வியாழன், 26 செப்டம்பர், 2019

கைவிரித்த திமுக: பசையான வேட்பாளர் தேடும் காங்கிரஸ்

கைவிரித்த திமுக:  பசையான வேட்பாளர் தேடும் காங்கிரஸ்மின்னம்பலம் : வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுகவும், அதிமுகவும் அறிவித்துவிட்ட நிலையில்- திமுக கூட்டணியில் நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் தனது வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை.
23,24 ஆம் தேதிகளில் சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளர் என்று விசாரித்தோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது அழகிரியோடு தனியாக கொஞ்ச நேரம் ஆலோசித்தார். ‘இந்த இடைத் தேர்தலில் நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனாலும் கூட்டணி தர்மம் கருதி திமுக அங்கே போட்டியிடவில்லை. திமுக தரப்பில் முழுமையான உழைப்பைத் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால் பொருளாதார ரீதியில் இப்போது எங்களால் எந்தவித உதவியும் செய்ய முடியாது. அதனால் பண பலமுள்ள வேட்பாளராக தேர்வு செய்யுங்கள்’ என்ற ரீதியில் ஆலோசனை கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் தனது கட்சி நிர்வாகிகளிடத்தில் இதைச் சொல்லி மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, பண பலமும் இருக்கும் பசையான வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்தே பீட்டர் அல்போன்ஸ் நாங்குநேரியில் நிற்பதற்கு முயன்று வந்தார். ஆனால் இருபது கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால் மெல்ல மெல்ல தன்னைத் தள்ளி வைத்துக் கொண்டார்.
நாங்குநேரியைக் குறிவைத்து மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் விருப்பமனு கொடுத்திருக்கிறார். இந்தத் தகவலை அறிந்ததுமே குமரி எம்.பி.யான வசந்தகுமார் அழகிரியிடம், ‘நீங்க பாட்டுக்கு அவருக்கு கொடுத்துடாதீங்க. இப்பதான் எம்பி தேர்தல் செலவை முடிச்சிருக்கேன். இன்னொரு தடவை நான் செலவு பண்ண முடியாது’ என்று கூறிவிட்டார்.
ஊர்வசி சோப் அதிபர் செல்வராஜின் மகன் அமிர்தராஜ் நாங்குநேரியை குறிவைப்பதாக ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் உலவியது.
அதுபற்றி விசாரித்தபோது, “அமிர்தராஜின் தந்தை ஊர்வசி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அந்த அடிப்படையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியைக் கேட்டார் அமிர்தராஜ். ஆனால் தூத்துக்குடி தொகுதி கனிமொழிக்கு என தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதால் எடுத்த எடுப்பிலேயே அது மறுக்கப்பட்டது. அதனால் அப்படியே விட்டுவிட்டார். இப்போது நாங்குநேரியில் நிற்க அவருக்கு விருப்பமில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நிற்கவே விருப்பம். என்றாலும் என்ன நடக்குமோ ” என்கிறார்கள்.
இந்த நிலையில் இப்போதைக்கு காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ரூபி மனோகரனின் பெயர்தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது என்கிறார்கள்.
குமரிக் காரரான ரூபி மனோகரன் கடந்த மக்களவைத் தேர்தலிலேயே குமரி தொகுதியைக் கேட்டார். ஆனால் அப்போது குமரியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வசந்தகுமாரின் ஆதரவாளர்கள், ரூபி மனோகரனுக்கு எதிராக முழக்கமிட்டு அவருக்கு சீட் கொடுக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமாரும் ஒதுங்கிக்கொள்ள சமூக செல்வாக்கும்(கிறிஸ்துவ நாடார்), பண பலமும் கொண்ட வேட்பாளர் என்றால் அது ரூபி மனோகரன் தான் என்பதால் அவரது பெயரே முன் வரிசையில் இருக்கிறது என்கிறார்கள்.
திமுக நிதியுதவி செய்ய மறுத்துவிட்டதால்தான் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் இந்த அளவுக்கு யோசித்து யோசித்து முடிவெடுக்கிறது.

கருத்துகள் இல்லை: