செவ்வாய், 24 செப்டம்பர், 2019

பாப்பாத்தியாக எனக்கு ஏன் பெரியாரை பிடித்தது ?

upaudionetwork.wordpress.com : என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார்
என்றால் சூத்திரன்,பிராமண துவேஷி என்று மட்டுமே என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் கூறி நான் கேட்டுள்ளேன். அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றுலிருந்தே என்னுடைய நண்பர்களிடம் பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக பேசியதே மிக அதிகம்.
பின் என்னுடைய கல்லூரி நாட்களில் எல்லாதவிதமான மாணவர்களுடனுமே நட்பு வைத்திருந்தே. அதில் ஒரு நண்பன் மூலம் பெரியாரை பற்றின சரியான புரிதலை கிடைக்கப்பெற்றேன். அன்று நான் முக்கியமாக புரிந்துகொண்ட விஷயம் பெரியாரின் மூலம் பிராமணப் பெண்கள் நிறையவே பலன் அடைந்துள்ளனர்.


பொதுவாக இந்த ஜாதி கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கத்தின் அழுத்ததின் காரணமாக பெண்கள் தங்களுடைய ஜாதி பெருமையை நிறைய பேசுவார்கள் . குறிப்பாக பாப்பாத்திகள் நிறையவே பேசுவார்கள். அப்படி தன்னுடைய ஜாதி பெருமையை பேசவில்லை என்றால் பிராமண ஆண்கள் தங்களை பிராமண பெண்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற பயமும் கூட இவர்கள் தங்களுடைய ஜாதி பெருமையை பேசுவதர்கான ஒரு முக்கியமான காரணம்.
அப்படி என்ன பெரியார் பார்ப்பன பெண்களுக்கு செய்துவிட்டார் ?
அந்த காலத்தில் மொட்டை பாப்பாத்தி என்ற கிண்டலான சொல்லாடல் இருந்தது, அது முக்கியமாக பார்ப்பன பெண்கள் தன்னுடைய கணவனை இழந்த பிறகு மொட்டை அடித்து காவி புடவையுடன் வீட்டின் ஓரமாக உக்கார வைத்து விடுவார்கள்.

அது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்தது. பெரியாருடைய பெண் விடுதலை போராட்டத்தின் பின் இந்த வழக்கம் முழுவதுமாக தமிழ்நாட்டில் இருந்து கைவிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மநுஸ்மிருதியின் படி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரக்கூடாது என்றும் அவர்களை மாதவிடாயின் போது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வழக்கங்களை பார்ப்பன ஆண்கள் அவர்களுடைய வீட்டு பெண்களிடம் காண்பித்து வந்தனர்.
பின் பெரியார் இது எந்த அளவிற்க்கு முட்டாள் தனம் பெண்களுக்கு கண்டிப்பாக சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார். பின் பெண்கள் அடக்கு முறையில் உள்ள காலகட்டத்தில் மறுமணம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக இருந்துள்ளது.
அதை மிக முற்போக்காக அன்றே மறுமணம் கண்டிப்பாக பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்று பேசியவர் பெரியார். கருத்தடுப்பு, பெண்கள் கல்வி போன்ற பலதரப்பட்ட பிரச்னைகளை பார்ப்பனியம் தனக்கு சாதகமாக உபயோகித்து கொண்டதை தடுத்து அவர்களுக்கு கண்டிப்பாக சம உரிமை தரவேண்டும் எனக் கூறியவர் பெரியார்.
தேவதாசி முறையை அடியோடு கிள்ளி எறிவதற்காக முத்துலட்சுமி ரெட்டி உடன் போராடியவர்.
மேலே குறிப்பிட்ட அனைத்துமே சாஸ்திரத்தின் மூலம் பார்ப்பன பெண்களை ஒடுக்கி வைத்தனர்.பின் பெரியாரின் பெண்கள் அடிமைத்தனத்திற்கான குரல் கண்டிப்பாக பார்ப்பன பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இன்றளவும் இருந்துவந்துள்ளது.
உதாரணத்திற்கு எல்லா பார்ப்பன வீடுகளிலுமே பெரியாரைவிட மஹாபெரியவாளுக்கு கூடுதல் மதிப்பு இன்றளவும் உள்ளது.பார்ப்பன பெண்கள் சந்திரசேகர ஸ்வாமிகளை தங்களுடைய உயிராகலாம் வணங்குகின்றனர். ஆனால் பெண்களுக்கான சம சொத்து உரிமை சட்டம் இயற்றப்பட்ட பொழுது அதை எதிர்த்து பெண்களுக்கு எதற்கு சொத்தில் சமஉரிமை என டெல்லியில் போராட்டதையெல்லாம் முன்னெடுத்தவரே ஸ்வாமி சந்திரசேகர்தான்.
ஆனால் பெரியார் கடைசி வரை பெண்களுக்கான மிக முற்போக்கான சிந்தனை மற்றும் செயல்களை முன்னெடுத்தார்.
உங்கள் தங்கையிடமோ, அக்காவிடமோ சென்று அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்டுப்பாருங்கள் அண்ணன் என்றும் பார்க்காமல் செருப்பு பிஞ்சிடும் என்று பதிலளிப்பார்கள் . அங்கே வாழ்கிறார் பெரியார்.
தான் பார்பனீயத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல்.பெரியார் என்ன செய்தார் என்று கூட தெரியாமல் அவரை திட்டும் பார்ப்பன பெண்கள் ஒருமுறை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களால் படிக்க முடிகிறது என்றால் அதற்கு பெரியாருடைய பங்கு கண்டிப்பாக உண்டு.
அதற்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுத்தான் உள்ளோம்.
அவர் கிழவர் அல்ல எல்லாருக்குமான கிழக்கு திசை.
பெரியாருடைய 141 பிறந்தநாள் இன்று.

கருத்துகள் இல்லை: