ஒருதலைபட்சமாக மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறுவதற்கான எந்தவொரு முயற்சிகளுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று கூட்டத்தில் பிரதமர் கூறினார்.
கடந்த காலங்களில் இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தாலும், தற்போது இந்தியப் படை எந்த வரம்பு மீறலுக்கும் தக்க பதிலடி கொடுக்கும். இந்த முறை எல்லைக் கோட்டுப் பகுதியில் பெரிய பலத்துடன் சீன ராணுவம் வந்தது. அதற்கு நிகராக இந்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். பிரச்சினைக்குரிய பகுதியில் சீன கட்டமைப்புகளைக் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதுதான், ஜூன் 15ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.
ராணுவ வீரர்கள் இந்திய எல்லையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வேளையில்,அவர்களின் மனத்திடத்தைக் குலைக்கும் வகையில் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: