வியாழன், 3 ஏப்ரல், 2025

இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு! இந்தியா பொருட்களுக்கு மீது 27% வரி

 வீரகேசரி : பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதித்த வரிகளையும் அந்த நாடுகள் மீதான அமெரிக்காவின் வரியையும் ஒப்பிடும் ஒரு பெரிய விளக்கப்பட்டத்தைப் பிடித்தவாறு அமெரிக்க அதிபர் பேசினார்.
அதன்படி, பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10%, ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 20% வரி விதிக்கப்படும்.
அதுகுறித்துப் பேசியபோது, “அவர்கள் நம்மிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். நாமும் அவர்களிடம் அதையே வசூலிக்கிறோம். இதற்கு யாராவது வருத்தப்படலாமா?” என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.



மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்துப் பேசிய டிரம்ப், “அவர்கள் நம்மை வரிகளால் பிழிந்தெடுக்கிறார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது மிகவும் பரிதாபகரமானது,” என்று குறிப்பிட்டார்.

வர்த்தக கொள்கைகளைப் பொருத்தவரை, இந்தியா மிகவும் கடினமாக நடந்துகொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்திய சந்தையில் அமெரிக்க இறக்குமதிகள் போட்டியிடுவதை இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடினமாக்குவதைக் குறிப்பிட்ட அவர், “இந்தியா மிக மிக கடுமையாக நடந்துகொள்கிறது.

பிரதமர் மோதி சமீபத்தில் இங்கு வந்து சென்றிருந்தார். ஒரு சிறந்த நண்பர். நான் அவரிடம் கூறினேன், நீங்கள் என் நண்பர்தான். ஆனால், நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை. அவர்கள் 52% இறக்குமதி வரி விதிக்கிறார்கள். நாம் பல ஆண்டுகளாகவும், பல தசாப்தங்களாகவும் அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை” என்றார்.

பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்ற நாடுகள் மீதான வர்த்தகத் தடைகளைக் குறைத்துள்ளதாகக் கூறிய டிரம்ப், ஆனால் “அந்த நாடுகள் நமது பொருட்கள் மீது பெரியளவிலான வரிகளை விதித்து வந்தன” என்றும் தெரிவித்தார்.

“பல சந்தர்ப்பங்களில்” பணம் சார்ந்த தடைகளைவிட பணம் சாராத தடைகளே மோசமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளைத் திருடுவது, நியாயமற்ற விதிகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் செய்வதாக டிரம்ப் பிற நாடுகள் மீது குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி அறிக்கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “இதை நீங்கள் படித்தால் வெளிப்படையாக வருத்தமளிக்கும்” என்றும் கூறினார்.

மேற்கொண்டு பேசியவர், “ஆனால், அந்த நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கு அமெரிக்கா 2.4% வரி விதிப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், “தாய்லாந்து மற்றும் பிற நாடுகள் 60% வரைக்கும் அதிகமான வரியை வசூலிப்பதாகவும், இந்தியா 70% வசூலிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரி விதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய நாடுகளை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்சம் 10% வரி

டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதியன்று அவரது புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக உத்தரவின் மூலம் டிரம்ப் விதித்துள்ள வரிகள், உலகம் முழுவதும் பொருளாதார அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகை சுமார் 100 நாடுகளின் பட்டியலையும், அவற்றுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி விகிதங்களையும் வெளியிட்டது.

டிரம்பின் உரைக்கு முன்பாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிபர் அனைத்து நாடுகளுக்கும் “அடிப்படை வரி” விதிக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறினார்.

அதாவது, அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, “அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25% வரி” விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

10% வரி எதிர்கொள்ளும் நாடுகள்

ஒரு சில நாடுகள் இந்த அடிப்படை வரியை மட்டுமே எதிர்கொள்ளும். அவை,

பிரிட்டன்
சிங்கப்பூர்
பிரேசில்
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
துருக்கி
கொலம்பியா
அர்ஜென்டினா
எல் சால்வடார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சௌதி அரேபியா

‘இந்தியா மிகவும் மோசம்’ – டிரம்ப் கூறியது என்ன? இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி?


“மோசமான” நாடுகள் பட்டியலில் இந்தியா

ஏப்ரல் 9 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், “மோசமான குற்றவாளிகள்” என்று குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருக்கும் சுமார் 60 நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளையோ அல்லது வரிகள் தவிர்த்துப் பிற தடைகளையோ அல்லது அமெரிக்க பொருளாதார இலக்குகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவோ அரசு கருதும் நாடுகளுக்கு இந்த வரி விதிப்பு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியா மிகவும் மோசம்’ – டிரம்ப் கூறியது என்ன? இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி?

அந்தந்த நாடுகளின் வரிக்கு ஏற்ப விதிக்கப்படும் இந்த வரிகளை எதிர்கொள்ளப்போகும் நாடுகள்:

ஐரோப்பிய ஒன்றியம் – 20%
சீனா – 34%
இந்தியா – 26%
வியட்நாம் – 46%
தாய்லாந்து – 36%
ஜப்பான் – 24%
கம்போடியா – 49%
தென்னாப்பிரிக்கா – 30%
தைவான் – 32%
மலேசியா – 24%
வங்கதேசம் – 37%
பாகிஸ்தான் – 29%
இலங்கை – 44%
மியான்மர் – 44%

இந்திய மருந்து நிறுவனங்களின் நிலை என்ன?

டிரம்பின் வரிகளால் ஆசிய பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பையிலுள்ள பிபிசியின் இந்திய வணிக செய்தியாளர் நிகில் இனாம்தார் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கு 34%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என டிரம்ப் வரிகளை விதித்துள்ளார். இந்த விஷயத்தில் ஒப்பீட்டளவில் இந்தியாவின் நிலை மோசமில்லை என்றும் அவர் எழுதியுள்ளார்.

ஆனால், 26% வரி என்பது பிரச்னைக்குரியது எனவும் “கடும் உழைப்பு நிறைந்த ஏற்றுமதிகளை” இது கடுமையாகப் பாதிக்கும் என்றும் ஏஷியா டீகோடட் அமைப்பைச் சேர்ந்த பிரியங்கா கிஷோர் கூறுகிறார்.

கிஷோரின் கூற்றுப்படி, வளர்ச்சி ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், “இது உள்நாட்டுத் தேவை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் செலுத்தும்.”

ஆனால், வியட்நாம் போன்ற நாடுகளில் அதிக வரிகள் வர்த்தகத்தைத் திசைதிருப்ப வழிவகுக்கும் என்பதால், இந்தியாவின் மின்னணு ஏற்றுமதிகள் பயனடையக்கூடும்.

இருப்பினும், டிரம்பின் வர்த்தகத் தாக்குதலால் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த பாதிப்பை இது குறைக்க வாய்ப்பில்லை.

கனடா, மெக்சிகோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலன்றி, இந்தியா ஒரு சமரச அணுகுமுறையை டிரம்புடன் மேற்கொண்டு, இருதரப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசி இந்த நடவடிக்கை, இந்தியாவை பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தூண்டுமா என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

இந்திய மருந்துகள் தயாரிப்புத் துறைக்கு இதில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 13 பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தையைக் கொண்டிருக்கும் இந்திய மருந்து துறைக்கு இந்த பரஸ்பர வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கனடா, மெக்சிகோவின் நிலை என்ன?

இந்தப் புதிய பரஸ்பர வரி அறிவிப்புகளில் கனடாவும் மெக்சிகோவும் குறிப்பிடப்படவில்லை.

எல்லைப் பாதுகாப்பு, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக முன்பு கனடா, மெக்சிகோவுக்கு அழுத்தம் தரப்பட்டது. இந்த இரு நாடுகளையும் அதைப் பயன்படுத்தியே கையாளப் போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த நாடுகள் மீது 25% வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் சில விலக்குகளைச் செய்யவும், இந்த வரி விதிப்பைத் தள்ளிப் போடவும் டிரம்ப் முடிவு செய்தார்.

தமிழகத்தின் ஆடை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்துமா?

ஆசியாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியான 26% என்பது ஒப்பீட்டளவில் குறைவுதான். இது ஆடைத் துறையில் செலவு போட்டித்தன்மையில் தமிழ்நாட்டிற்குத் தெளிவான நன்மையை அளிப்பதாகக் கூறுகிறார் இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன்.

பிபிசி தமிழ் செய்தியாளர் சேவியர் செல்வகுமாரிடம் பேசிய அவர், “கடந்த காலத்தில், பருத்தி ஆடை ஏற்றுமதிக்கு இந்தியா, வஙக்தேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் இதேபோன்ற கட்டண கட்டமைப்புகளை எதிர்கொண்டன.

இருப்பினும், சமீபத்திய மாற்றங்களை வைத்துப் பார்க்கையில், இந்தியா தன்னுடன் போட்டியிடும் பிற நாடுகளைவிட ஒப்பீட்டளவில் நன்மையைக் கொண்டுள்ளது. இது ஆடை ஏற்றுமதிக்கான அமெரிக்க சந்தையில் அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கும்,” என்கிறார் அவர்.

டிரம்பின் திட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவுமா?

வெள்ளை மாளிகையின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்கான மூத்த ஆலோசகரான பீட்டர் நவரோ, தனது கட்டுரையில் டிரம்ப் விதித்துள்ள வரிகளை ஆதரித்து, அவை அமெரிக்காவில் முழு வீச்சிலான உற்பத்தியை மீட்டெடுக்க உதவும் எனக் கூறியுள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு கார்கள், உதிரி பாகங்கள் மீதான வரிகள், அமெரிக்கா முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், ஊதியத்தை உயர்த்தும் என்று அவர் வாதிடுகிறார்.

பிற நாடுகளின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் காரணமாக அமெரிக்க வாகன உற்பத்தி குறைந்துள்ளதாகக் கூறும் அவர், அவை அமெரிக்க ஏற்றுமதிகளைத் தடுப்பதாகவும் அமெரிக்க சந்தையை இறக்குமதி வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களால் நிரப்ப வழிவகுப்பதாகவும் நவரோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உற்பத்தியாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கும், கொள்ளையடிக்கும் வர்த்தகக் கொள்கைகளைப் பயன்படுத்தி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கார்கள், பாகங்கள் மீதான டிரம்பின் 25% வரி, இயந்திரங்கள், டீரான்ஸ்மிஷன்கள் போன்ற முக்கியமான வாகனக் கூறுகளின் உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வர வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என்று அவர் எழுதியுள்ளார்.

அதோடு, அதிக ஊதியம், உயர் திறன் கொண்ட வேலைகளை அதிகரிப்பது ஆகியவையும் அமெரிக்க உற்பத்தியை மீட்டெடுக்கும் என்று நவரோ வலியுறுத்துகிறார்.

கூடுதல் தகவல்கள்: கேய்லா எப்ஸ்டீன்

கருத்துகள் இல்லை: