புதன், 20 டிசம்பர், 2017

குஜராத் தேர்தல் – வெற்றி பெற்றது யார் ? by Savukku

குஜராத் தேர்தல் பிஜேபியின் வாழ்வா சாவா போராட்டம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை பிரதமர் மோடி அவர்களே முன்னின்று உருவாக்கினார்.   அமித் ஷாவோ, மொத்தம் உள்ள 182 இடங்களில், 150ல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.   150 இடங்கள் வெல்ல முடியாத ஒரு எண்ணிக்கை அல்ல என்றார்.    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே ராகுல் காந்தியை மனதில் வைத்தே இந்த எண்ணிக்கையை அமித் ஷா சொல்லியிருப்பார்.
ஆனால், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை, தொடுவதற்குள், தட்டுத் தடுமாறி, மூச்சுத் திணறி, தொட முடியுமோ இல்லையோ என்ற மலைப்போடே பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.     வெளிப்புறத் தோற்றத்துக்கு புன்னகையோடு பேட்டியளித்து, இனிப்புகளை பரிமாறிக் கொண்டாலும், உள்ளுக்குள் பிஜேபியினருக்கு  இந்த வெற்றி நூலிழையில் கிடைத்த வெற்றி என்பதும் நன்றாகவே புரிந்திருக்கும்.    3000 வாக்குகளுக்கும் குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் 16 தொகுதிகளில் தோற்றுள்ளனர்.  இந்தத் தொகுதிகளில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் பிஜேபி வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம்.    அந்த வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருந்தாலும் பிடித்திருக்கும்.   மிக மிக மெல்லிதான ஒரு கயிற்றின் மீது நடக்க வேண்டிய நெருக்கடிக்கு பிஜேபி தள்ளப்பட்டிருக்கிறது.

2017 குஜராத் தேர்தல் பிஜேபியின் அசல் முகத்தை காண்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.   இந்தியா முழுக்க நடந்த அத்தனை மாநில சட்டமன்றத் தேர்தலிகளிலும், பாராளுமன்றத் தேர்தல் சமயத்திலும், குஜராத் மாடல் என்ற ஒற்றை கோஷத்தை வைத்தே, மோடியின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது.   2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அதன் பின்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில், மோடியின் இந்த வாக்குறுதிகள் பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.    குறிப்பாக 2014 பாராளுமன்றத் தேர்தலில், மோடியை முழுமையாக நம்பினார்கள்.  அதனால்தான் அந்த பிரம்மாண்டமான பெரும்பான்மை.

அதற்கு பின் நடந்த பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், காங்கிரஸை பிஜேபிக்கு ஒரு வலுவான மாற்றாக மக்கள் நம்ப மறுத்தார்கள். உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை மீறி ஒரு தாக்கத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.  ஆனால் அதே நேரத்தில் பஞ்சாபில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை நாம் ஒதுக்கி விட முடியாது.
அம்மாநில தேர்தல்களுக்கு பிறகு, குஜராத் தேர்தல் நெருங்க, நெருங்கத்தான், ராகுல் காந்தி பரவலாக கவனிக்கப்பட ஆரம்பித்தார்.  அவரின் ட்வீட்டுகளும், அவருக்கு ஊடகங்களில் பிஜேபியின் அழுத்தத்தையும் மீறி கிடைத்த ஆதரவுகளும், பிஜேபியை கவலை கொள்ள வைத்தன.    மேலும், கடந்த ஒரு ஆண்டாக, பண மதிப்பிழப்பு, பொருளாதார மந்த நிலை, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்த தரவுகள் வெகுஜன ஊடகங்களில் வர விடாமல் தடுக்க பிஜேபி எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றாலும், அதையும் தாண்டி, செய்திகள் வரவே செய்தன.  தி வயர், ஸ்க்ரால் போன்ற இணையதளங்களிலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வரத் தொடங்கின.
கடந்த தீபாவளியின்போது, பல்வேறு வணிகர்கள், ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் தாங்கள் இழந்தவை குறித்து பேசத் தொடங்கினார்கள்.  ஆகையால் 22 ஆண்டு காலம் ஆளும் குஜராத் என்ற கோட்டையை எப்படியாவது மீண்டும் மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு பிஜேபி தள்ளப்பட்டது.
காங்கிரஸ் இம்முறை குஜராத் தேர்தலில், மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது.  தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.

தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ராகுல் காந்தி எளிய மக்களை கவரும் வகையில், மோடியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தவர், குஜராத்தில் தாண்டவமாடும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குழந்தைகள் நலன், பெண்கள் நலன் ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் நடத்தினார்.   அரசு ஊழியர்களே தொகுப்பூதியம் பெறும் அவல நிலையை விமர்சித்தார்.   வளர்ச்சி, வளர்ச்சி என்று முழக்கமிட்டு கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள், குஜராத்தின் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதையுமே செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
குஜராத் மாநிலம் ஒரு பிரத்யேக தன்மை உள்ள ஒரு மாநிலம் என்பதையும், மதரீதியாக மிக மிக ஆழமாக குஜராத் பிளவுபட்டு உள்ளது என்பதையும், காங்கிரஸ் நன்றாகவே புரிந்து வைத்திருந்தது. பிரச்சாரத்தில் எந்த ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களோ, ராகுல் காந்தியோ, குஜராத் கலவரத்தைப் பற்றியோ, போலி என்கவுன்டர்கள் பற்றியோ பேசவில்லை.  மிக கவனமாக அதை தவிர்த்தனர்.  கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்கி, காட்சியளித்து, ஒரு மென்மையான இந்துத்துவா தந்திரத்தை கடைபிடிக்கவும் காங்கிரஸ் தயங்கவில்லை.

22 வருடங்களாக ஆட்சியில் இருந்து விட்டு, இப்போது வந்து குஜராத்திலேயே குஜராத் மாடல் பற்றி பேசினால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை மோடியும், அமித் ஷாவும் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
மோடிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது என்பது, தண்ணீரில் மூழ்கிய நிலையில் எப்படியாவது காற்றை சுவாசிக்க வேண்டும் என்று மேலே எம்பி வருபவனின் தவிப்பை போன்றது.     வெற்றி பெறாவிட்டால் இறந்தே விடுவோம் என்று கருதக் கூடியவர் மோடி.    அந்த வெற்றியை பெறுவதற்காக, அவர் எதையும் செய்வார், என்ன வேண்டுமானாலும் செய்வார்.
மணி சங்கர் அய்யர் அவரை கீழ்த்தரமான மனிதர் என்று வர்ணித்ததில் துளியும் தவறு கிடையாது.   அது பற்றி பின்னர் பார்ப்போம்.
2002ம் ஆண்டு தேர்தல்தான், மோடி முதலமைச்சராக சந்தித்த முதல் குஜராத் தேர்தல்.  அப்போதுதான் குஜராத் கலவரம் நடந்து முடிந்திருந்தது.   அப்போது தேர்தலை உடனடியாக நடத்தும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்திருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேஎம்.லிங்டோ, தேர்தலை தள்ளி வைத்தார்.   இதை மனதில் வைத்து, தேர்தல் பிரச்சார சமயத்தில் பேசிய நரேந்திர மோடி, “சில பத்திரிக்கையாளர்கள், என்னிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ இத்தாலியிலிருந்து வந்தவரா என்று கேட்டார்கள்.  அவரின் ஜாதகம் என்னிடம் இல்லை.  ராஜீவ் காந்தியைத்தான் கேட்க வேண்டும் என்றேன்.  அதே பத்திரிக்கையாளர்கள், என்னிடம் அவர்கள் தேவாலயத்தில் சந்திக்கிறார்களா என்றார்கள்.  நான் இருக்கலாம் என்றேன்”

ஜேஎம்.லிங்டோ
“ஜேம்ஸ் மைக்கேல் லிங்கேடா அகமதாபாத் மற்றும் வதோத்ராவுக்கு வருகை தந்தார்.   சில அதிகாரிகளிடம் நாகரீகமற்ற முறையில் பேசினார். (லிங்டோ பேசியது என்ன தெரியுமா ?  தேர்தல் நடத்த ஏற்ற சூழல் இருக்கிறது என்று சொன்ன ஒரு அதிகாரியிடம், மக்கள் இன்னும் முகாம்களில் இருக்கிறார்கள்.  தேர்தல் நடத்தலாம் என்று சொல்கிறீர்கள்.  உங்களை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா, என்று கேட்டார்)
குஜராத்திகள் இது போன்ற ஒரு வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள்.   நமது உயர்ந்த கலாச்சாரமும் பாரம்பரியமும் அவற்றை அனுமதிக்காது.   தேர்தல் நடத்தக் கூடாது என்று லிங்டோ ஒரு பத்வா பிறப்பித்தார்.   (பத்வா என்பது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் உருதுச் சொல்).
நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.   அவர் வெறும் சிறுபான்மை சமூக மக்களை மட்டுமே பார்த்து விட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் மட்டும்தான் இந்திய குடிமக்களா ?   பெரும்பான்மை மக்கள் இந்திய குடிமக்கள் கிடையாதா ?   தேர்தல் ஆணையம் சிறுபான்மை மக்களுக்காக மட்டும்தான் இருக்கிறதா ?  லிங்டோ எப்போதாவது கோத்ரா படுகொலையில் கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சென்று பார்த்திருக்கிறாரா ?   ஏன் அவர்களை பார்க்கவில்லை.   தேர்தல் நடத்த ஏற்ற சூழல் இருக்கிறதா என்று ஏன் அவர்களை கேட்கவில்லை ?  சொல்லுங்கள் ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ அவர்களே…  நான் கேட்கவில்லை.  குஜராத் மக்கள் கேட்கிறார்கள்.
இங்கே கூடியுள்ள ஒரு லட்சம் மக்கள் தேர்தல் நடத்த ஏற்ற சூழ்நிலை என்று கருதினால் அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி ஆம் என்று கூறவும்.  இந்த ஒரு லட்சம் மக்கள், குஜராத்தின் புகழை மறைக்க செய்யப்படும் சதி இது என்று கருதும் மக்கள் கரங்களை உயர்த்தி ஆம் என்று கூறுங்கள்.     பார்த்தீர்களா.  அனைவரும் ஆம் என்கிறீர்கள்.  ஐந்து கோடி குஜராத்திகளும் இதைத்தான் சொல்லப் போகிறார்கள்.
ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ ஃபத்வா உத்தரவு பிறப்பித்த அன்று, காங்கிரஸ் அவர்களுக்கே தெரிந்த முறையில் அதை கொண்டாடியது.  (தோராஜியில் நடைபெற்ற வன்முறையை குறிப்பிட்டு).  நாற்பது கடைகளை கொளுத்தியுள்ளார்கள்.  15 பேர் காயம் பட்டுள்ளனர்.  அவர்களுக்கு கொண்டாட்டமளிக்கும் தினம் இது.   வரும் நாட்களில் என்ன செய்யப் போகிறார்கள் ?
தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே, கூலிப்படையை அனுப்பி கொலையையும் நிகழ்த்த தயங்க மாட்டார்கள்.   சோட்டா ஷகீல், தாவூத் இப்ராகிமுக்கு 5 கோடியை கொடுத்து, ராஜஸ்தானில் மதக் கலவரத்தை உருவாக்க தயங்க மாட்டார்கள். ஜோத்பூர், உதய்ப்பூர், பரத்பூர் போன்ற இடங்களில் கொலைகளும் கொள்ளைகளும் நடக்கும்.  உடனே ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ வந்து, 40 பக்க அறிக்கையை அளித்து, ராஜஸ்தான் தேர்தல் நடத்த ஏற்ற இடம் இல்லை என்று கூறுவார்.   ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?   ஐந்து கோடி குஜராத்தியர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  “
2002 தேர்தலில் மோடி பேசிய பேச்சு இது.  இணைப்பு.  பிரதமர் வாஜ்பாயே,  தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இணைப்பு
நாகரீகம், அடிப்படை பண்பு, அடிப்படையான மனிதக் கூறுகள் இவை எவையுமே இல்லாத ஒரு அநாகரிகமான, கீழ்த்தரமான மனிதர் மோடி என்றால் அது மிகைச் சொல் அல்ல.    ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரியை, அவர் மதத்தை வைத்து விமர்சிப்பது என்பது எத்தனை கேவலமான புத்தி ?  ஆனால் மோடி அதை செய்வார்.  செய்து கொண்டும் இருக்கிறார் என்பதை சமீபத்திய தேர்தலில் பார்த்தோம்.

2002 தேர்தலில் பேசிய மோடி, அப்போதும் பாகிஸ்தானை இழுத்தார்.   மியான் முஷாரப் மோடி குஜராத் தேர்தலில் தோற்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார் மோடி.
2012 தேர்தலிலும் இதே அற்பத்தனத்தை மோடி தொடர்ந்தார்.    அப்போதைய குஜராத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார் மோடி.  குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ள 96 கிலோ மீட்டர் சர் க்ரீக் என்ற பகுதியை பாகிஸ்தானுக்கு தருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று ஒரு கடிதத்தை எழுதி விட்டு, அது பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே ஊடகங்களுக்கு அதை வெளியிட்டார் மோடி.  இணைப்பு
2014 பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நீசத்தனம் தொடர்ந்தது.  “பாகிஸ்தானுக்கு உதவ மூன்று ஏகேக்கள் இருக்கின்றன.  ஒன்று ஏகே 47 துப்பாக்கி. அது காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவுவது.    இரண்டாவது ஏகே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி.  அவர்தான் பாகிஸ்தான் ராணுவம் நம் வீரர்களின் தலையை துண்டித்ததை மறைத்து, பாகிஸ்தானை சேர்ந்த மக்கள் ராணுவ உடை அணிந்து வருகின்றனர் என்று கூறுகிறார். மூன்றாவது ஏகே, அரவிந்த் கேஜ்ரிவால்”.  இப்படி ஒரு தேர்தலுக்காக, ஒரு மாநில முதலமைச்சரையும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரையும், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று சொல்ல எந்தத் தயக்கமும் காட்டாதவர்தான் மோடி.
இதற்கு முந்தைய தேர்தலிகளிலெல்லாம், பெருமளவில் நெருக்கடிகளை சந்திக்காதபோதே, இப்படி கேவலமான பிரச்சார யுக்திகளில் இறங்கிய மோடி, ஒரு கடுமையான நெருக்கடியான சூழலில், எந்த அளவு கீழே இறங்கிப் போவார் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.
அந்த தந்திரத்தின் அடிப்படையில்தான், என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்ததெல்லாம்.    மணி சங்கர் ஐயர், மோடி ஒரு கீழ்த்தரமான மனிதர் என்று சொன்னார்.   அதை அப்படியே திரித்து, மணி சங்கர் அய்யர் என்னை கீழ்சாதி மனிதர் என்று கூறி விட்டார் என்று திரித்து, மொள்ளமாறித்தனம் செய்வதெல்லாம் மோடிக்கு கைவந்த கலை.    தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார் மோடி.   காங்கிரஸ் கட்சி மணி சங்கர் ஐயரை, கட்சியை விட்டு இடைநீக்கம் செய்த பிறகு கூட, பிஜேபியினர் அந்த விவகாரத்தை விடவில்லை.
இதற்கு அடுத்ததாக மோடி செய்த செயல்தான் இருப்பதிலேயே மிக மிக கீழ்த்தரமானது.   மணி சங்கர் ஐயர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பாகிஸ்தான் தூதரோடு சேர்ந்து, ஒரு ரகசிய கூட்டம் நடத்தி, தன்னை குஜராத்தில் தோற்கடிக்க பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார்கள் என்றார்.   வழக்கமாக, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தும் மன்மோகன் சிங் அவர்களே, கடுமையான வார்த்தைகளோடு மறுப்பு  வெளியிட்டார்.
அதே போல, குஜராத்தில் அகமது மியான் பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று பச்சைப் பொய்யை பொதுக் கூட்டத்தில் பேசினார் மோடி.
வாக்குச் சாவடியில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு பிரச்சாரம் செய்யக் கூடாது, சின்னத்தை காட்டக் கூடாது என்று தெளிவான விதி இருந்தும் 2014 பாராளுமன்றத் தேர்தலில், வாக்களித்து முடித்த பிறகு, வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து, தாமரை சின்னத்தை கையில் எடுத்து வைத்து, செல்பி எடுத்து, அதை நாடெங்கும் ஊடகங்களை ஒளிபரப்ப வைத்த அற்ப மனிதர்தான் மோடி.

அதே போலத்தான் குஜராத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, அத்தனை மலிவான தந்திரங்களிலும் இறங்கினார்.   பெரும்பான்மையான மக்களிடமிருந்து பிஜேபியும், மோடியும் குஜராத்தை பொறுத்தவரை அந்நியப்பட்டுப் போனார்கள் என்பது ஒரு வகையில் உண்மையே என்றாலும், பாகிஸ்தான் சதி, மோடியை கீழ் சாதி என்று ஒருவர் கூறியதாக சொன்ன பொய்க் குற்றச்சாட்டு, மோடி இல்லையென்றால், இஸ்லாமியர்கள் இந்துக்களை வாழ விட மாட்டார்கள் என்று பரவலாக மக்கள் கருதுகிறார்கள்.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தாக்கங்கள், இந்தியாவின் பிற பகுதி மக்களை பாதித்தது போலவே, குஜராத்தின் நகர்ப்புற மக்களையும் பாதிக்கத்தான் செய்திருக்கிறது.  ஆனாலும், மோடி இல்லையென்றால், பாகிஸ்தான் நம்மை கபளீகரம் செய்து விடும் என்ற பிரச்சாரம் வலுவாகவே நகர்ப்புறங்களில் இறங்கியிருக்கிறது.
வாட்ஸப், சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பொழுதைப் போக்கும் நகர்ப்புற இளைஞர்களிடையே பிஜேபியின் இந்த பொய்ப் பிரச்சாரம் எடுபட்டுள்ளது.   இதன் காரணமாகத்தான், பங்களாதேஷிலோ, பாகிஸ்தானிலோ, மாடுகளை வெட்டும் படங்களையும், யாராவது ஒருவர் தாக்கப்படும் வீடியோவையும், இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடத்ததாக கூசாமல் சமூக வலைத்தளங்களில், பிஜேபி ஐடி விங் பரப்ப தயங்குவதேயில்லை.
இது போன்ற கோயபல்ஸ் பிரச்சாரம்தானே இட்லரை ஆட்சியை பிடிக்க வைத்தது ?
ஆனால் மாறாக, காங்கிரஸின் பிரச்சாரம் நாகரீக எல்லைகளை தாண்டாமல் நடக்குமாறு பார்த்துக் கொண்டார்.   பிஜேபியினர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வீசியடித்தபோதும், அவற்றை பண்புடனே எதிர் கொண்டார்.   மணி சங்கர் ஐயர், மோடியை கீழ் சாதி மனிதர் என்று சொல்லவேயில்லை என்பதை நன்றாக அறிந்தும் கூட, அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார்.   மோடியிடம் மணி சங்கர் ஐயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
நாள்தோறும் மோடிக்கு கேள்வி என்று ட்விட்டரில் ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு, பிஜேபி ஒரு நாளும் பதில் கூறவில்லை.  மாறாக, பிஜேபி ட்ரோல் ஆர்மியை வைத்து, ராகுலை ட்ரோல் செய்வதில் மட்டுமே பிஜேபி ஈடுபட்டது.
கடந்த மூன்றாண்டுகளாக இருந்த காங்கிரஸ் கட்சியை ஒப்பிடுகையில், ஒரு புதிய உத்வேகத்தோடு, இழந்த தன் பொலிவை மீட்டெடுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.   ஒரு முயற்சியையும் தவிர்க்காமல், அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து, சுணக்கமில்லாமல் போட்டியிட்டது. குறிப்பாக அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்வதில் ஒரு வகையில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளது.

வெற்றிகள் எளிதில் வந்து விடாது.   அதுவும் குறிப்பாக, மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்தியாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஒரு கட்சி, தீவிரமான மத துவேஷத்திலும், போலி தேச வெறியை ஊட்டுவதிலும் தீவிரமாக ஒரு புறம் இறங்கியிருக்கையில், அவர்களை எதிர்த்து நாகரீக அரசியல் நடத்துவது எளிதான காரியம் அல்ல.    கோபப்படுவது எளிது.  வார்த்தைகளை கோபத்தில் அள்ளி வீசுவதும் எளிது.   பிஜேபி போல, அவர்கள் தரத்துக்கு இறங்கிப் பேசுவதும் எளிதே. பிரதமர் முதலைக் கண்ணீர் வடிக்கையில், அவரை விட கூடுதலாக அழுது, மக்கள் அனுதாபத்தை பெறலாமே என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே.  ஆனால் அது போன்ற தூண்டுதல்களுக்கு ராகுல் பலியாகவில்லை.  வயதுக்கு மீறிய பக்குவத்தோடு, ஒரு கண்ணியமான அரசியல்வாதியாகவே இந்தத் தேர்தலை ராகுல் சந்தித்திருக்கிறார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 77 இடங்கள் ஒரு பெறும் வெற்றிதான் என்றாலும், ராகுலின் பணி இதோடு முடிந்து விடவில்லை.   2019ல், மோடியை எதிர்கொள்ள ஒரு வலுவான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க வேண்டியது  ராகுலின் முன்பு உள்ள வலுவான சவால்.   லாலு, முலாயம், மாயாவதி, மம்தா பேனர்ஜி, பிரகாஷ் காரத், போன்றவர்களை இணைத்து, ஒரு அணிக்குள் அடக்குவது எளிதான காரியம் கிடையாது.   மிகுந்த பொறுமையும், தளராத நமபிக்கையையும் கேட்கும் சிரமமான பணி அது.
அதுதான் ராகுல் ஒரு ஸ்டேட்ஸ்மேனா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.   2019 இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறதே என்று தோன்றும்.  ஆனால் ஒரு நொடிப் பொழுதில் இந்த காலம் கடந்து போய் விடும்.   உத்தரப் பிரதேச தேர்தலுக்காக பிஜேபி இரண்டு வருடங்கள் முழுமையாக உழைத்தது என்பதை மறந்து விடக் கூடாது.  பிஜேபியிடம் உள்ளது போன்ற ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் காங்கிரஸிடம் இல்லை.   ஆர்எஸ்எஸ் ஊழியர்கள், ஒரு தேர்தல் சமயத்தில் ஒரு வாக்காளரைக் கூட விடாமல், தேடிச் சென்று பிரச்சாரம் செய்வார்கள்.   வாக்காளரோடு நேரடி தொடர்பில் இருப்பார்கள்.  ஆனால் இது போன்ற கட்டமைப்புகள், காங்கிரஸ் கட்சிக்கோ, வேறு கட்சிகளுக்கோ இல்லை.
2019 தேர்தலில், மோடி இதை விட மிக மிக கேவலமான தந்திரங்களில் நிச்சயம் இறங்குவார்.   மலிவான உத்திகளை கையாளுவார்.  வேறு தந்திரங்கள் சரிப்பட வில்லையென்றால், பாகிஸ்தானோடு போரிடக் கூட தயங்க மாட்டார்.    தேர்தல் வெற்றி மட்டுமே அவரது குறிக்கோள்.  2014ல் வாக்குச் சாவடியில் தேர்தல் சின்னத்தை காண்பித்தற்காக மோடியை தூக்கிலா போட்டு விட்டார்கள் ?   தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மட்டுமே மோடியின் அடிப்படை கொள்கை.
இப்படிப்பட்ட மனிதனை எதிர்த்துத்தான் ராகுல் காந்தி 2019ல் களமிறங்கப் போகிறார்.   அந்தப் பாதை எளிதானது அல்ல.  குஜராத் தேர்தலை ராகுல் காந்தி அணுகியதை பார்க்கையில் அவர் மோடிக்கு சரியான சவாலாக இருப்பார் என்றே நம்புகிறேன்.
நம்பிக்கையோடு காத்திருப்போம்

கருத்துகள் இல்லை: