வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சிவாஜி வீட்டு வழக்கு - ராம்குமாருக்கு உதவ பிரபு மறுப்பு! அன்னை இல்லம் எனக்குதான் சொந்தம்!

  மின்னம்பலம் -Kavi :  அண்ணன் ராம்குமார் பெற்ற கடனுக்கு உதவ முடியாது என்று வீடு ஜப்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு கூறியுள்ளார். Prabhu responds to Sivaji house seizure case
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்த ஜெகஜ்ஜால கில்லாடி திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இதற்காக தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.



இந்தப் பட தயாரிப்பில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனம் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து 9.39 கோடி ரூபாயை செலுத்த ஏதுவாக ஜெகஜ்ஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்யஸ்தரான சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் மத்தியஸ்தர் பிறப்பித்த இந்த உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் மனு தக்கல் செய்தது.

இந்த வழக்கில், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த மார்ச் 5ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கும் எனது மகனுக்கும் எந்த பங்கும் இல்லை. எனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் தான் அந்த வீடு உள்ளது. எனவே ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று துஷ்யந்த் தந்தை ராம்குமார் மனு தக்கல் செய்தார்.

தொடர்ந்து தனது தந்தையின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில்,  “எனது தந்தை உயிருடன் இருக்கும் போதே அந்த வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். இதற்கு எனது சகோதரரும் சகோதரிகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து எனது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதில் சகோதரர் ராம் குமாருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே ஜப்தி உத்தரவை நீக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஏப்ரல் 3) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரபு சார்பில், “சகோதரர் ராம்குமார் பெற்ற 3 கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என் வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை” என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  “ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே? ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை நீங்கள் செலுத்திவிட்டு, பின்னர் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமே?” என்று யோசனை தெரிவித்தார்.

இதற்கு பிரபு தரப்பில் இதுபோன்று அவருக்கு உதவ முடியாது நிறைய பேரிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: