செவ்வாய், 16 ஜூன், 2020

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சபாநாயகருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்!

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சபாநாயகருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்!மின்னம்பலம் : 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தாக்கல் செய்த வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, “உரிய நேரத்தில் சபாநாயகர் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்” எனக் கூறி வழக்கினை முடித்துவைத்தது.
இதனிடையே மணிப்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் திமுக தாக்கல் செய்த மனுவில்,“11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆன போதிலும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. 11 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியைப் பார்த்து, ‘உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி 3 மாதங்கள் ஆன போதிலும் ஏன் சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட வாதத்திற்காக வழக்கு 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
அடுத்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனபால் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழில்</

கருத்துகள் இல்லை: