ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் ex BCCI தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா

hindutamil.in : சென்னை : பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத்
மெய்யப்பன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராவார் எனத் தெரிகிறது.
லோதா கமிட்டி சிபாரிசுபடி நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனை அதிகரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.போடே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால், நிர்வாகிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது. தேர்தல் குறித்த முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையின் படி நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் போட்டியிடுகிறார்
வேட்பமனுத் தாக்கல் வரும் 24-ம் தேதி முடியும் நிலையில், ரூபா குருநாத்துக்கு எதிராக யாரும் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆதலால் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 26-ம் தேதி நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படலாம்.
இதுதவிர துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.ராமசாமி, இணைச் செயலாளர் பதவிக்கு கே.ஏ.சங்கர், பொருளாளர் பதவிக்கு ஜே.பார்த்தசாரதி, துணைப் பொருளாளர் பதவிக்கு என்.வெங்கட்ராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஒருவேளை ரூபா குருநாத் மெய்யப்பன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றால், தொடர்ந்து ஸ்ரீனிவாசன் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இருக்கும். ஏற்கெனவே கடந்த 20 ஆண்டுகளாக ஸ்ரீனிவாசன் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் இப்போது அவரின் குடும்பத்தாரிடம் இருக்கும்.

2013-ம்ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த குருநாத் மெய்யப்பன் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்து அவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் ஈடுபட வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ராஜ்கோட்டில் முன்னாள் பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெயதேவ் தலைவர் பதவி ஏற்று சவுராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளார். முதல்தரக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜெயதேவ், ரவிந்திர ஜடேஜா, ஜெயதேவ் உனத்கத், புஜாரா ஆகியோருடன் விளையாடிய அனுபவம் உடையவர்.
இதேபோல இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தையும் ஒரு குடும்பம்தான் நிர்வகித்து வருகிறது. பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் தலைவராக வரும் 27-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதுபோன்ற மாநில கிரிக்கெட் சங்கங்கள் குறிப்பிட்ட குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
பிடிஐ

கருத்துகள் இல்லை: