வெள்ளி, 19 ஜூன், 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது உண்மையில் எப்போது? காட்டிக்கொடுத்த கழிவுநீர்


BBC  : இத்தாலியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது 2020 பிப்ரவரி மாதம்தான் கண்டறியப்பட்டது என்றாலும், அதற்கு பல நாட்களுக்கு முன்னரே அங்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது அங்குள்ள இரு நகரங்களின் கழிவு நீரில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிலன் மற்றும் டூரின் ஆகிய நகரங்களின் கழிவுநீர் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்றே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கண்டறியப்பட்டுள்ள காலத்துக்கு முன்னதாகவே உலக நாடுகளில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று பரவுவதற்கு காரணமாக உள்ள கொரோனா வைரஸ் சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் முதல் முதலில் கண்டறியப்பட்டது.

 இத்தாலி நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் பிப்ரவரி மாத மத்தியில் கண்டறியப்பட்டார். நிமோனியா காய்ச்சல் என்று கருதப்பட்ட உடல்நலக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் உடலில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதியே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஆய்வாளர்கள் மே மாதம் தெரிவித்திருந்தனர். இதேபோல ஸ்பெயினிலும் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் அறியப்படுவதற்கு நாற்பது நாட்களுக்கு முந்தைய கழிவு நீரிலேயே கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாத மத்தியிலேயே பார்சிலோனாவில் கொரனோ வைரஸ் இருந்தது அதன் கழிவு நீரில் செய்யப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
ஆனால் அதற்கு 40 நாட்களுக்குப் பிறகுதான் அங்கு கொரனோ வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தாலி கழிவுநீர் பரிசோதனை

இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இத்தாலியின் வடக்குப் பகுதியில் அக்டோபர், 2019 முதல் பிப்ரவரி, 2020 வரையிலான காலத்தில் சேகரிக்கப்பட்ட 40 கழிவுநீர் மாதிரிகளை சோதனை செய்தனர்.
அதில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று எதுவுமில்லை. ஆனால் டிசம்பர் மாதத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது என்று குசப்பின்னா லா ரோசா எனும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: