புதன், 17 ஜூன், 2020

சுஷாந்த் சிங் மரணம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கின் பின்னணி!

சுஷாந்த் சிங் மரணம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கின் பின்னணி!minnambalam.com:
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், கரண் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டார்.
எதிர்காலம் குறித்த ஏராளமான கனவுகள் கண்ட இளம் நடிகரின் இந்த திடீர் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், கரண் ஜோகர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பேர் மீது சுதீர் குமார் என்னும் வழக்கறிஞர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

ANI @ANI
I have filed a case against 8 people including Karan Johar, Sanjay Leela Bhansali, Salman Khan & Ekta Kapoor under Sections 306, 109, 504 & 506 of IPC in connection with actor Sushant Singh Rajput's suicide case in a court in Muzaffarpur, Bihar: Advocate Sudhir Kumar Ojha

சல்மான் கான் உள்ளிட்ட இவர்களின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் 7 திரைப்படங்களில் இருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டதாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதீர் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்தின் மரணமும், சந்தேகங்களும்
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘எம்.எஸ் தோனி: த அன்டோல்ட் ஸ்டோரி’ மூலம் இந்தியத் திரையுலகில் அடையாளம் காணப்பட்டவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் சினிமா பிரியர்களையும், கிரிக்கெட் பிரியர்களையும் தனது ரசிகராக மாற்றிய அவரை தோனியின் பிரதி பிம்பமாகப் பார்த்த ரசிகர்கள், அவரையும் மனதார நேசிக்கத் தொடங்கினர். இளம் வயதிலேயே இத்தனை இதயங்களை சம்பாதித்த நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து சுஷாந்த்தால் மீண்டு வர இயலவில்லை என்றும், காதல் முறிவால் அவர் உடைந்து போயிருந்தார் எனவும் சுஷாந்தின் மன அழுத்தத்திற்கும், மரணத்திற்கும் பல காரணங்களும் கூறப்பட்டது. ஜூன் 8ஆம் தேதி சுஷாந்த்தின் முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள, சரியாக ஆறு நாட்கள் கழிந்து ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இந்த நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சுஷாந்தின் மாமா, ‘சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சுஷாந்தின் மைத்துனர் ஓ.பி சிங்கும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். இது அனைவரையும் குழப்பமடைய செய்தது.
பிரபலங்களுக்கு எதிராகப் பிரபலங்கள்
‘ஏன் இத்தனை விரைவாக எங்களை விட்டுச்சென்றாய்?’, ‘உனது பிரச்னை என்னவென்று எங்களிடம் கூறியிருக்கலாமே, நாங்கள் துணை நின்றிருப்போமே’, ‘ஏன் எங்களை ஏமாற்றி விட்டு சென்றாய்?’ என்றெல்லாம் முன்னணி பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப்பக்கங்களில் உருக்கமாகப் பதிவிட்டு வந்தனர். ஆனால் இந்தப்பதிவுகளைப் பார்த்து பலரும் அனுதாபப்படாமல் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். பாலிவுட் பிரபலங்கள் கூட தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். பிரபல ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி, “கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எவ்வித ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை. அவருக்கு உதவி செய்ய கை கொடுக்கவும் இல்லை” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

𝕓𝕦𝕞𝕓𝕒𝕚 𝕜𝕚 𝕣𝕒𝕟𝕚 @sapnabhavnani
It’s no secret Sushant was going through very tough times for the last few years. No one in the industry stood up for him nor did they lend a helping hand. To tweet today is the biggest display of how shallow the industry really is. No one here is your friend. RIP
 நடிகை கங்கனா ரனாவத், “பாலிவுட் திரையுலகின் அழுத்தம் காரணமாகவே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். தனது திரைப்படங்களில் சிறப்பாக அவர் நடித்திருந்தாலும் எவ்விதமான அங்கீகாரமும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ‘கல்லிபாய்’ போன்ற மோசமான திரைப்படங்களுக்கு அனைத்து விருதுகளும் கிடைத்துள்ளன”என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

சுஷாந்தின் தற்கொலைக்கு யார் காரணம்?
இவ்வாறு பலரும் கூறிவந்த நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான கமால் ஆர்.கானின் ட்விட்டர் பதிவுகள் ரசிகர்களை மேலும் சிந்திக்க வைத்தது.


KRK @kamaalrkhan
It’s the truth that Only 6 companies control entire Bollywood and they can finish anyone’s career if they don’t like him/her!
1) Dharma (Karan Johar)
2) YRF ( Aditya Chopra)
3) TSeries (Bhushan)
4) Balaji ( Ekta Kapoor)
5) Nadiadwala (Sajid)
6) Salman khan films!

கமால் தனது பதிவு ஒன்றில், “சல்மான் கானின் திரைப்படங்கள், கரண் ஜோகரின் ‘தர்மா’, ஆதித்ய சோப்ராவின் YRF, பூஷனின் ‘டி சீரிஸ்’, ஏக்தா கபூரின் ‘பாலாஜி’ மற்றும் சஜித்தின் ‘நாடியாவாலா’ என இந்த ஆறு நிறுவனங்கள் தான் பாலிவுட் திரையுலகைக் கட்டுப்படுத்தி வருகிறது. அவர்கள் நினைத்தால் யாருடைய திரை எதிர்காலத்தை வேண்டுமானாலும் அழித்துவிட இயலும்”என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதற்கு வலு சேர்க்கும் விதமாக தற்போது இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் 2019ஆம் ஆண்டு 5 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு தயாரிப்பிற்காக பத்து திரைப்படங்களைத் திட்டமிட்டு வைத்துள்ளது. அதே போன்று YRF நிறுவனம் 2019-2020 வருடத்திற்காக 7 படங்களைத் தயாரிக்கவுள்ளது. அதே போன்று ‘டி சீரிஸ்’, ‘பாலாஜி’,‘நாடியாவாலா’ நிறுவனங்களும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் என்று அடுத்த வருடத்திற்கும் சேர்த்து தயாரிப்புக்கான திட்டங்களை வைத்துள்ளனர். இந்த விவரங்களைக் குறிப்பிட்டு இந்தி திரையுலகில் இவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதை ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
ஒடுங்க வைத்ததா ஒற்றுமை?
பிற மொழி திரைத்துறைகள் போன்ற அதிக போட்டி, பொறாமைகள் இல்லாமல் பாலிவுட்டில் ஒருவருக்கு ஒருவர் துணையாகவே இருக்கின்றனர். படத் தயாரிப்பிற்கான பணமும், விநியோகமும் ஒருவரை ஒருவர் சார்ந்தே நடந்து வருகிறது. இத்தகைய வழிமுறைகள், சரியான திட்டமிடல், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஒற்றுமை போன்றவை இந்தி திரையுலகின் பெரும் பலமாகப் பலரும் பாராட்டி வந்தனர். ஆனால் அதே நேரத்தில் இந்த ஒற்றுமையின் காரணமாக சிலர் பாதிக்கப்பட்டும் வந்தனர்.
இவர்களில் எவரேனும் ஒருவருக்கு ஒரு நடிகர் எதிரியாகி விட்டால் அவர், மற்றவர்களும் அவரை எதிராளியாகவே நடத்துகின்றனர். திறமை இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவரது எதிர்காலம் கேள்விக் குறையாகி விடுகிறது. இதே நிலை தான் சுஷாந்துக்கும் ஏற்பட்டதாக இந்தி திரையுலக வட்டாரங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இவற்றை எல்லாம் பொருத்திப் பார்க்கும் ரசிகர்களும், சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கி வைத்து, இந்தப் பிரபலங்கள் தான் அவரை மன அழுத்தத்திற்குத் தள்ளியதாக நம்பத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலை நீதிமன்ற வழக்கின் முடிவு வெளி வரும் நேரத்தில் தெரியவரும்.

தற்கொலைக்கு எதிராகத் திரைப்படம் நடித்த, தன்னம்பிக்கை குறித்து தொடர்ந்து பேசி வந்த சுஷாந்த் மாதிரியான ஒரு இளைஞர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்பதை நம்ப இயலாமல் அவரது ரசிகர்கள் மனமுடைந்து போயுள்ளனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை: