மாலைமலர் :
கேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி
தலைமையிலான குழுவினர், நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று மதியம் சந்தித்தனர்.
இக்குழுவினருடன் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்
திருவனந்தபுரம்:
தமிழ்நாட்டுக்கும்,
கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன.
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு
அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக இரு
மாநிலங்களும் பேசி வருகின்றன.
கோவை மாவட்ட
மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பி குளம்-ஆழியாறு, ஆனை
மலையாறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது ஆகிய
பிரச்சினைகளும் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ளன. அத்துடன், குமரி
மாவட்டம் நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விடுவது உள்பட நதிநீர்
பங்கீட்டு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நீர் பிரச்சனையில் முல்லை பெரியாறு அணை வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதுபோல
மற்ற நதிநீர் பிரச்சனைகளிலும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. பல
ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்சனையால் இரு மாநிலங்களிலுமே மழைநீர் வீணாகி
வருகிறது. பருவமழை காலத்தில் கிடைக்கும் தண்ணீர் அனைத்தும் வீணாக
கடலுக்குச் செல்கிறது.
கடலில் வீணாக கலக்கும்
தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட இப்பிரச்சனையில் சுமூக முடிவு
காண வேண்டுமென்று தமிழக-கேரள விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த கேரள
முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நதிநீர் பிரச்சினையை பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தார். இதனை பினராயி விஜயனும் ஏற்றுக் கொண்டார்.
நதிநீர்
பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு மாநில முதல்வர்களும் ஒப்புதல்
அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தை
நடந்தது. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள்
மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு மாநில முதல்வர்களும்
சந்தித்துப் பேச தேதி முடிவானது.
அதன்படி, தமிழக
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்
இருவரும் இன்று மதியம் 3 மணிக்கு சந்தித்துப் பேசினர். திருவனந்தபுரத்தில்
உள்ள மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நினைவுப் பரிசு வழங்கினார்.
முன்னதாக,
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற தமிழக
முதல்வருக்கு கேரள அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமியுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித்
துறை அமைச்சர் வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், துணை
சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம்,
முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் சாய்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.
இக்குழுவினருடன் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக