புதன், 2 ஏப்ரல், 2025

யானைகளுக்கான சுரங்க வழி! - 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை!

 மாலை மலர் :  சென்னை தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: