வெள்ளி, 27 அக்டோபர், 2017

வங்கிகள் முதியோர் உதவித் தொகையில் கொள்ளை ...குறைந்த பட்ச இருப்பு திருட்டு!

முதியோர் உதவித் தொகையில் பிடித்தம் கூடாது!மின்னம்பலம் : வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புக்காக முதியோர் உதவித் தொகையிலிருந்து பிடித்தம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு சார்பில் முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் எனப் பல்வேறு பிரிவினருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. வங்கிகளில் செலுத்தும் அந்தத் தொகையிலும் குறைந்தபட்ச இருப்பு எனக் கூறி வங்கிகள் பிடித்தம் செய்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நெல்லையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகை பாரத வங்கியில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தும் தொகையில் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகை இல்லை என கூறி அபராதமாக 350 ரூபாய் பிடித்தம் செய்வது போக மீதம் 650 ரூபாய் மட்டுமே மூதாட்டியைச் சென்றடைகிறது. அரசு கொடுக்கும் 1000 ரூபாயை எதிர்பார்த்து வாழ்க்கையை நடத்தும் முதியோர் உதவித் தொகையைப் பிடித்தம் செய்வது ஏற்கத்தக்கதல்ல” என்று மனுவில் சுட்டிக்காட்டி, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 27) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நீதிபதி நிஷாபானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் மற்றும் கணவரால் கை விடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் குறைந்தபட்ச இருப்புக்காகப் பிடித்தம் செய்யத் தேசிய வங்கிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்திய ரிசர்வ் வங்கி 3 வாரத்திற்குள் இது குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: