வெள்ளி, 19 ஜூன், 2020

திரை இசை கலைஞர்கள் . சங்க உறுப்பினர்கள் 1,248.. .. பெரும்பாலும் வருமானம் அற்ற நிலையில்

vikatan.com - அய்யனார் ராஜன் - ஏ.ஆர்.ரஹ்மான்,: .” கொரோனா லாக்டௌன் மொத்த சினிமாவையும் முடக்கிப்போட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள்,
தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் என சினிமாவின் அத்தனை அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் இந்த லாக்டௌன் நாள்கள் பெரும் துயரங்களுடனேயே நகர்கின்றன. தயாரிப்பாளர்களுக்கே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நடிகர்கள் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிலையில் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களும் இந்த லாக்டெளன் காலத்தில் கடுமையான நிதிப்பிரச்னைகளைச் சந்தித்துவருகிறார்கள். ஒரு பெரிய படத்துக்கான இசையமைப்பு வேலைகள் நடக்கின்றன என்றால் 400-500 இசைக்கலைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும். இதுதான் அவர்களுக்கான பிரதான வருமானம். இதுதவிர கலைநிகழ்ச்சிகள் நடக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற உதவும். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா மட்டுமல்லாமல், வெளியே நடக்கும் கலை நிகழ்சிகளும் இல்லாததால் இசைக்கலைஞர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாகச் சொல்கிறார்கள்.
வருமானம் இல்லாமல் தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய இப்போது இளையராஜா, ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்.

இந்த நிதித்திரட்டல் மற்றும் உதவிப் பணிகளை மேற்கொள்ளும் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் தினாவிடம் பேசினேன்.
‘’சங்கத்துல மொத்தமா 1,248 உறுப்பினர்கள் இருக்காங்க. இதுல 10 சதவிகிதம் பேரை வேணும்னா கொஞ்சம் செட்டில் ஆனவங்கன்னு சொல்லலாம். மீதி 90 சதவிகிதம் பேர் மாதாமாதம் ரெக்கார்டிங் நடக்குறதை வெச்சித்தான் வாழ்க்கையை நகர்த்திட்டிருந்தாங்க. ஷூட்டிங் இல்லாததால் இப்ப சுத்தமா யாருக்கும், எந்த வேலையும் இல்லை. ஸ்டேஜ் ஷோவும் கிடையாது. அதனால ஒவ்வொருத்தருமே வெளியில சொல்ல முடியாத துயரத்துலதான் இருந்திட்டிருக்கோம். சுத்தமா பண நடமாட்டமே இல்லாததால் நிலைமை மோசமாகுது. இன்னும் எத்தனை மாதங்கள் இந்த லாக்டெளன் நீடிக்கும்னு தெரியாததால் எல்லோருமே பதற்றத்துல இருக்காங்க” என்றவர், சங்க உறுப்பினர்களுக்காக எடுத்த சில முயற்சிகளையும் பட்டியலிட்டார்.
‘’ஃபெப்சி, தமிழ்நாடு அரசின் நலவாரியம் மூலமா ஆரம்பத்துல சில உதவிகள் எங்க உறுப்பினர்களுக்குக் கிடைச்சது. லாக் டௌன் நீடிச்சுட்டே போறதால ‘அடுத்து என்ன பண்ணலாம்’னு யோசிச்சிட்டிருந்த சமயத்துலதான் இசைஞானியும், இசைப்புயலும் கரம் கோத்துக் கை கொடுத்திருக்காங்க. ரெண்டு பேரும் தலா 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண உதவியா தந்திருக்காங்க.
இவங்களோடு டி.இமான், அனிருத், ஹிப் ஹாப் ஆதி மூணு பேரும் ஆளுக்கு ரெண்டு லட்சமும், தமன் ஒன்றரை லட்சம், விஜய் ஆண்டனி, ஜிப்ரான் ரெண்டு பேரும் தலா 50,000 என மொத்தமா இருபத்தெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது.
> இந்த இக்கட்டான சூழலுக்கு இது ரொம்பவே பெரிய தொகை. பெரிய உதவி. உறுப்பினர்கள் எல்லோருக்கும் இந்த உதவி போய்ச் சேர்ந்தா நல்லா இருக்குமேன்னு தோண, சரிசமமாப் பிரிச்சுத் தந்துடலாம்னு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரெண்டாயிரம் ரூபாய்னு பகிர்ந்து கொடுத்திருக்கோம். முன்னாடிலாம் கூட இந்த மாதிரி உதவிகள் வழங்குறப்ப ஆயுட்கால உறுப்பினர்கள் மட்டும்தான் பலனடைஞ்சிட்டிருந்தாங்க.
இப்ப அந்த மாதிரி வேண்டாமேன்னு முடிவு செஞ்சோம். ‘புதுசா வந்த இசையமைப்பாளர்களுக்கும் கைகொடுக்கணும்னு பிரிச்சுத் தர்றோம்’னு இசைஞானி, ஏ.ஆர்.ரஹ்மான்கிட்டயும் சொன்னோம். ’நேத்துதான் இசையமைக்க வந்தவர்னுலாம் யாரையும் விட்டுட வேண்டாம். நல்லா பண்ணுங்க’னு பாராட்டினார் இளையராஜா சார்’’ என்றார் தினா.
திரைப்பட இசைக்கலைஞர் சங்கம் வரும் ஆண்டு உறுப்பினர்களிடமிருந்து சந்தா தொகையை வசூலிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளதாம். விகடன் .com

கருத்துகள் இல்லை: