புதன், 25 செப்டம்பர், 2019

மோடியின் கோபம்…அமித்ஷாவின் திடீர் பல்டி… தி.மு.க.வுக்கு வெற்றியா?அதிர்ச்சி ரிப்போர்ட்!

bjp
dmkgovernornakkheeran.in - இரா. இளையசெல்வன் : அமித்ஷாவின் இந்தி பொது மொழி என்கிற கருத்து, பிரதமர் மோடியுடன் மோதலை உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். தேசிய அளவில் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தி திணிப்பு எதிர்ப்பில் எப்போதும் உறுதியாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை கடந்த 16-ந்தேதி அவசரமாக கூட்டிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  அமித்ஷாவின் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என அறிவித்தார்.

தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம் 20-ந்தேதி நடக்கவிருந்த நிலையில், 18-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலாலை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்ததன் பின்னணியில் பல்வேறு யூகங்கள் றெக்கை கட்டிப்பறந்தன. அதேசமயம், ராஜ்பவனுக்கு ஸ்டாலின் செல்லவிருந்த அரை மணி நேரத்துக்கு முன்பாக, “இந்தியாவின் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நானே, இந்தி மொழி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவன்தான்’ என திடீர் பல்டி அடித்திருந்தார் அமித்ஷா.

அமித்ஷாவின் பல்டி, தி.மு.க.வுக்கு வெற்றியா? கவர்னர்-ஸ்டாலின் சந்திப்பு, தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல்வேறு தரப்புகளிடம் விசாரித்தோம். பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் விசாரித்த போது, பா.ஜ.க.வின் தோழமை கட்சிகளின் தலைவர்கள், காங்கிரசிலுள்ள மோடி ஆதரவு தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என பலரும் அமித்ஷாவின் பேச்சுக்குறித்து தங்களது அதிருப்தியை மோடியிடம் தனிப்பட்ட முறையில் பதிவு செய்துள்ளனர். “இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அமித்ஷாவின் இத்தகைய கருத்துகள் நாட்டில் பிரிவினைகளை உருவாக்கும்; உங்கள் அரசு மீது எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தும்’ என்கிற ரீதியில் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும், கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டாவையும் அழைத்துப் பேசியிருக்கிறார் மோடி. அப்போது, தன்னிடம் பேசிய மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படுத்திய அதிருப்தியை சொல்லி, “மொழிப் பிரச்சனையில் நீங்கள் சற்று அமைதியாக இருந்திருக்கலாம். சர்ச்சைகளை உருவாக்கியிருக்கத் தேவையில்லை’ என அமித்ஷாவிற்கு அட்வைஸ் செய்திருக்கிறார் மோடி. “இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழி இருக்க வேண்டும்ங்கிறதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம். அதனை இந்தி மொழி தினத்தில் பேசியது எப்படி தவறாகும்?’ என அமித்சா சொல்ல, “சித்தாந்தத்தை மொழிப் பிரச்சனையில் புகுத்த முயற்சித்தால் பிரச்சனைகள் நமக்கு எதிராகத்தான் திரும்பும்’ என சற்று கடினமாக சொல்லியிருக்கிறார் பிரதமர்.

அதற்கு, “தனிப்பட்ட விருப்பத்தைச் சொல்வது, மொழியின் ஆதிக்கத்தை புகுத்துவதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லையே’ என அமித்ஷாவும் வேகம் காட்டியிருக்கிறார். அப்போது, “உங்களின் பேச்சுக்கு பல மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு காட்டியிருக்கிறார்கள். உங்கள் பேச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது தி.மு.க. தமிழகத்தில் எழும் அந்த ஆர்ப்பாட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் எதிரொலிக்கும் என உளவுத்துறை ரிப்போர்ட் தந்திருக்கிறது. இந்திக்கு எதிரான போராட்டத் தீ பரவினால் அதனை எப்படி சமாளிப்பது? இந்த விசயத்தில் நீங்கள் அவசரம் காட்டியிருக்கக்கூடாது’ என கோபம் காட்டியுள்ளார் மோடி. இதனால் ஒரு கட்டத்தில் வாக்குவாதங்கள் மோதலாக வெடித்திருக்கிறது. ராஜ்நாத்சிங் உள்ளிட்டவர்கள் அமைதிப்படுத்த, தனது பேச்சுக்கு மறுப்பு சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அமித்ஷா” என்று டெல்லியில் நடந்ததை விவரிக்கின்றனர்.


மோடிக்கும் அமித்ஷாவுக்கும் 17-ந்தேதி இரவு வாக்குவாதம் நடந்து முடிந்த நிலையில், தி.மு.க.வின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற ஆலோசனையும் நடந்திருக்கிறது. இது குறித்து தி.மு.க.வின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அமித்ஷா தரப்பு பேசியிருக்கிறது. அவரோ, “தளபதியின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்’ என்றிருக்கிறார். இந்த நிலையில்தான் 18-ந்தேதி காலையில் ஸ்டாலினை தொடர்புகொண்டு பேசிய ராஜ்பவன் அதிகாரிகள், “கவர்னர் உங்களை சந்திக்க விரும்புகிறார். மாலை 5 மணிக்கு ராஜ்பவன் வர முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே டி.ஆர்.பாலு மூலம் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், கவர்னரை சந்திக்க சம்மதித்தார் ஸ்டாலின்” என போராட்ட ஒத்திவைப்பின் பின்னணியை விவரித்தனர் மத்திய உளவுத்துறையினர்.
தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, “கவர்னரை சந்திக்க செல்லும் போது டி.ஆர்.பாலுவை மட்டுமே அழைத்து சென்றார் ஸ்டாலின். ராஜ்பவனுக்கு ஸ்டாலின் செல்வது கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தெரியாது. கடைசி நேரத்தில் தெரிந்ததும் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டவர்கள் ராஜ்பவனுக்கு விரைந்தனர். ஸ்டாலினையும் டி.ஆர்.பாலுவையும் சேர்த்து சந்தித்த கவர்னர், ஸ்டாலினிடம் மட்டும் தனியாக 15 நிமிடம் பேசியிருக்கிறார். இந்தியை திணிக்கமாட்டோம் என மத்திய அரசின் சார்பில் கவர்னர் உறுதியாக சொன்னதால் அவரின் வார்த்தைகளுக்கு மரியாதை தரும் வகையில் ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள்.


ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்த போது, “இந்தியை திணிப்பது மத்திய அரசின் நோக்கமல்ல. உங்கள் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கவர்னர் சொல்ல, “நீங்கள் சொல்வதை எந்த வகையில் நாங்கள் ஏற்பது?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, “மத்திய அரசின் பிரதிநிதி நான். டெல்லியிலிருந்து உத்தரவிடாமல் உங்களை அழைத்திருக்க மாட்டேன். சற்று முன்புதான் ஹோம் மினிஸ்டரும் (அமித்ஷா) இதுபற்றி பேட்டிக் கொடுத்திருக்கிறார். அதனால் எனது வார்த்தைகளை உத்தரவாதமாக எடுத்துக்கொள்ளலாம்’ என கவர்னர் அழுத்தமாக சொல்ல, அதன்பிறகே ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக கவர்னரிடம் உறுதி தந்தார் ஸ்டாலின்” என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.


“ராஜ்பவன் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த ஸ்டாலின், கலைஞரின் உதவியாளர்களில் ஒருவராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜமாணிக்கத்தை தொடர்புகொண்டு பேசி விட்டு ஆர்ப்பாட்டம் ரத்து எனச் சொல்லாமல் ஒத்திவைப்பதாக கூறினார்” என்கிற தி.மு.க.வினர், “உயர்நிலை செயல் திட்டக்குழுவை கூட்டி ஆர்ப்பாட்ட முடிவை எடுத்த ஸ்டாலின், அதே குழுவைக்கூட்டி விவாதித்து முடிவை தெரிவித்திருக்கலாம்” என்கிறார்கள்.
பா.ஜ.க. தேசிய தலைமையுடன் தொடர்புடைய பா.ஜ.க.வினர், “அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அவரே பேட்டியளிப்பார்.

அதனையேற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும் என டி.ஆர். பாலு மூலம் ஸ்டாலினுக்கு முதலில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அதனை அவர் ஏற்கவில்லை. இதனையடுத்தே கவர்னர் சந்திப்புக்கு ஏற்பாடானது. ராஜ்பவன் சந்திப்பிலும் ஸ்டாலின் ஏற்கவில்லை எனில் மாற்று யோசனையும் டெல்லியில் போடப்பட்டது. அதனை ராஜ்பவன் மூலம் சொல்லவும் வலியுறுத்தப்பட்டது.

அதாவது, 2 ஜி வழக்கில் சிக்கிய ஸ்வான் நிறுவன எம்.டி. ஷாஹித் உஸ்மான் பால்வாவை சமீபத்தில் மும்பையில் சந்தித்து வாக்குமூலம் வாங்கியிருக்கிறது சி.பி.ஐ.! ஐ.என்.எக்ஸ்.மீடியா விவகாரத்தில் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிதம்பரத்துக்கு எதிராக காட்டுவது போல, பால்வாவின் வாக்குமூலம் தி.மு.க.வுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிடப்படுகிறது”’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: