புதன், 20 டிசம்பர், 2017

ஒரு அப்போலோ விடியோ ... மீதி 14 விடியோக்கள் எப்போ வருமோ ?

பின்னணியில் சிவாஜி கணேசன், ராதா நடித்த முதல் மரியாதை படத்தின் இசை ஒலிக்கிறது. நீ தானா அந்த குயில் என்ற பாடலின் இசை அது. அதனைத்தான் ஜெயலலிதா பழச்சாறு அருந்தியவாறு பார்க்கிறார் என தெரிகிறது. மின்னம்பலம்: ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. ’இந்த வீடியோவை நான் வெளியிட்டது தினகரன் சாருக்கோ, சின்னம்மாவுக்கோ தெரியாது. அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ என்று சொன்னார் வீடியோவை வெளியிட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல். தினமும் தினகரன் வீடே கோயில் எனச் சுற்றி வரும் வெற்றிவேல், அவருடைய அனுமதி இல்லாமல் இப்படியான ஒரு வீடியோவை வெளியிட முடியுமா, என்ற கேள்வி வருவது இயல்பு. என்ன நடந்தது என விசாரித்தோம். ‘ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமே சின்னம்மாவும், தினகரனும் என்பது போலச் சித்தரிக்கப்பட்ட ஒரு நோட்டீஸை நேற்று வீடு வீடாகக் கொடுத்தார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். இதில் தினகரன் ரொம்பவே நொந்துட்டாரு. நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் விசிட்டர்ஸ் எல்லோரும் வந்து போன பிறகு வெற்றிவேல் மட்டும் தினகரன் வீட்டுக்குப் போயிருந்தார்.
நீண்ட நேரம் இருவரும் பேசியபடி இருந்தார்கள். அப்போது வெற்றிவேல்தான், ‘சார் இந்த சூழ்நிலையை சமாளிக்க ஒரே வழிதான் இருக்கு. நம்மகிட்ட இருக்கிற அம்மாவோட ஹாஸ்பிட்டல் வீடியோவை ரிலீஸ் பண்ணிடலாம்...’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தினகரனோ, ‘அய்யோ... வேண்டாம்! அதை வெளியிடுவதாக இருந்தால் சின்னம்மா எப்பவோ வெளியிட்டிருப்பாங்க. அம்மாவோட இமேஜ் அத்துடன் காலியாகிடும் என்பதால்தான் அதை வெளியிடாமல் இருந்தாங்க.
அந்த வீடியோவை எடுத்தது கிருஷ்ணப் பிரியாதான். அவங்ககிட்ட இருந்த வீடியோவை என்னை நம்பித்தான் சின்னம்மா என்கிட்ட கொடுக்கச் சொன்னாங்க. இப்போ அதை வெளியிட்டால் நம்ம சுயநலத்துக்காக செஞ்ச மாதிரி ஆகிடும்’ எனச் சொன்னாராம்.
ஆனால் வெற்றிவேல், ‘நீங்க வெளியிட வேண்டாம். நான் வெளியிடுறேன். இந்த வீடியோவுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களைக் கேட்காமல் நானே செஞ்சுட்ட மாதிரி மீடியாவுக்கு சொல்லிடுறேன்... சின்னம்மாகிட்டயும் நீங்க அதையே சொல்லிடுங்க... ரெய்டு சமயத்துல என்கிட்ட கொடுத்து வெச்சிருந்ததாக சொல்லிடுங்க...’ என ஐடியா கொடுத்திருக்கிறார். சமாதானம் அடையாத தினகரன், ‘அது சரியாக வருமா? எப்படி இருந்தாலும் வீடியோ வெளியிடுவது தப்புதானே... அம்மாவை இதுவரைக்கும் இப்படி யாரும் பார்த்தது கிடையாது. மக்கள் மனசுல அம்மா என்றால் இருக்கும் பிம்பம் உடைஞ்சு போயிடும். இனி அம்மா என்றால் எல்லோருக்கும் இந்த வீடியோதானே முன்னால் வந்து நிற்கும்!’ எனச் சொன்னாராம்.
அதற்கும் வெற்றிவேல் பதில் சொல்லியிருக்கிறார். ‘நீங்க சொல்றது ஒரு விதத்துல சரி. ஆனால் இப்போ அம்மா இல்லை. இருக்கிற உங்க இமேஜைக் காப்பாற்ற வேற என்ன வழி இருக்கு சொல்லுங்க. இவ்வளவு நாளா எல்லாப் பழியும் உங்க குடும்பத்து மேலதானே போட்டுட்டு இருக்காங்க. இந்த வீடியோ வந்தால் அந்தப் பழி துடைக்கப்பட்டுவிடும். என்னைக் கொஞ்ச நாள் எல்லோரும் திட்டுவாங்க. திட்டிட்டு மறந்துடுவாங்க. அதை நான் சமாளிச்சுக்குறேன். ஆனால், இப்போ விட்டால் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. நீங்க அமைதியாக இருங்க... நான் பார்த்துக்குறேன்!’ என அவர் சொல்லும் போதே, தினகரனின் மனைவி அனுராதா குறுக்கிட்டு சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
‘அண்ணன் சொல்றது சரிதான்! எத்தனை நாளைக்கு வீடியோவை நீங்க மறைச்சு வைக்க முடியும்? இப்போ இல்லைன்னா இன்னொரு நாள் வரப் போகுது. அது இப்பவே வந்தால், தேர்தலில் நமக்கு உதவியாக இருக்கும். நாம தப்பான எந்த வீடியோவையும் வெளியிடலையே... அம்மா இப்படி இருந்தாங்க.. உயிரோடதான் ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க. நாங்கதான் அவங்களைப் பார்த்துகிட்டோம் என்பதை சொல்ற மாதிரிதானே இருக்கும். இதுக்கு எதுக்கு நீங்க ஃபீல் பண்றீங்க...’ எனக் கேட்டாராம். ‘எதுக்கும் சின்னம்மாகிட்டயும், விவேக் கிட்டயும் பேசிடலாம்...’ என தினகரன் சொல்ல.. ‘அதெல்லாம் பேசினால் எதுவுமே செய்ய முடியாது... நான் பார்த்துக்குறேன். நீங்க அமைதியாக இருங்க...’ என வெற்றிவேல் சொல்லிவிட்டாராம். அதன் பிறகுதான் எந்த வீடியோவை இன்று வெளியிட வேண்டும் என அனுராதாவுடன் டிஸ்கஷன் செய்து, அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெற்றிவேல் செல்போனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதைத்தான் இன்று வெற்றிவேல் வெளியிட்டார்!” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

“இந்த வீடியோ என்பது ஒரு சாம்பிள்தானாம். மொத்தம் இதுபோல 14 வீடியோக்கள் இன்னும் தினகரனின் கைவசம் இருக்கிறதாம். இந்த எல்லா வீடியோக்களையும் எடுத்தவர், இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாதான். அவரது செல்போன் கேமராவில்தான் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டு, மெமரி கார்டில் வைக்கப்பட்டிருந்ததாம். ஜெயலலிதா இறந்ததும், அந்த மெமரி கார்டை சசிகலாவிடம் ஒப்படைத்திருக்கிறார் கிருஷ்ணப் பிரியா. ஆனால், சசிகலாவோ அதை வாங்காமல், தினகரனை அழைத்திருக்கிறார். ‘இந்த கார்டுல இருக்கிற வீடியோ ரொம்பவும் சீக்ரெட். எந்தக் காரணத்துக்காகவும் இது எங்கேயும் லீக் ஆகிடக் கூடாது. இந்த வீடியோக்களை வெளியிட்டால் எனக்கு நல்ல பேருகூட கிடைக்கலாம். ஆனால், இப்படியான வீடியோ வருவதை அக்கா விரும்ப மாட்டாங்க. இந்த வீடியோவே நான் எடுக்க வேண்டாம்னுதான் சொல்லியிருந்தேன். ஆனால், கிருஷ்ணப் பிரியா அவளோட செல்போனில் எடுத்திருக்கா. அதனால் இது ரொம்பவும் பத்திரமாக வெச்சிருக்கணும். என் அனுமதி இல்லாமல் இதை யாருக்கும் காட்டவோ கொடுக்கவோ கூடாது’ என சொல்லித்தான் தினகரனிடம் கொடுத்தாராம். ‘என் உயிரே போனாலும் இது வெளியே போகாது...’ என அப்போது தினகரனும் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

வீடியோவை எடுத்த கிருஷ்ணப் பிரியா இன்று மீடியாக்களிடம் பேசும்போது, ‘வெற்றிவேலும், தினகரனும் துரோகம் செய்துவிட்டார்கள்!’ எனப் பேட்டியில் தெரிவித்தார். ‘நானே வெச்சிருந்தாகூட இப்படி ஆகியிருக்காது. அவரை நம்பிக் கொடுத்ததுக்கு இப்படி பண்ணிட்டாரே... நான் உடனே சின்னம்மாவைப் பார்த்து இதையெல்லாம் சொல்லணும். நாளைக்கே நான் பெங்களூரு போறேன்..’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் கிருஷ்ணப் பிரியா.
அதேபோல ஜெயா டிவி சி.ஈ.ஓ. விவேக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததும் செம அப்செட் ஆகிவிட்டாராம். ‘ நான் படிச்சு படிச்சு சொல்லிட்டு இருந்தேன். தினகரன் நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டாரு. அம்மாவை எல்லோரும் அசிங்கப்படுத்துறாங்கன்னு சொல்லிட்டு இவரு ஒட்டுமொத்தமாக சேற்றை வாரிப் பூசிட்டாரு... சின்னம்மாகிட்ட பேசிட்டு அவர் மேல நடவடிக்கை எடுக்க வைக்கணும். இப்படியே விட்டால் தப்பாகிடும்...’ என புலம்பிவருகிறாராம்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: