சனி, 20 ஜூன், 2020

சீன பொருட்களை தூக்கி எறியுங்கள் .... தினமலர்

Made in China Patel 
 சீனப் பொருட்களை புறக்கணிப்போம், தூக்கியெறிவோம்! தினமலர் : கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவது போல், கடலுக்கு சொந்தக்காரன், மீன் கடன் வாங்குவது போல், சீனாவில் இருந்து தேவையில்லாத பொருட்களை எல்லாம் இந்தியா வாங்கிக் கொண்டிருக்கிறது.
சீனாவில் இருந்து இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் பொருட்களின் சுருக்கமான பட்டியல்: அகர்பத்தி, மிட்டாய், பட்டாசு, பொம்மை, பரிசுப் பொருள், சைக்கிள், பெண்களுக்கான அழகு
சாதனங்கள், ஜவுளி, பர்னிச்சர்கள், கைக்கடிகாரங்கள், செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், உரம், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சை கருவிகள்.இவை எல்லாம், இந்தியாவிலேயே தயாரிக்க முடியாத பொருட்களா என்ன?அதே வேளையில், இந்தியாவில் இருந்து பருத்தி, செம்பு, பெட்ரோலியப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கான சிறிய கருவிகள் ஆகியவற்றை மட்டுமே சீனா இறக்குமதி செய்கிறது.
இந்த இறக்குமதி- ஏற்றுமதி, சீனாவுக்கு அமோக லாபமாகவும், இந்தியாவுக்கு பயங்கர நஷ்டமாகவும் இருந்து வருகிறது. 2001ல் வெறும் 1 பில்லியன் டாலர் (7,600 கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்களை மட்டுமே சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இப்போது, சீனப் பொருட்களின் இறக்குமதி அளவு 70 பில்லியன் டாலர் (5 லட்சத்து, 32 ஆயிரம் கோடி) சீனப் பொருட்கள், இந்தியச் சந்தைகளில் வந்து குவிகின்றன.

அதேசமயம், சீன சந்தையில் இந்தியப் பொருட்கள் நுழைவதை அந்த நாடு அதிரடியாகக் குறைத்துக் கொண்டே போகிறது. இதனால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, 49 பில்லியன் டாலர்களாக (3 லட்சத்து, 72 ஆயிரத்து, 400 கோடி) அதிகரித்துள்ளது.இதில் இன்னொரு கோல்மாலும் புதைந்து இருக்கிறது. சுங்கவரி கட்டாமல் ஏமாற்றுவதற்காக சில இந்திய வர்த்தகர்கள், மதிப்பை குறைத்து காட்டி சீன சரக்குகளை இறக்குமதி செய்வதாகவும் புகார் உள்ளது. அப்படி திருட்டுத்தனமாக வந்திறங்கும் சீன பொருட்கள் எத்தனை ஆயிரம் கோடியோ?


இந்தியா, 'செக்'


இதே நிலவரம் தொடர்ந்தால் என்னாகும்? இந்தியாவின் சொந்தப் பொருளாதாரம் சின்னாபின்னமாகி, சீனாவின் புதிய காலனி நாடாக, இந்தியா மாற வேண்டியிருக்கும்.இந்த பாதிப்பை தடுப்பதற்காகத்தான், 'மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா' என்பது போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கத் துவங்கியது. இதில் கதிகலங்கிய சீனா, குள்ளநரித் தனத்தைத் துவங்கியது.


மேக் இன்


இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களில் அதிக முதலீடுகளைச் செய்யவும், இந்தியாவில் உள்ள நலிந்த நிறுவனங்களை வாங்கவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.இதற்கு, 'சில குறிப்பிட்ட நாடுகளின் வெளிநாட்டு முதலீடுகள், மத்திய உள்துறை ஒப்புதலுக்குப் பிறகே அனுமதிக்கப்படும்' என்ற அதிரடி உத்தரவால், மத்திய அரசு, 'செக்' வைத்தது.இதற்கிடையில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும் (சி.ஏ.ஐ.டி.,) சில அதிரடி நடவடிக்கைகள் மூலம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பைக் கணிசமாகக் குறைக்கத் துவங்கியது.

இதனால், 2017 - --18ல், 78 பில்லியன் டாலர்களாக இருந்த சீன இறக்குமதி மதிப்பு, 2018- - 19ல், 70 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது.சமீபத்தில் இந்த அமைப்பு, 'சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், 3,000த்துக்கு மேற்பட்ட பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடியும். அந்த பொருட்களை இனி இறக்குமதி செய்யமாட்டோம்.
'இதன் மூலம், 2020ம் ஆண்டு இறுதியிலேயே, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் தொகையை, 20 சதவீத அளவில் அதாவது, 55 பில்லியன் டாலராகக் குறைக்க முடியும்' என்று அறிவித்துள்ளது.சமீபத்தில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கு, 'ஆத்மநிர்பார்' என்ற பெயரிலான சுயமான தொழில் வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார்.
இந்த திட்டங்கள் எல்லாமே, இந்தியப் பொருளாதாரத்தில் சீன ஆதிக்கத்தைத் தவிர்க்கும், 'செக்' என்பதை சீனா மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறது.


கொரோனா பிசினஸ்


சீனாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி, 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற திட்டத்தைக் கடுமையாக அமல்படுத்துவதால், அங்கு இப்போது மனிதவளத்துக்கு கடும் நெருக்கடி வந்துள்ளது.
சீனாவில் இளையதலைமுறையினர் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவும், முதியவர் எண்ணிக்கை மிக மிக அதிகமாகவும் உள்ளது. இதனால் தான், இந்தியா உள்ளிட்ட பல பெரிய சந்தை நாடுகளில் முதலீடுகளைக் குவித்து, 'அவுட்சோர்சிங்' பாணியிலான பிசினஸ்களை அதிகரிக்க, சீனா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாகவே, கொரோனா வைரஸை சீனா பரப்பியது என்று, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிடம் பலத்த சந்தேகம் உள்ளது. கொரோனா பரிசோதனை கிட்களுக்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் சீன நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில், 'ஆர்டர்' கொடுத்தன. அவை தரமற்றவை என்று தெரிந்ததும், அவற்றை திருப்பி அனுப்பின.


விழிப்புணர்வு


இந்திய அரசின் இந்த அதிரடி, கொரோனாவைப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளில் கிட்களை விற்றே மிகப்பெரிய பிசினஸ் செய்யலாம் என்ற சீனாவின் பிளானுக்கு சாவுமணி அடித்துவிட்டது. இப்படி, இந்திய அரசின் அதிரடிகளால் அடிமேல் அடி வருகிறதே என்ற ஆத்திரத்தில் தான், லடாக் எல்லையில் திடீர் சண்டையைத் துவங்கி வாலாட்டத்தை ஆரம்பித்திருக்கிறது சீனா.

'சீனப் பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கக் கூடாது. இந்தியத் தொழில் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என்ற மிரட்டல் மெசேஜ், இந்த எல்லைத் தாக்குதலில் இணைந்துள்ளது.இந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியப் போகிறோமா? எல்லையில் வீர மரணம் அடைந்த நம் ரத்த சொந்தங்களுக்கு எப்படி அஞ்சலி செலுத்தப் போகிறோம்? சீனத் தயாரிப்புகளை இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதன் மூலம், அந்த தியாகிகளின் ஆன்மா சாந்தியடையும். தாய்நாட்டுக்கான பங்களிப்பை நாம் செய்ததாகவும் இருக்கும்.
சீனா இப்போது மோதலைத் துவங்கியதற்காக மட்டும் இதைக் கூறவில்லை. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு இந்த விழிப்புணர்வு அவசியப்படுகிறது.

சீனாவின் செயலிகளும், செல்போன்களும், தகவல்களைத் திருடி சீனாவுக்கு அனுப்பி வைக்கும். சீனாவின் பொம்மைகள், கிரேயான் போன்றவை குழந்தைகளின் உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சீனப் பொருட்களின் விலை மலிவு என்பதால், அவை அதே பொருட்களைத் தயாரிக்கும் இந்தியத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்குகின்றன.உதாரணமாக, இந்திய பொம்மை தயாரிப்பு தொழிலும் இருக்கும் இடமே தெரியாமல் தேய்ந்துவிட்டது; சீன பட்டாசுகளால் இந்தியப் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது.

சீனாவின் கொரோனா கிட்கள் தரமற்றவை என்று கண்டுபிடிக்கப்பட்டதால், அவை திருப்பி அனுப்பப்பட்டன. அது கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், சீன கிட்களை மட்டுமே பரிசோதனைக்குப் பயன்படுத்தியிருந்தால், எத்தனை கோடி இந்தியர்கள் மரணமடைந்திருப்பர்? மருத்துவக் கருவியிலேயே இப்படி ஒரு துணிகரச் சதியில் ஈடுபட்டுள்ள சீனா, பொம்மை முதல், செல்போன் ஆப் வரை என்னென்ன சதியை இணைத்திருக்கும் என்று யாருக்கு தெரியும்?
எனவே, தேச பாதுகாப்புக்காகவும், சொந்த பாதுகாப்புக்காகவும் இந்திய மக்கள், தாங்களாகவே சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும். 'சீனாவிடம் இருந்து விலகி இருப்போம்; சீன பொருட்களை புறக்கணிப்போம்; வீட்டிலிருக்கும் சீன பொருட்களை துாக்கி எறிவோம்' என்பதில், நாம் இன்றிலிருந்தே தீவிரமாக இருக்க வேண்டும்


இனி ஒருவிதி செய்வோம்!


* இன்று முதல் ஒரு சீன பொருளையும் வாங்க மாட்டேன் என்று உறுதி எடுப்போம்.
* சீன உதிரிபாகங்கள் இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர் உப கரணங்களை புறக்கணிப்போம். உள்ளூர் தயாரிப்பு செல்போன்களையே பயன்படுத்துவோம்.
* டிக் டாக் போன்ற சீன, 'ஆப்ஸ்'களை நம் செல்போனில் நுழைய விடக்கூடாது.
* 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது வெள்ளையர்களின் துணிமணிகளை பொது இடங்களில் போட்டு எரித்து, வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தவர்கள், நம் முன்னோர். அதேபோல, சீன பொருட்களை பொது இடங்களில் கொட்டி அழிக்க வேண்டிய காரியத்தை, இப்போது நாம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஸ்டெர்லைட் மூடல் சதி


துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு வழிவகுத்த போராட்டங்களின் பின்னணியில் சீன சதி உள்ளது என்று, ஐகோர்ட்டிலும், தனிப்பட்ட பேட்டிகளிலும் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா குழும பிரதிநிதிகள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர்.அவற்றின் சாராம்சம்: “இந்தியாவின் காப்பர் தேவையில், 38 சதவீதத்தை, ஸ்டெர்லைட் ஆலை தான் நிறைவேற்றி வந்தது. காப்பர் என்பது, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான உலோகம். காப்பர் மூலமே மின்கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. மின் கம்பிகள் இல்லாமல் மின்மோட்டார்கள் இல்லை. மின்மோட்டார்கள் இல்லாமல் மிக்ஸி, மோட்டார் பம்ப், ஜெனரேட்டர் உட்பட மின்சாதனங்கள் இல்லை.எனவே, ஒரு நாட்டில் காப்பர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அல்லது காப்பரை அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வைத்தால், அந்த நாட்டின் தொழில்- பொருளாதார வளர்ச்சியில் பெரும் தேக்கநிலையை ஏற்படுத்தி விடலாம்.
இந்த வகையில் தான், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்து, இந்தியாவில் காப்பர் தட்டுப்பாட்டை உருவாக்கியிருக்கிறது சீனா. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய வேளையில், இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி அதிகமாகவும், காப்பர் இறக்குமதி குறைவாகவும் இருந்தது; சீனா துாண்டிவிட்ட போராட்டங்களால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், இந்தியாவின் காப்பர் தட்டுப்பாடு அதிகரித்து, காப்பர் இறக்குமதி அதிகரித்தது.
காப்பர் தட்டுப்பாடு மற்றும் அதிக இறக்குமதி விலையால், காப்பர் சார்ந்த மின்மோட்டார் போன்றவற்றைத் தயாரித்த பல்லாயிரக்கணக்கான சிறு சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.இப்படித்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கும் சதித்திட்டங்
களை ஒவ்வொன்றாக அரங்கேற்றி வருகிறது சீனா.


நீங்களும் நானும் ராணுவ வீரனே!


'நீயும் நானும் சகோதரர்கள்' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, எல்லை தாண்டி, வந்து அடித்தவர்கள் தான் சீனர்கள். இது, 1962 வரலாறு.அடுத்து, இலங்கை அம்பன்தோட்டா துறைமுக திட்டத்தில் முதலீடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார தாழ்வார திட்டம், நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள், 'சப்ளை' என்ற பெயரில், நட்பு நாடான நேபாளத்தை நம்மிடம் இருந்து பிளவுபடுத்தும் முயற்சி என்று சீனாவின் அடாவடி கொஞ்சம்கூட குறையவில்லை சர்வதேச அரங்கில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கவிடாமல், அணு சப்ளை குழுவில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவிடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நாடு, சீனா.இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதங்களை அரங்கேற்றிவரும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் வக்காலத்து வாங்கி, அவர்கள் மீது சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் அரணாக இருந்து வருவது, சீனா.

இப்போது ஒரு புறம் பேச்சு நடத்திக்கொண்டு, தாக்குதல் நடத்தி நம் சொந்தங்கள், 20 பேர் உயிரை பறித்துஉள்ளனர். நமக்கெல்லாம் ரத்தம் கொதிக்கிறது. எப்படி பதிலடி கொடுக்கப் போகிறோம். நம்மால் என்ன செய்ய முடியும் என்று கை பிசைந்து நிற்க வேண்டியதில்லை. நம் ஒவ்வொருவராலும் சீனாவின் முகத்தில் குத்துவிட முடியும். எப்படி தெரியுமா...?சீனாவின் பலம், அதன் பொருளாதாரம். நம்முடைய இறக்குமதியில் சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது. விலை மலிவு என்ற ஒரே காரணத்துக்காக, தரம் குறைந்த சீனப் பொருட்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால், முறைப்படுத்தப்படாத நம்முடைய சில்லரை விற்பனை சந்தையில், சீன பொருட்களின் ஆதிக்கம் மேலோங்குகிறது. அது, தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் நம்முடைய சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதிக்கிறது. சீன பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தையாக நாம் இருந்து வருகிறோம்.

நாம் விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு சீன பொருளுக்குமான லாபத்தை, சீனா நம் நாட்டுக்கு எதிராகவும், நம் தொழில் வளர்ச்சிக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது. ஆக, நாமே நம் நாட்டுக்கு துரோகம் செய்வது போலாகிறது.அந்தக் காரியத்தை நாட்டுப்பற்றுள்ள எந்த இந்தியனும் இனி செய்யக்கூடாது. சீனாவின் மூக்கை நசுக்க நம்மிடம் இருக்கும் சுலபமான வழி, சீன பொருட்களை புறக்கணிப்பது தான். சீன பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தகர்களும், நாட்டு நலனில் அக்கறை கொண்டு அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.சீனாவுக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களே. நம்முடைய ஆயுதம், நம் பாக்கெட்டில் இருக்கும் பணம். அதை சீனாவுக்கு எதிராக திருப்புவோம். சீன பொருட்களை புறக்கணிப்போம், இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று சபதமேற்போம்.

கருத்துகள் இல்லை: