செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சின்மயானந்தா மீது பாலியல் புகாரளித்த மாணவி கைது.. பாஜக சாமியார் வன்புணர்வது எல்லாம் ஒரு குத்தமாயா?


சின்மயானந்தா மீது பாலியல் புகாரளித்த மாணவி கைது!   மின்னம்பலம் :சாமியார் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்திருந்த சட்டக்கல்லூரி மாணவி பணம் பறித்த வழக்கில் இன்று (செப்டம்பர் 24) சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான சின்மயானந்தாவுக்கு சொந்தமான முமுக்‌சூ ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தால் நடத்தப்படும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துக் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த ஷாஜகான்பூர் கீழமை நீதிமன்றம் சின்மயானந்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

ஆனால் சின்மயானந்தா மீது பாலியல் வழக்கு (சட்டப்பிரிவு 376) பதியப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் சீமா மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார். இந்தியத் தண்டனைச் சட்டம் 354 டி( பின்தொடருதல்), 342(சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்) 506 (கிரிமினல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்குக் குறைவான தண்டனை கிடைக்கும் வகையில், காப்பாற்றும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்கை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெறுகின்றன” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பாலியல் புகார் அளித்த மாணவியின் மீதே மிரட்டி பணம் பறித்தல் பிரிவின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது சின்மயானந்தாவுக்கு எதிராக எடுத்த வீடியோக்களை வைத்து அப்பெண்ணும் அவரது நண்பர்களும் சின்மயானந்தாவிடம் ரூ.5 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிறப்பு விசாரணைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை சச்சின், விக்ரம் ஆகிய இருவரைக் கைது செய்தது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அப்பெண் அலகாபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று கைது செய்தது. இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரிடமும், அப்பெண்ணிடமும் நேருக்கு நேர் விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: