சனி, 23 டிசம்பர், 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை திட்டமிட்டு ...... பல கேள்விகள்!


நக்கீரன் :ஜெயலலிதா மரணம் தொடர்பாக டாக்டர் பாலாஜி ஒருபக்கம்-… அப்பல்லோ ரெட்டி மறுபக்கம் என ஆணையத்தின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைச்சொல்லி "ட்விஸ்ட்' அடித்துக்கொண்டிருக்க… ஜெ. குணமாவதை தடுத்தவர்கள் யார்’ என்று நக்கீரனிடம் பகீர் வாக்குமூலம் கொடுத்து அதிரவைக்கிறார் கார்டனிலிருந்து விரட்டப்பட்ட டாக்டர் எம்.என். சங்கர்.இதுகுறித்து, நாம் அவரிடம் பேசியபோது, ""எட்டு வருடத்துக்கு முன்னால  சசிகலா, இளவரசி ரெண்டு பேருக்குமே  அக்குப்பஞ்சர் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கேன். அந்தப் பரிட்சயத்துலதான் மேடத்துக்கும் ட்ரீட்மெண்ட் கொடுக்க 2016 மார்ச், ஏப்ரல் மாதங்களில் போயஸ்கார்டனுக்கு போனேன். பெங்களூர் சிறையிலிருந்து வந்தபிறகு நடக்கக்கூட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க.  குறிப்பா கை-கால் வீக்கம், கழுத்துவலி, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், கையில் நீர்க்கோ(ர்)த்துக்கொள்ளுதல், தூக்கமின்மை, இரத்த அழுத்தம்னு பல்வேறு பிரச்சனைகளில் அவதிப்பட்டார். அவரால், நிற்கக்கூட முடியல. நான், போயி ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஆனாங்க.
அப்போ, டாக்டர் சிவக்குமார் வந்து  அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் எங்களுக்கும் சொல்லிக்கொடுப்பீங்களான்னு ஆர்வமா கேட்டதோட அர்த்தம் அப்போ புரியல. ஆனா, அதுக்கப்புறம்தான் புரிஞ்சது. ஆகஸ்டு-15 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்குப்போனவங்க 45 நிமிடங்கள் நின்னாங்க. எல்லோருக்குமே ரொம்ப ஆச்சர்யம். ஆனா,  செப்டம்பர்-21 ந்தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் அவங்களால 1 நிமிடம்கூட நிற்க முடியல. அவங்க கண்ணு கலங்க ஆரம்பிச்சிடுச்சு.
 காரணம், அவங்களுக்கு ஆட்டோ இம்யூன் டிசீஸ்களான (Multiple sclerosis) மல்டிபிள் ஸ்செலரோசிஸ், மூட்டுகளை பாதிக்கும் ருமைட்டைட் ஆத்தரைட்டிஸ், தோல்பாதிப்பு, சிறுநீரகம், மூளை, இதயபாதிப்புகளை கொண்டுவரும் சிஸ்டமிக் லுபஸ் எரித்மேடோசஸ் (Systemic Lupus Erythematosus)) என பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் அந்த பாதிப்பை உடனடியாக சரி செய்ய ஸ்டீராய்டு மருந்துகள் (மெல்ல மெல்ல உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் மயக்க மருந்துகள்) கொடுக்கப்பட்டிருக்கு.

ஸ்டீராய்டு கொடுக்கும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். அப்படி, கூடும்போது அதுக்கேற்றாற்போல இன்சுலின் அளவையும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மாத்திரைகளின் அளவையும் கூட்டவேண்டும். அதனால், மேடத்திடம் இதுகுறித்து சொன்னேன். "எஸ்… வில் டூ தட்'ன்னு கேஷுவலா சொன்னாங்க. அதுக்கப்புறம், உடம்பு இம்ப்ரூவ்மெண்ட் ஆக ஆரம்பிச்சது. காலையில 10 மணிக்கு இல்லைன்னா மாலை 5 மணிக்கு கார்டனிலிருந்து கார் வரும். ஆனா, திடீர்ன்னு கார் வரல.  நானே போன் பண்ணிக்கேட்டாலும் "கூப்பிடுறோம் கூப்பிடுறோம்'னுதான் பதில் வரும்.  மேடத்தோட பி.ஏ. பூங்குன்றனுக்கு போன் பண்ணினாலும் அதே பதில்தான்.

அப்புறம், கொஞ்சநாள் கழிச்சி டிரைவர்கிட்ட கேட்டப்போ, "நீங்க அமெரிக்கா போய்ட்டதா சொன்னாங்களே'ன்னார். 

"நான், எங்கய்யா அமெரிக்கா போனேன்'னு புலம்பினேன். அதுக்கப்புறம், இன்னொரு டிரைவர்கிட்ட கேட்டேன். அப்போதான்  சொன்னாரு "சின்னம்மாகிட்டயிருந்து உத்தரவு வரலை'ன்னு. நல்லா, ட்ரீட்மெண்ட் பண்ணி  குணமாகிக்கிட்டிருக்குற நேரத்துல இப்படி தடுக்குறாங்களே நாம என்ன பண்ணமுடியும்னு விட்டுட்டேன். ஆனா பாருங்க, மேடம் அப்பல்லோவில் அட்மிட் ஆகும்போது ஸ்டீராய்டு கொடுத்ததால் இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு மீறி அதிகமா இருந்தது. இதுக்குக்காரணம், அவங்களுக்கு வந்த நோய்க்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்காததுதான்''’’என்கிறார் அதிர வைக்கும் விதமாக.

இதுகுறித்து, நாம் மேலும் விசாரித்தபோது, “""கார்டனிலிருந்து விரட்டப்பட்டது டாக்டர் சங்கர் மட்டுமில்ல. ஜெயலலிதாவுக்கு  ஸ்கின்  ஸ்பெஷலிஸ்டாக  இருந்தவர்  டாக்டர் முரளிதர ராஜகோபால்,  ஜெனரல் ஃபிஸிஸியனாக  இருந்தவர்  டாக்டர் ஷர்னாப் (இறந்துவிட்டார்),  சர்க்கரைவியாதிக்கு  பிரபல டாக்டர் சேஷய்யா,  அவரது மருமகன் டாக்டர் வி.பாலாஜி,  மகள் மாதுரி பாலாஜி, முன்னாள்  துணைவேந்தரும், தற்போதைய ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சர்க்கரைநோய் சிகிச்சை பிரிவின் தலைவரும், அப்பல்லோ  மருத்துவமனையின் கன்சல்ட்டுமான டாக்டர் சாந்தாராம், கல்யாணி  மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பிரேமா என பல்வேறு மருத்துவ நிபுணர்கள்  போயஸ்கார்டனுக்கே  சென்று சிகிச்சை அளித்துவந்தார்கள்

அப்போது, அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்ன உணவு கொடுக்கப்படுகிறது  என்று  எழுதி  ஜெயலலிதாவிடம்  விளக்கி  கையெழுத்து வாங்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், கார்டனிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட சசிகலா மீண்டும்  வந்தபிறகு… ஒவ்வொரு மருத்துவராக கார்டனிலிருந்து விரட்டப்பட்டு கடைசியாக ஜெயலலிதாவின் ஏ டூ இசட் மருத்துவரானார் சசிகலாவின் உறவினரான (சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர்) டாக்டர் சிவக்குமார். அதையும் மீறி வேறு  மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தால் அதன் முழு விவரங்களும் டாக்டர் சிவக்குமாரின் பார்வைக்கு சென்றுவிடும். 

மேலும், டாக்டர் சிவக்குமாரின் மகன் டாக்டர் கார்த்தியும் சிகிச்சை அளித்திருக்கிறார். இவர்களை எல்லாம் ஆணையம் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.  இதையெல்லாம்விட மிக முக்கியமானது கடந்த 20 வருடங்களாக ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் ஆகும் வரை ஷுகர் டெஸ்ட்,  ப்ளட் டெஸ்ட்டுக்காக இரத்த மாதிரியை எடுத்துச்செல்பவர் அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள (Phlebotomist) ஜோசப்.

அவர், கொடுக்கும்  ரிப்போர்ட்டும்கூட  டாக்டர் சிவக்குமாரிடம்தான் செல்லும். யாராவது, ஒரு டாக்டர் எழுதிக்கொடுத்தால் மட்டுமே ப்ளட் சாம்பிள் எடுக்கமுடியும். அப்படியிருக்க, ஜெ.வுக்கு ப்ளட் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. யார் எழுதிக்கொடுத்து ப்ளட் சாம்பிள் எடுத்தார்? 

எம்.சி.ஹெச் (பிளாஸ்டிக் அண்ட் ரீ-கன்ஸ்ட்ரக்டிவ்) சர்ஜரி படித்த குடும்ப மருத்துவர் டாக்டர் எப்படி எல்லாவற்றுக்கும் ப்ளட் சாம்பிள் எடுக்கவைத்தார்? அவர், கொடுக்கவில்லை என்றால் எந்த டாக்டர் கொடுத்த பரிந்துரைச்சீட்டின் அடிப்படையில் ப்ளட் ஸாம்பிள் எடுத்தீர்கள் என்று ஜோசப்பை ஆணையம் விசாரித்தாலே பல உண்மைகள் வெளிவரும். 

20 வருடங்களுக்கு முன் கார்டனுக்குள் நுழைந்த ஜோசப், பூங்குன்றனையும் கார்டனில் உள்ளவர்களையும் காக்கா பிடித்துக்கொண்டு  தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கிவிட்டவர். இவரை, விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்''’ என்கிறார்கள்.

புதைக்கப்பட்ட ஜெ.வின் உடலை தோண்ட முடியாது. இவர்களிடம் உண்மையைத் தோண்டித் துருவினாலே மர்மங்கள் உடையும்.-மனோசௌந்தர்

கருத்துகள் இல்லை: