திங்கள், 23 அக்டோபர், 2017

யார் அந்த 8 அமைச்சர்கள்? தினகரனை சந்திப்பவர்கள்?

டிஜிட்டல் திண்ணை: யார் அந்த 8 அமைச்சர்கள்?
மின்னம்பலம் :மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையில் இருக்கும் மோதல் பற்றி சனிக்கிழமை அன்று டிஜிட்டல் திண்ணையில் விரிவாகச் சொல்லியிருந்தேன். அதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்துள்ளன. ‘இரு அணிகளுக்கு இடையில் பிரச்சினையே இல்லை என நான் சொல்ல மாட்டேன். இருக்கும் பிரச்சினைகள் சீக்கிரமே சரியாகிவிடும்’ என்று டெல்லியில் பேசினார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. துணை முதல்வர் பன்னீரின் தீவிர ஆதரவாளர் இவர். பன்னீருக்கும் பழனிசாமிக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முனுசாமி எங்கேயும் மறுக்கவே இல்லை. இதெல்லாம் இருவருக்கும் இடையிலான விரிசலை உறுதிப்படுத்தியது.

‘பன்னீர் துறை சம்பந்தப்பட்ட ஃபைல் ஒன்று அவரிடமிருந்து அனுப்பப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதாம். ஆனால், இன்னும் மூவ் ஆகாமல் இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை எந்த ஃபைலும் இரண்டு நாட்களுக்கு மேல் தேங்கக் கூடாது என்பதை ஸ்ட்ரிக்ட் ஆகவே கடைபிடித்துவந்தார். எடப்பாடியும் பதவியேற்று ஒரு மாதத்துக்குப் பிறகு, ‘அம்மா இருந்தபோது எப்படி ரெண்டு நாளில் ஃபைல்கள் மூவ் ஆகுமோ அதேபோல ஆகணும்’ என்று அதிகாரிகளுக்கு உத்தவிட்டிருந்தார். மற்ற துறையின் ஃபைல்கள் மூவ் ஆனபடியேதான் இருக்கின்றன. பன்னீர் துறையில் மட்டும் ஃபைல்கள் தேங்க ஆரம்பித்துள்ளன. இது சம்பந்தமாக அவர் அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார். ‘நாங்க அனுப்பிட்டோம் சார்... சி.எம். ஆபீஸ்ல இருக்கு..’ என பதில் வந்திருக்கிறது.
ஆனால், இது சம்பந்தமாக அவர் முதல்வரிடம் எதுவும் கேட்கவே இல்லையாம். தனக்கு நெருக்கமான வர்களிடம் இது சம்பந்தமாகப் பேசியிருக்கிறார். ‘என்னை இன்னும் எவ்வளவு அசிங்கப்படுத்தணும்னு அவர் திட்டமிட்டிருக்காருன்னு தெரியலை. எவ்வளவு நாளைக்குத்தான் இதெல்லாம் பொறுத்துட்டுப் போக முடியும்? அவருக்கு முன்னாடியே நான் முதல்வராக இருந்தவன். நான் அனுப்புற ஃபைல்ல அப்படி என்ன தப்பை இவரு கண்டுபிடிச்சிட்டாரு? மேல சொல்லிட்டுதான் வந்தேன். அவங்களும் பேசுறதா சொன்னாங்க. ஆனால், என்ன பேசியும் இவரோட நடவடிக்கை மாறலையே...’ என வருத்தத்துடன் சொன்னாராம் பன்னீர்.
ஆக, பழனிசாமி ,பன்னீர் விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதைத்தான் இரு தரப்பிலுமிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது ஃபேஸ்புக். “எடப்பாடி அணியில் இருக்கும் சிலர் ரகசியமாக திவாகரனை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அமைச்சர்கள் சிலர் தங்கள் உதவியாளர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘அண்ணணுக்கு நேரில் வந்து உங்களைப் பார்க்கணும்னு ஆசைதான். எல்லோரையும் போலீஸ் கண்காணிச்சிட்டு இருக்காங்க. பேசலாம்னு பார்த்தால், போனை சென்ட்ரல் கவர்மெண்ட் டேப் பண்ணிட்டு இருக்காங்க. அதனாலதான் உங்களோடு பேச போனும் செய்ய முடியலை. அண்ணன் எப்பவும் உங்களோடுதான் இருப்பேன்னு சொல்லிட்டு வரச் சொன்னாங்க. நேரமும் காலமும் கூடிய சீக்கிரம் கூடிவரும். அப்போ அண்ணன் வந்துடுவாங்க. நீங்க எதுவும் தப்பா நினைக்க வேண்டாம். அதைச் சொல்லிட்டு வருவதற்குத்தான் என்னை அனுப்பி வெச்சாங்க...’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்படியாக 8 அமைச்சர்களின் உதவியாளர்கள் இதுவரை திவாகரனை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதில் மூன்று பேர் தினகரனையும் சந்தித்தார்களாம். இந்த 8 அமைச்சர்கள்தான் சசிகலா பரோலில் வந்தபோது அவரோடு பேசியவர்கள். வெவ்வேறு எண்களிலிருந்து அந்தச் சமயத்தில் சசிகலாவுடன் பேசிய அமைச்சர்கள்தான் இப்போது திவாகரனையும் சந்தித்திருக்கிறார்கள்.
அமைச்சர்களின் உதவியாளர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் திவாகரனை சந்தித்த தகவல் எடப்பாடிக்கும் போயிருக்கிறது. யாரெல்லாம் திவாகரனை சந்தித்தார்கள் என்ற லிஸ்டை வாங்கிப் பார்த்த எடப்பாடி, ‘இவங்க மேல கூடுதல் கவனம் செலுத்துங்க..’ என உத்தரவிட்டுள்ளார்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: