புதன், 25 அக்டோபர், 2017

ஹர்திக் படேலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் ... குஜராத் தேர்தல் பாஜக நீதிமன்றம் ....


தினத்தந்தி :ஆமதாபாத், 2016-ம் ஆண்டு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹர்திக் படேல் மற்றும் பிற படேல் தலைவர்களுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ரிஷிகேஷ் படேல் தாக்கப்பட்ட் விவகாரம் தொடர்பாக ஹர்திக் படேல், லால்ஜி படேல் மற்றும் பிற படேல் தலைவர்களுக்கு எதிராக விசாநகர் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உள்ளது. விசாநகரில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ. ரிஷிகேஷ் படேல் கார் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. குஜராத்தில் படேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்திய போது விசாநகர் முக்கிய இடமாக காணப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஜூலையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற போது விசாநகரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் அலுவலகம் தாக்கப்பட்டது.


குஜராத்தில் படேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி’ (பாஸ்) என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல் தலைமையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த அமைப்பினரின் ஆதரவை பெற பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டியது. காங்கிரஸ் நேரடியாகவே அழைப்பு விடுத்தது.

இதற்கிடையே பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

குஜராத் மாநிலம் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆமாதாபாத்தில் நேற்று ஹர்திக் படேலை ஓட்டலில் சந்தித்ததாக உள்ளூர் மீடியாக்களில் செய்தி வெளியாகியது. இதுதொடர்பான வீடியோவை போலீஸ் வெளியிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது. எங்களை கண்காணிக்க நாங்கள் ஒன்றும் கிரிமினல்கள் கிடையாது எனவும் காங்கிரஸ் காட்டமாக விமர்சனம் செய்தது. ஹர்திக் படேல் ஆதரவு காங்கிரஸ் பக்கம் சாய்கிறது. மிகப்பெரிய திருடன் பா.ஜனதாவை தோற்கடிக்க சிறிய திருடன் காங்கிரசை நாங்கள் ஆதரிப்போம் என ஹர்திக் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது. 

இப்போது ஹர்திக் படேலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: